சிங்கப்பூர் கண்டுள்ள வளர்ச்சிப் பாதையை ஜப்பானியர் ஆட்சி காலத்திலிருந்தே கண்கூடாகக் கண்டுள்ளார் 95 வயது ராமசாமி அழகம்மாள். இன்று சிங்கப்பூர் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்குக் காரணம் அன்றைய தலைவர்கள், குடிமக்கள் செய்த தியாகங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அன்று குடிமக்கள் பட்ட சிரமங்களை நேரில் அனுபவித்தவர்களால்தான் சிங்கப்பூரின் இன்றைய நிலையை முழுமையாகப் பாராட்ட முடியும். அத்தகைய ஒருவர் அழகம்மாள்.
இன்று சிங்கப்பூரில் இன நல்லிணக்கம் நிலவுகிறது. ஓர் இனத்தவர்மீது மற்றோர் இனத்தவர் வெறுப்பை வெளிப்படுத்தினால் நிகழக்கூடியது என்ன என்பதை திருவாட்டி அழகம்மாள் பார்த்துள்ளார்.
“ஜப்பானியர்கள் வெடிகுண்டு போடும்போது பலரும் தங்களை இந்தியர் எனக் காட்டத் தலைப்பாகைக் கட்டிக்கொள்வார்கள். ஏனெனில் ஜப்பானியர்களுக்கு சீனர்களைப் பிடிக்காது; அந்த இடத்தில்தான் அவர்கள் குண்டு போடுவார்கள். இந்தியர்களை அவர்கள் கொல்லமாட்டார்கள்,” என்றார் அழகம்மாள்.
சிங்கப்பூரில் தஞ்சம்
மலாயாவில், குவாலா சிலாங்கூரில் ஒரு தோட்டத்தில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த அழகம்மாள், 1937ல் ரப்பர் மரத்தை வெட்டும் வேலைக்கு அனுப்பப்பட்டார்.
அதன்பின் பள்ளியில் சேர்ந்து அவர் படித்துவந்தபோது ஜப்பானியர்கள் வந்தனர்.
“ஜப்பானியர்கள், சியாமுக்கு ரயில்பாதை அமைக்க இளையர்களைச் சேர்த்துக்கொண்டிருந்தனர். என் அண்ணனின் பெயரையும் அவர்கள் பதிவுசெய்துவிட்டார்கள். அதனால், நாங்கள் அஞ்சி, யாரிடமும் சொல்லாமல் சிங்கப்பூருக்குக் கிளம்பிவிட்டோம்,” என்றார் அழகம்மாள்.
1944ல், தன் 14வது வயதில் சிங்கப்பூருக்குக் குடும்பத்தோடு புறப்பட்டார் அழகம்மாள்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் வந்துசேர அழகம்மாள், அவருடைய அண்ணன், அம்மாவுக்கு மூன்று நாள்கள் ஆகிவிட்டன. சமையல் பொருள்கள், பாய் என ஆளுக்கொரு மூட்டையைத் தலையில் தூக்கிக்கொண்டு இரவில் கோலாலம்பூர், ஜோகூரில் தங்கி, புக்கிட் தீமாவிலுள்ள பழைய ரயில் நிலையத்தை அவர்கள் வந்தடைந்தார்கள். அங்கிருந்து மண்டாய் சாலைவழியாக காட்டுவழியே செம்பவாங்கிற்கு நடந்தே சென்றனர். ஜாலான் செம்பவாங் கெச்சில் பகுதியில் அவர்கள் தங்கினர்.
அதன்பின், ஜப்பானியர்களிடம் வேலைக்குச் சென்றார் அழகம்மாள். குளம் வெட்டும் பணியில் மண் அள்ளுவது, குளத்திலிருந்து நீரை எடுத்து, சுடு தண்ணீர் இடத்தில் ஊற்றிவைப்பது போன்ற வேலைகளை அவர் மற்ற சிறுவர்களுடன் செய்தார்.
கஷ்ட காலங்களில் சிங்கப்பூர்
“ஜப்பானியர் காலத்தில் உணவு குறைவாக இருந்தது. முன்பெல்லாம் ஒரு கிலோ அரிசி பத்து காசுக்குக் கிடைத்தது. ஜப்பானியர் காலத்தில் ஐந்து வெள்ளி கொடுத்தாலும் கிடைக்காது. அரிசி, பருப்பே இருக்காது.
“சொந்தமாக மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு போன்றவற்றை வளர்த்துதான் உண்டோம். மலாயா தோட்டத்தில் இருந்தபோதும், அம்மா ஒற்றை ஆளாக மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு, துவரம்பருப்பு போன்றவற்றையெல்லாம் நட்டு, அரை மைல் தூரம் தலையில் தூக்கிக்கொண்டு, எனக்குக் களைப்பானதும் என்னையும் தூக்கிக்கொண்டு நடப்பார்,” என நினைவுகூர்ந்தார் அழகம்மாள்.
குடும்பச் சூழலால் அழகம்மாளுக்கு 1945ல் திருமணமானது.
“திருமணமாகி சிங்கப்பூருக்கு வந்த என் அக்காதான் எங்களை சிங்கப்பூருக்கு வரச் சொன்னார். ஆனால், அவர் எங்களை அழைத்துச் செல்ல வராததால், நாங்கள் தெரிந்தவர் வீட்டிலேயே தங்கவேண்டியிருந்தது.
“அங்கு எங்களுக்குச் சாப்பாடு, வீடு கொடுத்தார்கள். ஆனால், நாங்கள் வேறு வீட்டிற்குச் செல்லவிருக்கிறோம் எனச் சொன்னபோது அத்தனை நாள்கள் தங்கியதற்குப் பணம் கொடுக்கவேண்டியிருந்தது. கொடுக்கப் பணம் இல்லாததால் அவர்களுடைய ஒரே மகனை நான் திருமணம் செய்தேன்,” என்றார் அழகம்மாள்.
அஞ்சி அஞ்சி வாழ்ந்த நாள்கள்
“நாங்கள் ஒருமுறை காட்டுவழியாக நடந்துவந்தபோது ஒரு முச்சந்தியில் ஜப்பானியர்கள் சீனர் தலையை வெட்டி கம்பில் குத்தி வைத்திருந்தனர்.
“நாங்கள் வழிதவறி நீ சூனில் ஒரு ராணுவ முகாமை வந்தடைந்தோம். அங்கிருந்த ஜப்பான்காரர்கள் கோபமாக எங்களிடம் சத்தம் போட்டார்கள். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கூட வந்தவர் மொழிபெயர்த்தார். “நாங்கள் பாதை தெரியாமல் இங்கு வந்துவிட்டோம்,” என அவர் ஜப்பான்காரரிடம் கூறியதும் ‘இனிமேல் இந்தப் பக்கம் வராதீர்கள்,’ எனக் கூறி எங்களை அனுப்பிவிட்டார்கள்,” என்றார் அழகம்மாள்.
சாலையில் நடக்கும்போது ஜப்பானியர்களுக்குத் தலைவணங்காவிட்டால் அடிப்பார்கள் என்றும் கூறினார் அழகம்மாள்.
சிங்கப்பூரின் வரலாற்றை எழுதிய ஜப்பானியர் காலம்
“ஜப்பானியர்களுக்குச் சோம்பேறித்தனம் பிடிக்காது. அன்றாடம் வேலைக்குச் செல்லவேண்டும். வெற்றிலை மென்றுகொண்டு எச்சில் துப்பினால் அடிதான் விழும்.
“ஆனால், நன்றாக வேலைசெய்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நாங்கள் குளம்வெட்டி சரிசமமாக்கியதும் எங்களை ஒருநாள் உட்காரவைத்தே சம்பளம் கொடுத்தனர் ஜப்பானியர்கள். ஆடு, கோழி எல்லாம் ஜப்பானியர்களிடம் கொடுத்தால் அவர்கள் துணிமணிகளும் கொடுப்பார்கள்,” என்றார் அழகம்மாள்.
ஜப்பானியர் காலத்தில் ஜப்பானிய நூல்களைப் படிக்கக் கற்றுக்கொண்டாலும், ஜப்பானியர்கள் வெளியேறியதும் பேச ஆளில்லாததால் மொழியை மறந்துவிட்டதாகக் கூறினார் அவர்.
1945ல், ஜப்பானியர்கள் சிங்கப்பூரிலிருந்து வெளியேறி, பிரிட்டிஷ்காரர்கள் மீண்டும் வந்ததும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதாக அவர் கூறினார்.
இருளிலிருந்து மீட்டு ஒளிவிளக்கு ஏற்றிய தலைவர்
“போர் முடிந்தும் கஷ்டம் நிலவியது. திரு லீ குவான் யூ வந்துதான் சிங்கப்பூரை நல்ல நாடாக உருவாக்கினார். இன்று சிங்கப்பூரில் எல்லா சலுகைகளும் உள்ளன,” என சிங்கப்பூர் கடந்துவந்த வெற்றிப் பாதையைப் பாராட்டினார் அழகம்மாள்.
அழகம்மாள், அவருடைய தாயார் போன்றோர் அன்று பட்ட துன்பங்களிலும் உழைப்பைக் கைவிடாமல் சிங்கப்பூரில் தொடர்ந்து இருந்து அடுத்த தலைமுறையை வழிநடத்தியதால்தான் இன்று சிங்கப்பூர் தன் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
அதனால், நாட்டின் தூண்களாக இருந்துள்ள முதியோரின் உழைப்பை இந்த தேசிய தினம் வெகுவாகப் பாராட்டுகிறது.
அழகம்மாள் தன் வயதான காலத்திலும் தன் அன்பான குடும்பத்தினருடன் வாழும் பாதுகாப்பான இடமாக சிங்கப்பூரைக் கருதுகிறார். மறுசுழற்சிமூலம் கைவினைப் பொருள்கள் உருவாக்குவதில் பெரும் நாட்டம் கொண்டுள்ள அவர், தன் பொழுதுபோக்கை ஊக்குவிக்கும் நாடாகவும் சிங்கப்பூரைக் காண்கிறார்.
சிங்கப்பூர்க் கொடி தொடர்ந்து பலநூறு ஆண்டுகள் உயரப் பறக்க வேண்டும் என்பதே இவருடைய ஆசை.