தீபாவளியை முன்னிட்டு மேட்டல் நிறுவனம் தனது முதல் தீபாவளி ‘பார்பி’ பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பொம்மையைப் புகழ்பெற்ற இந்திய ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரே வடிவமைத்துள்ளார்.
“உலகளாவிய தளத்தில் இந்திய வடிவத்தைப் பிரதிநிதிக்கும் இந்த வாய்ப்புக்காகப் பெருமைப்படுகிறேன்,” என்று தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அனிதா.
தீபாவளி ‘பார்பி’ பொம்மை ‘சோளி’ (ரவிக்கை), ‘லெஹங்கா’ பாவாடை போன்ற பாரம்பரிய இந்திய ஆடைகளை அணிந்துள்ளது. அதில் டேலியா, மல்லிகை, தாமரை போன்ற மலர்கள் வடிவிலான அலங்காரங்களைக் காணலாம். பொம்மையின் பளபளக்கும் காதணிகளும் தங்க வளையல்களும் தீபாவளியின் ‘ஒளிரும் விளக்குகளைப்’ பிரதிபலிக்கின்றன.
அக்டோபர் 3ஆம் தேதி மேட்டலின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்த தீபாவளி ‘பார்பி’ பொம்மை தற்போது விற்றுத்தீர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 50 தீபாவளி ‘பார்பி’ பொம்மைகள் மட்டுமே சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படும் என்றும் ஒவ்வொரு பொம்மையின் விலையும் $62ஆக இருக்கும் என்றும் மேட்டல் சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்தது.
தீபாவளி ‘பார்பி’ பொம்மைகள் அக்டோபர் மாத இறுதி முதல் நவம்பர் மாதத் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

