சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகிவிட்டது நற்பணிப் பேரவை.
‘நற்பணி@SG60’ என்ற நிகழ்ச்சியை இம்மாதம் 5ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை காத்திப் பன்முக விளையாட்டு அரங்கில் நற்பணிப் பேரவை நடத்தவிருக்கிறது.
‘ஒன்றாக ஒன்றினைந்து’ என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 2,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலாசாரம், சமூக பிணைப்பு, பராமரிப்பு ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருக்கும்.
நற்பணிப் பேரவையின் ஆலோசகர்களான மூத்த துணை அமைச்சர்கள் டாக்டர் ஜனில் புதுச்சேரி, திரு முரளி பிள்ளை இருவரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
கலாசாரப் படைப்புகள், இந்திய அமைப்புகளும் அரசாங்கப் அமைப்புகளும் அமைக்கும் கூடங்கள், தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்த முற்படும் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவை கொண்டாட்டத்துக்கு வருவோரைக் கவரவிருக்கின்றன.
தீபாவளி உணர்வையும் தர நற்பணிப் பேரவையின் இந்திய செயற்குழுக்கள் வசதி குறைந்த குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கவிருக்கின்றன.
“SG60 விழா, நாட்டின் முன்னேற்றத்தையும் இந்திய சமூகத்தின் பங்களிப்பையும் சிறப்பிப்பதோடு இளையர்களை வளர்ச்சியின் பாதையில் செல்ல நிகழ்ச்சி ஊக்குவிக்கிறது,” என்றார் நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன்.