நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 30 வரை பெருவிரைவு ரயில் பயணத்தின்போது உள்ளூர் கவிதைகளைப் படித்து ரசிக்கலாம்.
எஸ்எம்ஆர்டி நிறுவனம், ஸ்டெல்லர் ஏஸ், தேசியக் கலைகள் மன்றம் இணைந்து ‘எம்ஆர்டியில் கவிதைகள்’ என்ற இயக்கத்தை நவம்பர் 1ஆம் தேதி தொடங்கினர்.
‘சிங்லிட் ஸ்டேஷன்’ எனும் உள்ளூர் இலக்கிய அமைப்பு தொடங்கிய இந்த இயக்கத்தில் கிழக்கு மேற்கு, வடக்கு தெற்கு, வட்டப் பாதைகளில் செல்லும் ரயில்களில் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் கவிதைகள் இடம்பெறும்.
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்ற நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கவிதைகளைப் படிக்கலாம். சீனம், மலாய், தமிழ் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உள்ளன.
இந்த இயக்கத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட், சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சியைப் பாராட்டினார்.
“சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, மின்னிலக்க முன்னேற்றம் ஒருபுறம் இருக்க, சிங்கப்பூர் இலக்கியமும் பலரைக் கவர்ந்துள்ளது. அதன் வளர்ச்சிக்கு தொடர்ந்து கைகொடுக்கும் அனைவருக்கும் நன்றி,” என்றார் அவர்.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கு தொடரும் இந்த இயக்கத்தை முன்னிட்டு, டோபி காட் ரயில் நிலையத்தில் ஒரு சிறிய ‘பாப்-அப்’ நூலகம் இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) ஒரு நாள் மட்டும் இயங்கிய இந்த நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் இலக்கிய நூல்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.
ஏறத்தாழ 20 ஆண்டுகள் கவிதைகள் எழுதும் கவிஞர் சித்துராஜ் பொன்ராஜ், சன்னலில் வெளியே அமர்ந்திருந்த கவிதை என்ற தமிழ் கவிதையை அறிமுக நிகழ்ச்சியில் படைத்தார். தன் எண்ணங்களை சாத்தியமாக்கும் கருவியாக தமிழ் மொழி திகழ்வதால், தமிழ்க் கவிதைகள் தனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
“அத்துடன், மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்க் கவிதைகளை மற்ற இனத்தவர்களும் கண்டு ரசிப்பதால் நம் கலாசாரம் மீதான புரிந்துணர்வு ஏற்படும்,” என்றார் அவர்.
அவர் இயற்றிய சன்னலில் வெளியே அமர்ந்திருந்த கவிதையை பொதுமக்கள் ரயில்களில் காணலாம்.
‘எம்ஆர்டியில் கவிதைகள்’ போன்ற இலக்கிய முயற்சிகளால் இன்னும் பல எழுத்தாளர்கள் வளர்வார்கள் எனக் கூறிய பிரபல உள்ளூர் கவிஞர் க.து.மு.இக்பால், “இளையர்கள் மேலும் தமிழ்க் கவிதைகள், புத்தகங்கள் எழுதிப் படிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
அவர் எழுதிய நரை வெளிச்சம் எனும் கவிதையும் ரயில்களில் இடம்பெறுகின்றன.