புனைகதைகளைச் சிறுவயதில் விரும்பி வாசித்த ஞாபகம் நம்மில் பலருக்கும் உண்டு. பள்ளிக் கொடியேற்றத்தின்போது, அல்லது இடைவேளை நேரத்தின்போது மாணவர்கள் பொதுவாக புனைகதை நூல்களை விரும்பிப் படிப்பதுண்டு.
வேலை செய்பவர்கள் பெரும்பாலும் புதினம் அல்லாத கதைகள், சுயஉதவி நூல்களை நாடுவதுண்டு. ஆனால், புனைகதைகளை இளம் வயது தாண்டியும் படிப்பது நன்மைகளை அளிக்கிறது என்று சில ஆய்வுகள் கூறியுள்ளன.
பிறர்நிலை உணர்தல்
ஒரு சூழ்நிலை அல்லது உணர்வைப் பற்றி நாம் படிக்கும்போது, அதை நாம் உணர்வதுபோல் இருக்கும்.
கற்பனையிலிருந்து பிறக்கும் கதைகளை அணுகுவதால் மற்றவர்களை நன்கு புரிந்துகொள்ள மூளையின் சில பகுதிகள் செயல்படுவதாகப் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
மனச்சோர்விலிருந்து விடுபடலாம்
மூளைக்கு ஓய்வளிக்க சுறுசுறுப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து விலகுவது அவசியம்.
அந்த ஓய்வு பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் புனைகதைகளை படிப்பதும் ஒன்றாகும்.
புனைகதைகள் படிப்பதால் ஆழ்ந்த ஓய்வும் மன அமைதியும் கிடைக்கின்றன என்று தெரிவித்தது ‘தி நியூயார்க்கர்’ நாளிதழ்.
மேலும், மன அழுத்தத்தைச் சமாளிக்க வாசிப்பு மிகச் சிறந்த வழியாகும் என்று ‘சசெக்ஸ்’ பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இசை கேட்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்ற மற்ற முறைகளைவிட இது சிறந்த வழி என்றும் தெரிவிக்கப்பட்டது.
நல்ல உறக்கம்
புனைகதைகள் வாசிப்பது ஒரு நிதானமான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால், உறக்கம் மிக எளிதில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
புதினம் அல்லாத புத்தகங்கள் படிப்பது சிந்தனையைத் தூண்டுகிறது. உறங்குவதற்குமுன் எண்ணங்களுக்கு ஓய்வு கொடுக்க கற்பனைக் கதைகள் உதவுகின்றன.
மேம்படும் நினைவாற்றல்
2001ஆம் ஆண்டு தேசிய அறிவியல் அகாடமியின் ‘செயல்முறைகள்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி அதிகமாகப் புனைகதைகள் படிப்பவர்கள் ‘அல்ஸைமர்’ நோயால் பாதிக்கப்படும் சாத்தியம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, நினைவாற்றல் இழப்பு ஏற்படுவது 32 விழுக்காடு குறைவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிகரிக்கும் மொழி ஆற்றல்
புனைகதைகள் படித்த வாசகர்களின் மூளைச் செயல்பாடுகளை 2013ஆம் ஆண்டில் எமோரி பல்கலைக்கழகம் ஆராய்ந்தது.
புனைகதைகள் படிக்காதவர்களைக் காட்டிலும் மூளையின் சில பகுதிகளில் அதிக செயல்பாடு இருந்ததாக ஆய்வு கண்டறிந்தது. குறிப்பாக, மொழியைப் புரிந்துகொள்ளும் தொடர்புடைய மூளையின் இடது ‘டெம்போரல் கார்டெக்ஸ்’ பகுதியில் அதிகச் செயல்பாடு காணப்பட்டது.
புனைகதைகளில் அதிகமான சொற்கள் பயன்படுத்தப்படுவதால் வாசகர்கள் அதிக மொழித்திறன் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அக மகிழ்ச்சி
புத்தகங்களைத் தவறாமல் படிப்பவர்கள் சராசரியாக வாழ்க்கையில் அதிக மனநிறைவு அடைகிறார்கள் என்றும் சில ஆய்வுகள் தெரிவித்தன. இப்பழக்கம் அதிக அளவில் மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறது.

