குற்றங்களை மையமாகக் கொண்ட புத்தம் புதிய தமிழ் நாடகத் தொடர்

குற்றங்களை மையமாகக் கொண்ட புத்தம் புதிய தமிழ் நாடகத் தொடர்

2 mins read
6b886b9f-3ea3-4c5d-b260-8bd556c0bfaf
நான்கு நாடுகளில் படம்பிடிக்கப்பட்ட முதல் மீடியாகார்ப் நாடகம் ‘மெய்’. - படம்: மீடியாகார்ப்
multi-img1 of 2

குற்றத்தை மையமாகக் கொண்ட புத்தம் புதிய தமிழ் நாடகத் தொடரான ‘மெய்’, ஜூன் 12ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும்.

மொத்தம் 26 பாகங்களைக் கொண்டுள்ள இந்த நாடகம் மலேசியா, சிங்கப்பூர், அஸர்பைஜான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள முதல் மீடியாகார்ப் நாடகமாகும். 

ஈஸ்வரி குணசேகர், ஷாமினி குணசேகர், சரவணன் அய்யாவு, சௌந்தராஜன் ஜீவா, ஜேம்ஸ் குமார், ஜாபூ டீன் பிஹாருக் உள்ளிட்ட பலரும் இத்தொடரில் நடித்துள்ளனர்.

இந்நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஈஸ்வரி, “இந்த நாடகத்தின் படப்பிடிப்பு எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. நான் மூன்று நாடுகளுக்குச் சென்று அங்கு படம்பிடிக்க வேண்டியிருந்தது. 

“எனது கதாபாத்திரம், குடும்பம் சார்ந்த ஒன்று. குடும்பத்திற்காக என்னென்ன செய்வார்கள், எந்த அளவிற்குச் செல்வார்கள் என்று இந்த நாடகம் காட்டும்,’’ என்றார். 

தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் சௌந்தராஜன் ஜீவா, “அஸர்பைஜானுக்குச் சென்று படம்பிடித்தபோது ஏற்பட்ட புதிய அனுபவத்தை நான் ரசித்தேன்.

“இந்த நாடகத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கும். அதை ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார். 

நிஜ வாழ்க்கையில் சகோதரிகளான ஈஸ்வரியும் ஷாமினியும் முதல்முறையாக திரையில் சகோதரிகளாக நடிக்கின்றனர். 

“எனக்கு இந்த அனுபவத்தில் மிக முக்கியமானது, என் தங்கையுடன் சேர்ந்து நடித்ததே. முன்பு ஒரே நாடகத்தில் நடித்து உள்ளோம். 

“ஆனால் ஒரே காட்சியில் நடித்ததில்லை. ஆனால், இந்த நாடகத்தில் தீவிரமான காட்சிகள் இடம்பெறும். நீயா நானா என்ற தீவிரம் இருக்கும்,’’ என்றார் ஷாமினி. 

இந்நாடகத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான ஷா அலி, “ இந்த நாடகத்தைத் தயாரிப்பது சற்று சிரமமாக இருந்தது. ஏனென்றால், நான்கு நாடுகளில் படம்பிடித்துளோம். அங்கு படம்பிடிக்கும் முறையும் இடமும் வானிலையும் வித்தியாசமாக இருந்தன,” என்றார்.   

வசந்தம் தொலைக்காட்சி, மீவாட்ச், மீடியாகார்ப் நாடகம் யூடியூப் தளங்களில் இந்நாடகத்தை காணலாம்.
வசந்தம் தொலைக்காட்சி, மீவாட்ச், மீடியாகார்ப் நாடகம் யூடியூப் தளங்களில் இந்நாடகத்தை காணலாம். - படம்: மீடியாகார்ப்

வசந்தம் ஒளிவழியில் ஜூன் 12ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை இந்த நாடகத்தைக் காணலாம்.

இந்நாடகத்தை மீவாட்ச் தளத்திலும் காணலாம். ஜூன் 12ஆம் தேதி, அரை மணி நேரம் கொண்ட இரண்டு தொடர்கள் வெளியீடு காணும். ஜூன் 16ஆம் தேதியிலிருந்து, அரை மணி நேரம் கொண்ட நான்கு தொடர்கள் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் ஒளிப்பரப்பப்படும். 

மீடியாகார்ப் நாடகம் யூடியூப் தளத்திலும் ஜூன் 12ஆம் தேதி, ஒரு மணி நேரக் காணொளி வெளியிடப்படும். ஜூன் 16ஆம் தேதியிலிருந்து, ஒரு மணி நேரம் கொண்ட இரண்டு காணொளிகள் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெளிவரும். 

குறிப்புச் சொற்கள்