தயாமயி பாஸ்கரன்
இரு பக்கமும் அசைந்தாடித் தளர்நடை பயிலும் பென்குவின்கள் நம்மில் பலரின் ரசனைக்கு உரியன.
சிங்கப்பூர்ப் பறவைகள் மகிழ்வனத்தில் (Bird Paradise Singapore) அவற்றின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தற்போது அங்குக் கிட்டத்தட்ட 30 பென்குவின்கள் உள்ளன.
புதிதாக இரண்டு பென்குவின் குஞ்சுகள் பிறந்துள்ளன.
மேலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் விலங்கியல் பூங்காவிலிருந்து ‘நார்த் ராக்ஹாப்பர்’ வகைப் பெங்குவின் ஒன்று, சிங்கப்பூர் பறவைகள் மகிழ்வனத்திற்குச் சிறப்பு ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
‘பாஸ்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஒரு வயதுப் பெண் பென்குவின், நவம்பர் 28ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தது.
மருத்துவ, உடல்நலப் பரிசோதனைகளுக்கும் சிறிது காலக் கண்காணிப்புக்கும் பிறகு டிசம்பர் இரண்டாம் வாரம் அது வருகையாளர்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுவாக, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இந்த வகைப் பென்குவின்கள் வாழ்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
பென்குவின் குஞ்சுகள் உடலுரம் பெற, அவற்றின் தாய் தந்தையரின் உடலுக்கு அடியில் பதுங்குவது வழக்கம். மென்மையான கறுப்பு இறகுகளுடன், தலையில் மஞ்சள்-ஆரஞ்சு நிறக் கலவையுடன் இவற்றின் தனித்துவமான தோற்றம் கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது.
வழக்கமாக வசிக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரை ஒன்றில் பிப்ரவரி மாதம் கரையொதுங்கிய ‘பாஸ்கல்’, பெர்த் விலங்கியல் பூங்காவினரால் மீட்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தது.
இதற்கு முன்னதாக அதே பூங்காவைச் சேர்ந்த, கடலிலிருந்து மீட்கப்பட்ட ‘பியர்’ என்ற ஆண் பென்குவின், 2020ல் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது.
இனப் பெருக்கம் செய்வதற்காக ‘பியர்’, ‘பாஸ்கல்’ இரண்டையும் இணை சேர்க்க முடிவெடுத்துள்ளது சிங்கப்பூர்ப் பறவைகள் மகிழ்வனம்.
பாஸ்கல் முதலில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மற்ற பென்குவின்களுடன் வாழப் பழக்கப்படுத்தப்படும். பின்னர் அது, பியருடன் இணை சேர்க்கப்படும் என்று மண்டாய் வனவிலங்குக் குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.
அனைத்துலக இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International union of conservation of nature) அருகிவிடும் ஆபத்து அதிகமுள்ள விலங்கினங்கள் பட்டியலில் ‘நார்த் ராக்ஹாப்பர்’ இடம்பெற்றுள்ளது.
ஆகையால், இந்த பென்குவின் வகையைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்று பறவைகள் மகிழ்வனம், இது குறித்த அறிக்கையில் குறிப்பிட்டது.
புதிதாகப் பிறந்த பென்குவின் குஞ்சுகள்
‘கெண்டூ’ (Gentoo) எனும் வகையைச் சேர்ந்த இரண்டு பென்குவின் குஞ்சுகள் டிசம்பர் 5ஆம் தேதி மண்டாய் வனவிலங்குக் குழுமத்தில் புதுவரவாய் இணைந்தன.
முதல் முறை பெற்றோரான ரிக்கி, பீச் எனும் பென்குவின்களின் குஞ்சுகள் அவை.
இரண்டாவதாகப் பிறந்த பென்குவின் குஞ்சுக்கு அதன் பெற்றோரால் போதிய உணவு வழங்க முடியாத சூழலில் அது பென்குவின் பராமரிப்புக் குழுவால் வளர்க்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
இருப்பினும், முதல் குஞ்சை வளர்ப்பதில் ரிக்கியும் பீச்சும் சிறப்பாகப் பங்காற்றி வருவதாக மண்டாய் வனவிலங்குக் குழுமத் துணைத் தலைவர் எனாய்ஸ் ட்ரிட்டோ தெரிவித்துள்ளார்.
“முதன்முறையாகக் குஞ்சுகளைப் பெற்றுள்ள அவற்றுக்கு ஒரே நேரத்தில் இரண்டு குஞ்சுகளை வளர்க்கும் அனுபவம் இல்லாதிருக்கலாம். கடலில் வாழும் பென்குவின்களுக்கும் இப்படி நடப்பது வழக்கம்தான்,” என்றார் திருவாட்டி எனாய்ஸ்.