தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தேசியதின மொழிபெயர்ப்புப் போட்டி ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
தொடக்கநிலை 4,5,6 மற்றும் உயர்நிலை 1,2,3 என இரு பிரிவுகளாகப் போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் 267 மாணவர்கள் பதிவு செய்திருந்தார்கள். போட்டி இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது.
இரு பிரிவுகளிலும் முதல் பரிசாக $300, இரண்டாம் பரிசாக $200, மூன்றாம் பரிசாக $100, ஊக்கப் பரிசாக இருவருக்கு $50 வழங்கப்பட்டன.
தொடக்கப்பள்ளிப் பிரிவில் கவினேஷ் விஜயன் (சின்குவா தொடக்கப்பள்ளி) முதல் பரிசையும், ராய்சிராஸ் (யூ டீ தொடக்கப்பள்ளி) இரண்டாம் பரிசையும், நாச்சியப்பன் சுமிதா (புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி) மூன்றாம் பரிசையும் வென்றனர். அவியுதா (கார்ப்பரேசன் தொடக்கப்பள்ளி), பூபாலன் ரெயேஸ்வரி (அகமட் இப்ராஹிம் தொடக்கப்பள்ளி) இருவரும் ஊக்கப்பரிசையும் வென்றனர்.
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் ராம் நாராயண் (தெமாசெக் ஜூனியர் உயர்நிலை) முதல் பரிசையும், ஜெயஸ்ரீ (யூனிட்டி உயர்நிலைப் பள்ளி) இரண்டாம் பரிசையும், சிவநேத்ரன் (விக்டோரியா உயர்நிலைப் பள்ளி) மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர். சீதாலட்சுமி (என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளி), காயத்ரி சுரேஷ் (ராஃபிள்ஸ் உயர்நிலைப் பள்ளி) இருவருக்கும் ஊக்கப்பரிசு கிட்டியது.
மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர்களுக்காக ஒரு பட்டிமன்றமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 125வது பட்டிமன்றம்.
இன்றைய மாணவர்கள் நேரத்தை பெரிதும் செலவழிக்க விரும்புவது குடும்பத்தினருடனா அல்லது நண்பர்களுடனா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
குடும்பத்தினரே என்ற அணிக்காக பிரபவ், ரோஹித், சுவேதா ஆகியோரும், நண்பர்களுடனே என்ற அணிக்காக சுப்ரமணியன், ராகஸ்ரீ, யாழினி ஆகியோரும் பேசினர். பட்டிமன்ற நடுவராக திரு யூசுப் ரஜித் செயல்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். பெற்றோர்கள் மாறுவதில்லை. இந்தப் போட்டிக்குக்கூட எல்லா மாணவர்களுமே பெற்றோர்களுடன்தான் வந்திருக்கிறார்கள். ஒரு மாணவன் குடும்பத்தைவிட்டு வெளியே அதிக ஈடுபாடு காட்டினால், அவன் கலாசாரத்தைவிட்டு வெளியேறுகிறான், பண்பாட்டைவிட்டு வெளியேறுகிறான், மொழியைவிட்டு வெளியேறுகிறான். அதனால்தான் தமிழ் பேசும் தமிழ்க் குடும்பங்கள் இன்று 40 விழுக்காட்டிற்குக் குறைந்துவிட்டது, இதனை உணர்ந்த மாணவர்கள் குடும்பத்துடன்தான் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள்,” என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா தினகரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.