நீரிழிவு நோயையும் ஓரந்தள்ளக்கூடிய சக்தி ஓட்டத்திற்கு உள்ளது என்பதற்கு 45 வயது செந்தில் குமார் வாழும் உதாரணம்.
ரத்தத்தில் தனக்கு சர்க்கரை அதிகம் இருப்பதாகத் தெரிந்ததும் நீரிழிவு நோய் வந்துவிடாமல் தற்காத்துக்கொள்ள உறுதிபூண்ட திரு செந்தில், ஓட்டத்தை நாடினார்.
இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே 2017ல் தொடங்கப்பட்ட ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ எனும் ஓட்டக் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து வாரந்தோறும் அவர் ஓடினார். இப்போது மருந்து உட்கொள்ளாமலே அவரது ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது. அக்டோபர் மாதம் நியூயார்க்கில் 42 கி.மீ. நெடுந்தொலைவோட்டத்தையும் அவர் வெற்றிகரமாக முடித்தார்.
“தாறுமாறு ரன்னர்ஸ் மூலம் அவருக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது,” என்றார் அவரது மனைவி சுகுணா தனகசுந்தரம், 48.
ஆண்டிறுதி ஓட்டம், 2025க்கு ஆயத்தம்
சனிக்கிழமை (டிசம்பர் 28) அதிகாலை 6.30 மணிக்கு மரீனா பே கிழக்கிற்குத் திரு செந்தில் குமார் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவரோடு தாறுமாறு ரன்னர்ஸ் குழுவினரும் பொதுமக்கள் பலரும் ஓடுவதற்கும் நடப்பதற்கும் ஆயத்தமாக ஒன்றுகூடினர்.
ஒவ்வோர் ஆண்டிறுதியிலும், தாறுமாறு ரன்னர்ஸ் இத்தகைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் இம்முறை முந்தைய ஆண்டுகளைவிட அதிகமானோர் (ஏறக்குறைய 165 பேர்) வந்திருந்தனர். பலரும் விரும்பும் 21 கி.மீ. குழுவோட்டத்துடன் முதன்முறையாக நடைபெற்ற 5 கி.மீ. நடை பொதுமக்களையும் ஈர்த்தது. புதுமுகங்கள் ஏறக்குறைய 50 பேர் கலந்துகொண்டனர்.
காலை 7.20 மணிக்குக் குழு ஓட்டம் தொடங்கியது. ஒவ்வொரு குழுவிலும் மூன்று உறுப்பினர்கள், ஆளுக்கு 7 கி.மீ. ஓடினர். ஏற்பாட்டாளர்களே குழுக்களைத் தேர்ந்தெடுத்திருந்ததால் புதிய நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்பாகவும் இது அமைந்தது.
குழு ஓட்டம் தொடங்கியதைத் தொடர்ந்து 5 கி.மீ. நடையும் தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
கரையோரப் பூந்தோட்டம், ‘சிங்கப்பூர் ஃப்ளையர்’ ராட்டினம் போன்றவற்றைப் பார்வையிட்டபடியே மக்கள் ஓடினர், நடந்தனர். மரீனா அணைக்கட்டில் திரும்பி, தொடங்கிய இடத்திலேயே ஓட்டத்தை முடித்தனர். பங்குபெற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, உடற்பயிற்சிச் சவால்கள் நடைபெற்றன. அவற்றிலும் பிஎம்ஐ எனும் உடல் எடைக் குறியீட்டுச் சவாலிலும் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஓட்டத்தில் நாட்டம்கொண்ட இரட்டையர்கள்
ராணுவப் பின்னணி கொண்ட இரட்டையர்கள் ராமன், லெட்சுமணன் கருப்பையா, 62, இருவரும் அவ்வப்போது தாறுமாறு ரன்னர்ஸ் ஓட்டங்களில் கலந்துகொள்கின்றனர். தனிப்பட்ட முறையிலும் ஓடுகின்றனர். “உடற்கட்டோடு இருப்பதே எங்கள் முக்கியக் குறிக்கோள்,” என்றார் ராமன்.
‘7 மாதங்களில் 7 கிலோகிராம் எடையைக் குறைத்தேன்’
கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் உடல் எடை ஏறியதால், படிகளில் ஏறக்கூடச் சிரமப்பட்டார் ‘ஃபோர்டிஸ்’ கட்டுமான நிறுவனத்தைச் சார்ந்த 44 வயது சுபாஷினி நாகராஜன். அப்போது அவருடைய சக ஊழியர் குரு சங்கரதாஸ், அந்நிறுவனத்தின் ‘உடற்பயிற்சி நண்பர்கள்’ திட்டத்திலும் பின்பு தாறுமாறு ரன்னர்சிலும் சேர சுபாஷினியை ஊக்குவித்தார்.
வாரத்திற்கு இருமுறை உடற்பயிற்சிக்கூடப் பயிற்சி செய்து, அண்மையில் ஓடவும் தொடங்கிய அவர் ஏழு மாதங்களில் ஏழு கிலோகிராம் எடையைக் குறைத்தார். ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ நெடுந்தொலைவோட்டம் 2024ல் 10 கி.மீ. ஓடவும் செய்தார். “அடுத்த ஆண்டு மேலும் சில கிலோகிராம் எடையைக் குறைக்கவுள்ளேன்,” என்றார் சுபாஷினி.
சனிக்கிழமை ஓட்டத்தில், ‘ஃபோர்டிஸ்’ல் பணியாற்றும் மற்றவர்களும் இணைந்து சிறப்புசேர்த்தனர்.
அனைவரும் சேரலாம்; ஏராள வாய்ப்புகள்
“சனிக்கிழமைகளில் காலை, 5 கி.மீ. போன்ற குறுகிய தொலைவிற்கு ஓடுகிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் தொலைவு ஓடுகிறோம். அவ்வப்போது வாரநாள்களிலும் மாலையில் பயிற்சி இருக்கும். குடும்பங்களும் பயிற்சிகளில் பங்கேற்கலாம்,” என்றார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் புவனேஸ்வரி காண்டீபன், 44.
வெளிநாடுகளுக்குச் சென்று ஓடும் வாய்ப்புகளையும் தாறுமாறு ரன்னர்ஸ் வழங்குகிறது. இவ்வாண்டு ஜூன் மாதம், ஐந்து சிறுவர்கள் உட்பட, ஏறக்குறைய 25 பேர் ஃபுக்கெட் ஓட்டத்திற்கு சென்றனர்.
அடுத்த டிசம்பரில் அங்கோர் வாட், கோவா அல்லது வியட்னாமில் நடக்கும் ஓட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 2026 லண்டன் நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்று, 42 கி.மீ. ஓடுவதற்குப் பெண் உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தாறுமாறு ரன்னர்சில் சேர விரும்புவோர் அவர்களின் சமூக ஊடகத்தளங்கள் வாயிலாக (ஃபேஸ்புக்கில் thaarumaaru runners, இன்ஸ்டகிராமில் @thaarumaaru.runners) இணையலாம்.