நீர்ப்பந்து விளையாட்டில் நற்பெயர் ஈட்டிவரும் நங்கை: மருத்துவர் மௌனிஷா

‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கான சிறப்பு நேர்காணல்

நீர்ப்பந்து விளையாட்டில் நற்பெயர் ஈட்டிவரும் நங்கை: மருத்துவர் மௌனிஷா

4 mins read
4d60fd3d-1178-4b90-b177-ecb8c26bdedd
நமது இலக்குகள், முன்னுரிமைகள் குறித்த தெளிவு இருந்தால் நேரத்தைத் திட்டமிடுவது எளிது என்கிறார் தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்குச் சிறப்பு நேர்காணல் அளித்த டாக்டர் மௌனிஷா. நீர்ப்பந்து விளையாட்டாளர் டாக்டர் மௌனிஷா (இடது), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன். - படம்: பே. கார்த்திகேயன்

வாழ்க்கைச் சூழல் பரபரப்பான போட்டிக்களமாகிவிட்ட இன்றைய நிலையில், அனைவருமே முன்னேற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், மனஉளைச்சலைப் போக்கும் அதேநேரத்தில் உடலையும் உறுதியாக்கும் விளையாட்டு, மனித வாழ்வின் முக்கிய அங்கம் என்கிறார் செல்வி மௌனிஷா தேவி மணிவண்ணன்.

சிங்கப்பூர் தேசிய மகளிர் நீர்ப்பந்து அணியின் கோல்காப்பாளரான இவர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் பெற்று, தற்போது பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டுள்ளார்.

தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடரின் ஒன்பதாம் நிகழ்ச்சியில் பேசிய மௌனிஷா, விளையாட்டு என்பது அதில் ஈடுபடும் ஒருவரை முழுமையாக உள்ளிழுத்து மாற்றங்களை ஏற்படுத்த வல்லது, மனநிறைவைத் தரக்கூடியது என்றார்.

ஆய கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களைப் பற்றிய தொடரில் விளையாட்டாளரா? விளையாட்டு ஒரு கலையா? என்ற கேள்விகள் சிலருக்கு எழக்கூடும்.

விளையாட்டு நிச்சயமாக ஒரு கலைதான். எந்த ஒரு கலை வடிவத்திலும் தேர்ச்சி பெறத் தேவைப்படும் தீவிரமான பயிற்சியும் ஆழ்ந்த ஈடுபாடும் விளையாட்டுக்கும் தேவை. கலைப் படைப்புகளைப் போன்றே விளையாட்டும் காண்போரிடையே பல்வேறு உணர்வுகளைத் தூண்டுகிறது. நுணுக்கம், படைப்பாற்றல், காண்போரிடம் ரசனையை உருவாக்குதல் போன்றவற்றின் அடைப்படையில் விளையாட்டு ஓர் உயரிய கலை என்றால் அது மிகையில்லை.

உடலைப் பேணவும் நுண்ணறிவை வளர்க்கவும் திறனை வெளிப்படுத்தவும் வகைசெய்யும் விளையாட்டை ஆய கலைகளில் ஒன்றாகவே நம் முன்னோர்கள் வகைப்படுத்தினர். பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் விளையாட்டுகளைத் தங்கள் வாழ்வின் அங்கமாகக் கருதிவந்ததை நம் இலக்கியங்கள் காட்டுகின்றன.

சிங்கப்பூர் தேசிய மகளிர் நீர்ப்பந்து அணியின் கோல்காப்பாளர் என்ற தகுதியைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை மௌனிஷாவைச் சாரும்.

தொடக்கக் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் இந்த விளையாட்டு இவருக்கு அறிமுகமானது.

கல்லூரியின் இணைப்பாட நடவடிக்கைக்காக நீர்ப்பந்து அணியில் சேர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் கூடைப்பந்தில் விளையாடிய அனுபவமும் துணிச்சலும் அதற்குக் கைகொடுத்ததாகக் குறிப்பிட்டார். நீச்சலில் சிறந்த தேர்ச்சி பெற்றதாகக் கூறமுடியாது என்றாலும் கோல்காப்பாளராகச் செயல்படும் திறன் தனக்கு இருந்ததைப் பயிற்றுவிப்பாளர் அடையாளம் கண்டதாகச் சொன்னார்.

ரக்பி, கூடைப்பந்து, காற்பந்து போன்ற விளையாட்டுகளின் கலவை என்று நீர்ப்பந்து விளையாட்டைக் குறிப்பிடலாம் என்றும் மிகக் கடினமான விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்றும் மௌனிஷா கூறினார்.

ஒலிம்பிக் நீச்சல் குளத்தைப்போல் 3 மீட்டர் ஆழமான குளத்தில், விளையாட்டாளர்கள் நீச்சல் குளத்தின் தரையைத் தொடாதவண்ணம் உடலை நீரின் மேற்பரப்பிலேயே வைத்திருக்க வேண்டும். அணியின் இதர விளையாட்டாளர்கள் அங்கும் இங்கும் நீந்திக்கொண்டே பந்தை அடிக்க முற்படும் வேளையில் கோல்காப்பாளர் கோல் கம்பத்துக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்பன போன்ற வேறுபாட்டை அவர் விளக்கினார். பெனால்டி வாய்ப்பின்போது கோல்காப்பாளரின் பொறுப்பு கூடும் என்பதைக் குறிப்பிட்டார்.

மருத்துவக் கல்வி மனித உடல் குறித்த புரிதலைத் தந்ததால் தனக்கோ தனது குழுவினர்க்கோ இந்த விளையாட்டின்போது ஏற்படக்கூடிய காயம், பாதிப்புகளுக்குத் தீர்வுகாண்பது எளிதாக இருந்ததாகவும் அது குழுவிற்கு உதவியாக அமைந்ததாகவும் மௌனிஷா கூறினார்.

நீர்ப்பந்து விளையாட்டில் சிறப்பாகச் செயல்படுவதற்கு அடிப்படையான கட்டொழுங்கும் கவனக் குவிப்பும் மருத்துவக் கல்விக்கும் உதவியது. பயிற்சிக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழல். ஆனால் விளையாட்டுக் குழுவினரும் பயிற்சியாளரும் புரிதலுடன் உதவுவர் என்பதைக் குறிப்பிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்பத்தினரின் ஆதரவு பேருந்துதல் அளித்ததை நினைவுகூர்ந்தார். தாய், தந்தை, சகோதரி எனக் குடும்பத்தினருடன் தன்னால் அதிக நேரம் செலவிட முடியாதபோதும் அவர்களின் அன்பும் ஆதரவும் தூண்களாய்த் துணைநின்றதாகச் சொன்னார்.

மருத்துவக் கல்வி, நீர்ப்பந்து விளையாட்டு தவிர நடனம், பாட்டு, வீணை, சமையல், பின்னல் வேலைப்பாடு, கோலம் என விரிந்துகொண்டே போகின்றது இவரது திறன் பட்டியல். இத்தனைக்கும் நேரத்தைத் திட்டமிடுவது கடினமா என்ற கேள்விக்கு, நமது இலக்குகள், முன்னுரிமைகள் குறித்த தெளிவு இருந்தால் திட்டமிடல் எளிதாகக் கைவரும் என்று பதிலளித்தார்.

வீட்டு நிர்வாகம், சமூகச் சேவை, பிள்ளைகளைக் கவனித்தல் எனச் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவரும் தாயார் சாரதா தேவிதான் தனக்கு முன்மாதிரி என்று குறிப்பிட்டார் மௌனிஷா. சிறு வயதிலிருந்தே பெற்றோர் தந்த வழிகாட்டுதல் இப்போது சரியான முடிவுகளை எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது என்கிறார் இவர்.

இக்கால இளையர்க்கு இருக்கும் ‘எதையோ தவறவிட்டு விடுவோமோ’ (Fear Of Missing Out) எனும் பதற்ற நிலை, இலக்கு குறித்த புரிதல் இல்லாமையால் ஏற்படுவதாகக் கருதும் இவர், புரிந்து தெளிவு கிட்டிவிட்டால் நேர நிர்வாகம் எளிது என்றார்.

மேரிமவுண்ட் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழு, நற்பணி இளையர் பிரிவு ஆகியவற்றின் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்களித்து வரும் மௌனிஷா, துடிப்புடன் செயல்பட விரும்பும் எந்த வயதினர்க்கும் மிகச் சிறந்த முன்மாதிரி இளையர்.

சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகள் நான்கையும் பயின்றுள்ளார். மலாய் மொழியில் ஓரளவுக்குப் பேசும் திறன் பெற்றுள்ள இவர், மற்ற மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர்.

வாழ்க்கைத்தொழில் சார்ந்த பொறுப்புகளுக்கு இடையிலும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூருக்குப் பதக்கம் பெற்றுத்தரும் முனைப்புடன் உள்ளார் மௌனிஷா.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்