கூகல் செயற்கை நுண்ணறிவில் புதிய மேம்பாடுகள்

கூகல் செயற்கை நுண்ணறிவில் புதிய மேம்பாடுகள்

3 mins read
1926a45b-e737-47e1-8bbe-ce5918e49356
கூகல் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முக்கியமான இரண்டு புதிய அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கூகல் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முக்கியமான இரண்டு புதிய அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.

கூகலின் பிரதான மாதிரியான ஜெமினாய் (Gemini), காணொளி உருவாக்கும் தொழில்நுட்பமான வியோ (Veo) ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், பயனர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் புதிய அனுபவத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளன.

இந்த அறிவிப்புகளில் மிக முக்கியமானது ‘வியோ 3.1’ (Veo 3.1) பதிப்பின் அறிமுகமாகும். இது மேம்படுத்தப்பட்ட ‘இன்கிரிடியண்ட்ஸ் டு வீடியோ’ (Ingredients to Video) என்ற சிறப்பு வசதியுடன் வருகிறது.

முந்தைய வியோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வசதியின் மூலம், பயனர்கள் மூன்று குறிப்புப் படங்களை (Reference images) உள்ளீடாகக் கொடுத்து, அதில் உள்ள கதாபாத்திரங்கள், பின்னணிகள், பொருள்களைத் துல்லியமாகக் கட்டுப்படுத்தித் தரமான காணொளிகளை உருவாக்க முடியும்.

இதன் மூலம் ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்குச் செல்லும்போது கதாபாத்திரங்களின் தோற்றமும் மற்ற அம்சங்களும் மாறாமல் சீராக இருப்பதை உறுதி செய்ய முடிவதுடன், இது கதை சொல்லலுக்கும் வர்த்தக ரீதியான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் ஒரு மிகப் பெரிய முன்னேற்றமாக அமையும்.

கைப்பேசி சார்ந்த தளங்களைப் பயன்படுத்தும் படைப்பாளர்களுக்காக, வியோ 3.1 இப்போது இயல்பாகவே 9:16 அளவிலான செங்குத்துக் காணொளி (vertical video) வெளியீட்டை ஆதரிக்கிறது. இதனால் ‌‌‌’ஷார்ட்ஸ்’, ‘ரீல்ஸ்’ போன்ற தளங்களுக்காக, கிடைமட்டக் காட்சிகளை (landscape footage) வெட்டிச் சுருக்க வேண்டிய தேவை இல்லை. அதே வேளையில் காட்சியமைப்பும் தரமும் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும், ‘அப்ஸ்கேலிங்’ (Upscaling) வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 1080பி, 4கே துல்லியத்திலான (Resolution) வெளியீடுகளை வழங்குவதால், ‘எடிட்டிங்’ (editing) பணிகளுக்கும் உயர்தரத் தயாரிப்புகளுக்கும் மிகவும் ஏற்றதாக அமைகிறது.

இவை அனைத்தும் பயனர்கள் கொடுக்கும் குறிப்புகளுக்கு மிகத் துல்லியமாகவும், செறிவான காட்சி-ஒலி தரத்துடனும் அமையும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வியோவின் பயன்பாட்டு வரம்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இனி ‘இன்கிரிடியண்ட்ஸ் டு வீடியோ’ அம்சங்களை ஜெமினாய் செயலியில் மட்டுமல்லாமல், யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts), ஃப்ளோ (Flow), ஜெமினாய் ஏபிஐ (Gemini API), வெர்டெக்ஸ் ஏஐ (Vertex AI), கூகல் விட்ஸ் (Google Vids) போன்ற தளங்களிலும் அணுக முடியும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, ‘சிந்த்ஐடி’ (SynthID) மின்னிலக்க வாட்டர்மார்க் மூலமான மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு காணொளி கூகலின் செயற்கை நுண்ணறிவு மாதிரியால் உருவாக்கப்பட்டதா என்பதைப் பயனர்கள் ஜெமினாய் செயலிக்குள்ளேயே நேரடியாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

படைப்பாற்றல் திறன்களுடன் சேர்த்து, கூகல் தனது ஜெமினாய் சேவையில் ‘பர்சனல் இன்டெலிஜென்ஸ்’ எனும் அம்சத்தையும் விரிவுபடுத்துகிறது.

பயனர்கள் விரும்பித் தேர்வுசெய்யக்கூடிய இந்த வசதி, ஜிமெயில், போட்டோஸ், யூடியூப், தேடல் போன்ற இணைக்கப்பட்ட கூகல் செயலிகளிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பாகப் பெற்று, சூழலுக்கேற்ற தனிப்பயனாக்கப்பட்ட உதவியை வழங்குகிறது. அதேசமயம், பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கூகல் மாதிரிகளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படாது.

முழுக் கட்டுப்பாடும் பயனர்களிடமே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் செயலி இணைப்புகளை மாற்றியமைக்கவோ அல்லது பயன்பாட்டு வரலாற்றை அழிக்கவோ முடியும்.

குறிப்புச் சொற்கள்