மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் மாதந்தோறும் ஏற்படும் தவிர்க்க முடியாத இயற்கையான செயல்முறையாகும்.
இதை எளிதாகக் கடந்துசெல்ல வேண்டும் என்று நினைத்தாலும், சில சமயங்களில் அப்போது ஏற்படும் பல்வேறு உபாதைகள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையச் செய்துவிடும்.
மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் உபாதைகள் நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு அதிக ரத்தப்போக்கும் ‘டிஸ்மெனோரியா’ (Dysmenorrhea) என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் கடுமையான வலியும் ஏற்படுகிறது.
இந்த வலியிலிருந்து நிவாரணம் பெற மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக பெண்கள் தங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்வதோடு எளிய வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றலாம்.
நீரேற்றமாக இருப்பது
மாதவிடாயின்போது நிறைய தண்ணீர், குறிப்பாக வெதுவெதுப்பான நீர் பருகுவதன் மூலம் வயிற்று வலியைக் கட்டுப்படுத்தலாம்.
நீரின் சூடு வயிற்றில் படும்போது அது வயிற்றுத் தசைகளைத் தளர்த்தி வலியை நீக்கும். நீரில் ஒருசில பொருள்களைச் சேர்த்து அருந்துவதன் மூலம் அதன் பயன்களை மேலும் அதிகரிக்கலாம்.
தண்ணீரில் சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பைப் போட்டு நன்குக் கொதிக்க வைத்து குடித்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துகளும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் வலி நிவாரணியாகப் பயன்படுகின்றன. இதை மேலும் சுவையாக்க ஒரு கரண்டி தேனைச் சேர்த்துக்கொள்ளலாம்.
சத்துள்ள உணவுகளை உட்கொள்வது
ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கால் பெண்கள் இரும்புச் சத்தையும் அதிகமாக இழக்கிறார்கள். உடனடியாக உடலில் ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய இறைச்சி, கீரை வகைகள் போன்ற உணவுகளைச் சேர்த்துகொள்வதன்மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
சால்மன் மீன்களில் அதிகளவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தசை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. சற்று கசப்பு சுவையுடன் இருக்கும், கொக்கோ நிறைந்த டார்க் சாக்லேட்டில் மெக்னீசியமும் நார்ச்சத்தும் அதிகளவில் இருப்பதால் பெண்களின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அது வழங்கும்.
இது போன்ற சத்துள்ள, ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிடுவது மாதவிடாய் வலியை குறைக்கப் பெருமளவில் உதவும்.
சூடான தண்ணீர் ஒத்தடம்
மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்குத் தசைப்பிடிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இந்நேரத்தில் அடிவயிற்றுக்குச் சூடான தண்ணீர் ஒத்தடம் கொடுப்பது வயிற்று வலியைக் குறைக்கவும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
தசை வலியையும் அசௌகரியத்தையும் போக்க, பெண்கள் வெந்நீர்ப் பையை வலியுள்ள பகுதியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கலாம்.
எளிய உடற்பயிற்சி
மாதவிடாய்க் காலத்தின்போது குறைந்தது 3 முதல் 5 நாள்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது.
அதே சமயத்தில், மெதுவான நடைப்பயிற்சி அல்லது யோகாசனம் முதலிய எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மாதவிடாயினால் ஏற்படும் பிடிப்புகளைச் சமாளிப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும். மேலும், யோகாசனத்தில் தரையில் அமர்ந்து செய்யக்கூடிய சில எளிய ஆசனங்களைப் பெண்களால் வீட்டிலிருந்தே செய்ய இயலும்.
இடுப்புப் பகுதி உட்பட உடல் முழுவதும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் தசைப்பிடிப்பு வலியைக் குறைக்கவும் இதுபோன்ற உடற்பயிற்சிகள் அதிக அளவில் உதவுகின்றன.