நீரிழிவு நோயாளிகள் 100 ஆண்டுகள் வாழ உதவும் மருத்துவக் குறிப்புகள்

நீரிழிவு நோயாளிகள் 100 ஆண்டுகள் வாழ உதவும் மருத்துவக் குறிப்புகள்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Nov 2026 - 6:11 am

2 mins read

இந்தியர்களிடையே மிகை எடை இல்லாதவர்களுக்கும் நீரிழிவு நோய் முன்கூட்டியே ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், நீரிழிவுக்கு மரபியல் 20-30 விழுக்காடு மட்டுமே காரணம் என்றும் மீதமுள்ள 70-80 விழுக்காடு வாழ்க்கைமுறையைச் சார்ந்தது என்றும் கூறுகிறார் ‘மெட்ராஸ் நீரிழிவு ஆய்வு’ அறநிறுவனத் தலைவர் டாக்டர் வி. மோகன்.

முறையான உணவு, உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயைத் தள்ளிப்போடுவது அல்லது தவிர்ப்பது சாத்தியமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், உணவுத்தட்டில் பாதி கீரை, காய்கறிகளும் கால் பங்குப் புரதமும் இருக்க வேண்டும் என்றார். பால், பயறு வகைகள், சோயா ஆகியவற்றிலிருந்து சைவ உணவுக்காரர்கள் புரதச்சத்தைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

வாரத்திற்கு 300 நிமிட உடற்பயிற்சி அவசியம் என உலகச் சுகாதார நிறுவனம் கூறுவதைச் சுட்டிய டாக்டர் மோகன், அன்றாடம் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதும் உட்கொள்ளும் மாவுச்சத்தில் 10 விழுக்காட்டைத் தாவரப் புரதமாக மாற்றுவதும் 50 விழுக்காடு புதிய நீரிழிவு பாதிப்புகளைத் தடுக்கும் என்றார். வெள்ளை அரிசி, மாம்பழம் போன்றவற்றை அளவோடு உண்ண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோய் தணிவது சாத்தியமே என்றாலும், அது மிகச் சிறிய விழுக்காட்டினருக்கே சாத்தியமாகும்; அதற்குத் தனித்துவமான ஆறு அம்சங்கள் தேவைப்படுகின்றன என்றார் டாக்டர் மோகன்.

முதலாவதாக, ஏ1சி எனப்படும் சர்க்கரை அளவு இயல்புநிலைக்கு அருகில் இருக்கவேண்டும். அதாவது 12 என்பதைவிட 8 முதல் 8.5 வரை இருப்பது சிறந்தது.

இரண்டாவதாக, உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

மூன்றாவதாக, சி-பெப்டைடு எனப்படும் இன்சுலின் இருப்பு நன்றாக இருக்க வேண்டும்.

நான்காவதாக, நோய் பாதித்த காலம் ஐந்து முதல் எட்டு ஆண்டுகளுக்குள் குறுகியதாக இருக்கவேண்டும்.

ஐந்தாவதாக, தொடர்ந்து கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

ஆறாவதாக, தொடர் மருத்துவக் கண்காணிப்பும் மிக முக்கியம்.

இம்முறைகளைப் பின்பற்றுவோரில் 5 முதல் 10 விழுக்காட்டினருக்கு நோய் தற்காலிகமாகத் தணிகிறது. ஆனால், அவர்களில் 90 விழுக்காட்டினர் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றனர். தாங்கள் முழுமையாகக் குணமடைந்துவிட்டோம் என அவர்கள் நினைப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும் என்றார் டாக்டர் மோகன்.

அதேவேளையில், 1 முதல் 2 விழுக்காடு அளவிலான மிகச் சிறிய பிரிவினரிடையே நோய் தொடர்ந்து தணிந்த நிலையிலேயே உள்ளது. மன அழுத்தம் அல்லது கொவிட்-19 தொற்றால் நீரிழிவு ஏற்பட்டவர்களும், விதிகளை மிகக் கடுமையாகப் பின்பற்றுபவர்களும் இவர்களில் அடங்குவர்.

இருப்பினும், நோய் முழுமையாகத் தணிவது குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. முறையான உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே நீரிழிவு நோயாளிகள் 100 வயது வரை நலமுடன் வாழ முடியும் என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் மோகன்.

குறிப்புச் சொற்கள்