தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாதவிடாய் முடிவு மாதர்க்குப் புதுவாழ்வின் தொடக்கம்

2 mins read
b7b083e4-1b0c-4c78-b5f8-efce0d9cf7ac
சிங்கப்பூரில் பெண்களுக்குச் சராசரியாக 49 வயதில் மாதவிடாய் சுழற்சி முற்றுப்பெறுவதாக அறியப்படுகிறது. அதன் பிறகும் பல ஆண்டுகளுக்கு அறிகுறிகள் தொடரக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்.

உடலில் திடீர் வெப்பம், அதிக வியர்வை, அசௌகரியம் போன்ற அறிகுறிகளை எதிர்கொண்ட இல்லத்தரசி ரெத்தினம், 56, மாதவிடாய் சுழற்சி முடிவுறுவதை விரைவில் எதிர்பார்த்தார்.

உடல்சார் பாதிப்புகள் மட்டுமின்றி மனச்சோர்வையும் எரிச்சலையும் அவர் அனுபவித்தார்.

“மாதவிடாய் முடிவு என்னை மிகவும் பாதித்தது. இன்னும் நான் அதை அனுபவித்துவருவதுபோல் தோன்றுகிறது,” என்றார் திருவாட்டி ரெத்தினம்.

தான் அனுபவிக்கும் சிரமங்களை தன் மகளிடம் அவர் எடுத்துக்கூறினார்.

“என் மகள் எனக்கு முழு ஆதரவாக இருந்தாள். எனக்குள் ஏற்படும் மாற்றங்களை அவள் புரிந்துகொண்டு எனக்கு உறுதுணையாக நின்றாள்,” என்றார் அவர்.

2009ஆம் ஆண்டுமுதல் 2023ஆம் ஆண்டுவரை, மாதவிடாய் நின்ற அறிகுறிகளுடன் கே கே மகளிர், சிறார் மருத்துவமனையை நாடிய பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்தது. இருப்பினும், சிங்கப்பூரில் அதிகரித்துவரும் மூப்படையும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டால், அது ஒரு சிறிய விகிதந்தான்.

இளைய தலைமுறையினர் மாதவிடாய் நின்றுபோவதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படும் என்கிறார் திருவாட்டி ரெத்தினம்.

“அதற்கு பெரியவர்களாகிய நாம் எந்த ஒளிவுமறைவும் இன்றி மாதவிடாய் முடிவு, அதன் தொடர்பான சவால்கள் குறித்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்துகிறார்.

கேகே மருத்துவமனை மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வழங்கப்படும் சேவையை 2023ஆம் ஆண்டிலிருந்து பலதரப்பட்ட மாதவிடாய் நிறுத்த மையமாக விரிவுபடுத்தியது.

சிங்கப்பூரில் பெண்கள் சராசரியாக 49 வயதில் மாதவிடாய் சுழற்சி முற்றுப்பெறுவதை அனுபவிக்கிறார்கள். ஆனால், அதன் பிறகும் பல ஆண்டுகளுக்கு அறிகுறிகள் தொடரலாம் என்கிறார் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் மாதவிடாய் சுழற்சி மையத்தின் இணை இயக்குநர் ருக்‌ஷினி புவனேந்திரன்.

“மாதவிடாய் நின்றுபோவதால் வழக்கமான வாழ்க்கைமுறையில் ஏற்படும் இடையூறுகள் அவர்களின் அன்புக்குரியவர்களுக்குப் புரியாமல் போகலாம். இது அவர்களை தனிமைப்படுத்தும்,” என்று அவர் தெரிவித்தார்.

மாதவிடாய் முடிவு குறித்து தவறான கருத்துகள் உள்ளன என்றும் திருவாட்டி ருக்‌ஷினி சுட்டிக்காட்டினார்.

“மாதவிடாய் நின்றுபோதல் என்பது பெண்களின் வாழ்க்கையில் இயற்கையானது என்பதால் மருத்துவரைப் பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது தவறான கருத்து,” என்றும் அவர் சொன்னார்.

மேலும், மாதவிடாய் முடிவு ஒரு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை மட்டுமல்லாது அவருடைய முழு உடலையும் மனநலத்தையும் பாதிக்கிறது.

“மாதவிடாய் முடிவின்போது உடல்நல மாற்றங்கள் ஏற்படுவது மிகவும் இயல்பானது என்றாலும், அவற்றைச் சரிவர சமாளிக்க உதவி கிடைக்கும் என்ற விழிப்புணர்வு மிக அவசியம்,” என்று திருவாட்டி ருக்‌ஷினி வலியுறுத்தினார்.

மாதவிடாய் நின்றுபோவதால் பெண்கள் அனுபவிக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள பெண்கள் மட்டுமல்லாது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அதுசார்ந்த கல்வியை நாடுவது முக்கியம்.

அதன்வழி தங்களது குடும்பத்தில் மாதவிடாய் சுழற்சி முடிவுக்கு வரும் நிலையை எட்டும் பெண்களுக்கு சிறந்த ஆதரவு நல்க இயலும் என்கிறார் திருவாட்டி ருக்‌ஷினி.

குறிப்புச் சொற்கள்