நோன்புக் கஞ்சி வழங்குவதில் கைகோத்துள்ள பள்ளிவாசல்கள்

1 mins read
da8e4a67-383b-40bb-9cd9-63a696b033ba
நாள்தோறும் 4,000 பேருக்கு நோன்புக் கஞ்சி சமைக்கப்படுகிறது. - படம்: த.கவி
multi-img1 of 11

சிங்கப்பூரின் 71 பள்ளிவாசல்களில் ஏழு, இந்திய முஸ்லிம் சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகின்றன.

பென்கூலன், ஜாமிஆ சூலியா உள்ளிட்ட சில பள்ளிவாசல்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சியைத் தாங்களாகவே தயாரிக்கின்றன.

வேறுசில பள்ளிவாசல்களோ, உணவகங்கள் அல்லது உணவு விநியோக நிறுவனங்களிடமிருந்து உணவுவகைகளைப் பெற்று இறையன்பர்களுக்கு வழங்குகின்றன.

இந்நிலையில், இம்முறை ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சி, அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கு ரமலான் மாதம் முழுவதும் அனுப்பப்படுகிறது.

நோன்புக் கஞ்சியை உணவுக்கலன்களில் அடைத்து அடுக்க அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் தொண்டூழியர்கள் ஜாமிஆ சூலியா பள்ளிவாசலுக்குச் செல்கின்றனர்.

ஜாமிஆ சூலியா பள்ளிவாசலிலிருந்து நாள்தோறும் 1,000 நோன்புக் கஞ்சிக் கலன்கள் மாலை 5 மணியளவில் அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்படுகின்றன.

அப்படிக் கொண்டுவரப்படும் நோன்புக் கஞ்சி ஜாமிஆ சூலியா பள்ளிவாசலுக்கு வருகைதரும் இறையன்பர்களுக்கு வழங்கப்படுகிறது.

“ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 4,000 பேருக்கு நோன்புக் கஞ்சி வழங்குகிறோம். நோன்புக் கஞ்சி தயாரிக்க திருச்சியிலிருந்து ஒன்பது சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பத்துப் பெரிய பானைகளில் கஞ்சி சமைக்கிறோம்,” என்றார் ஜாமிஆ சூலியா பள்ளிவாசலின் தலைவர் ரஷீத் ஜமா.

சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு இருமடங்கு கஞ்சி தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு ரஷீத், ரமலான் மாதத்தில் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 120,000 பேருக்குக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்