ஒரு பெண்ணின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இதனால், மாதவிடாய் நிறுத்தம் (menopause) ஏற்படுவதுடன் ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றமும் உண்டாகும் என்று கருதப்படுகிறது.
பொதுவாக, 45 வயதுமுதல் 55 வயதுவரை ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நின்று போகலாம். தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் இல்லாத நிலை, மாதவிடாய் நின்று போனதற்கு ஓர் அறிகுறியாகும்.
பாதிப்புகள் பற்றி...
மாதவிடாய் நின்றவுடன் அதன் தொடர்பான பாதிப்புகள் பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்வரை நீடிக்கும். இவை ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். அவற்றில் மிகவும் பொதுவானவை:
- உடலில் திடீர் வெப்ப உணர்வு (hot flashes)
- இரவு நேரத்தில் அதிகமாக வியர்த்தல்
- தடைப்பட்ட தூக்கம்
- கவனச்சிதறல்
- பதற்றம்
- மனநிலை மாற்றங்கள்
- உடல் எடை அதிகரிப்பு
- பிறப்புறுப்பு வறட்சி (vaginal dryness)
- சிறுநீர்ப்பாதைத் தொற்று (UTI)
- கழிவு வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயலாமை (incontinence)
ஆரோக்கியமே சிறந்த செல்வம்
தேவையான ஊட்டச் சத்துகளை அளிக்கும் சரிவிகித உணவு (balanced meal), உடல் வெப்பத்தைத் தணிக்கவும் இரவு நேரத்தில் ஏற்படும் வியர்வையைக் குறைக்கவும் உதவும்.
மதுபானம், ‘காஃபீன்’, சூடான பானங்கள், காரமான உணவு பாதிப்புகளை மேலும் மோசமாக்கலாம். எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, தூங்கும் முன் இவற்றைத் தவிர்ப்பது நன்று.
மேலும், சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ‘டி’ நிறைந்த உணவை உட்கொள்வது வலுவான எலும்புகளைப் பராமரிக்க உதவும். அத்துடன் நடைப்பயிற்சியும் எடை தூக்குவதும், எலும்புப் புரையைத் தடுக்கவும் எடையைச் சரிவர நிர்வகிக்கவும் உதவும்.
அத்துடன், இரவில் உறங்கும்முன் மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து ஓய்வெடுத்து புத்தகம் வாசித்தல், யோகாசனம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதனால், தூக்கத்தின் தரமும் பாதிப்படையாது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நின்றுபோனதற்கான அறிகுறிகளும் பாதிப்புகளும் மாறுபடுவதால் அவற்றைச் சார்ந்த ஆலோசனைக்கு மருத்துவரிடம் பேசி திறம்பட மாற்றங்களை நிர்வகிக்க ஒரு தனிப்பட்ட சிகிச்சைத் திட்டத்தைப் பெற்றுப் பயனடையலாம்.
மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு நோய் அல்ல. எல்லா பெண்களிடமும் இயல்பாக ஏற்படும் ஒரு மாற்றம்தான் இது.