பெண்களின் உடல்நலம் குறித்த தவறான நம்பிக்கைகள்

பெண்களின் உடல்நலம் குறித்த தவறான நம்பிக்கைகள்

3 mins read
12c6b011-b996-4870-be25-587a9e8837e4
பெண்கள் அவர்களுக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை நாடுவது சிறந்தது. - படம்: செயற்கை நுண்ணறிவு

பெண்களின் தனிப்பட்ட உடல்நலம் குறித்து மிகக் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பல விதங்களில் அது சரியாகப் புரிந்து கொள்ளப்படவுமில்லை.

‘பெண்கள் உடல்நலம்’ என்ற சொற்றொடரே பல நேரங்களில் மாதவிடாய், கர்ப்பகாலம் போன்றவற்றோடு தொடர்புபடுத்தியே பேசப்படுகிறது.

இதய நலம், நோய் எதிர்ப்பாற்றல், மகப்பேறு தொடர்பான ஆரோக்கியம் உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பில் தவறான நம்பிக்கைகள் உலவுகின்றன.

மிகக் குறைவான ஆய்வுகளே செய்யப்பட்டிருப்பதால், பெண்கள் பலருக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், இருபாலருக்கும் பொதுவாக ஏற்படக்கூடிய நோய்களின் அறிகுறிகளைக் கண்டறிவதில் சிரமம் நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, உறக்கத்தின்போது ஏற்படும் மூச்சுப் பிரச்சினை (Sleep apnea) போன்றவற்றைக் கூறலாம்.

ஆண்களையே அதிகம் பாதிக்கும் இதய நோய்கள் பெண்களைப் பெரிதும் பாதிப்பதில்லை என்றொரு கட்டுக்கதையும் நிலவுகிறது. ஆனால், அமெரிக்காவில் பெண்களின் உயிரிழப்புக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்பு.

பெண்களும் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை நிராகரிக்கின்றனர். ஆண்கள்தான் மாரடைப்பால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான புரிதலும், விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும், ஆண்களின் நோயெதிர்ப்பாற்றலும், பெண்களின் நோயெதிர்ப்பாற்றலும் சமம் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. கிருமித் தொற்று போன்றவற்றிற்கு எதிராகப் பெண்களின் நோயெதிர்ப்பாற்றல் கடுமையாக வேலை செய்கிறது.

இதனால் பெண்களின் உடலில் தொற்றுகள் விரைவாக அகற்றப்படுகின்றன. இது ஒருவகையில் நன்மை என்றாலும் இதனால் பாதிப்பும் உண்டு. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு, சொந்தத் திசுக்களையே எதிர்க்கும் நோயெதிர்ப்பாற்றல் சிக்கல் (auto immune disease) ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

உடல்நலம் சரியாக இருக்கும்போதும், கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும்போதும் பெண்களின் மாதவிடாய் சரியான தேதியில் ஏற்படாமல் இருந்தால் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

மாதவிடாய் அடிக்கடி சரியான தேதிக்கு வராமல் இருந்தால் அது தைராய்டு செயலிழப்பு, அடிமூளையில் கட்டி அல்லது சினைப்பை நீர்க்கட்டிக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

அல்லது நேரத்திற்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது, அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது போன்றவற்றாலும் மாதவிடாய் நாள் தவறிப் போகலாம்.

மாதவிடாய் நிற்கும் காலம் நெருங்கும்போது பெண்களுக்குத் தெளிவான அறிகுறிகள் தென்படாது. சிலருக்கு மாதவிடாய் வராமல் போகலாம். சிலருக்கு முறையற்ற இடைவெளியில் வரலாம்.

ஆனால் அது சரியான நேரத்திற்கு நிற்காமல் இருந்தால் பெண்கள் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை காண வேண்டும். அது கருப்பைப் புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

கர்ப்பகாலத்தில் எந்த மருந்து சாப்பிட்டாலும் அது கருவைப் பாதிக்கும் என்பது தவறான கருத்து. கர்ப்பகாலத்திற்கு முன்பே நோய் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளலாம்.

கர்ப்பகாலத்தில் வரும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற கர்ப்பகாலச் சிக்கல் பொதுவாகப் பிரசவத்திற்குப் பிறகு சரியாகி விடும். இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பது சிறந்தது.

இதய ரத்தக்குழாய் அடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு, மாரடைப்பு போன்றவை கர்ப்பகாலத்தில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் இருந்த பெண்களுக்குப் பிற்காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

எந்த வகை உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை நாடுவது சிறந்தது. ஆனால் மருத்துவர்கள் ஒரு சிலர், பெண்கள் எதிர்கொள்ளும் நோய் அறிகுறிகளைத் தவற விடுவதையும் மறுப்பதற்கில்லை.

குறிப்புச் சொற்கள்