தகவல் தொடர்பு ஊடகங்களில் அனைத்துலக அளவில் வாட்ஸ்அப் செயலி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அது தகவல் பரிமாற்றத்திற்கும் தொடர்புகளை நிர்வகிக்கவும் உதவுகிறது.
இந்நிலையில், பயனர்களின் அனுபவங்களை எளிதாக்கும் நோக்கில் வாட்ஸ்அப் செயலியில் இவ்வாண்டு மேலும் பல புதிய அம்சங்கள் அறிமுகம் கண்டன.
ஒழுங்கமைவு
தனிப்பட்ட தொடர்புகளைத் திறன்பேசியிலும் மடிக்கணினியில் நிர்வகிக்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘வாட்ஸ்அப்’ செயலியில் மட்டுமின்றி, திறன்பேசியில் சேகரிக்க வேண்டுமா வேண்டாவா என்பதையும் அதன்வழி தேர்வுசெய்துகொள்ளலாம்.
அத்துடன், ‘அக்ராஸ் டிவைஸ்’ எனும் தெரிவின்மூலம் மடிக்கணினிவழி சேகரித்த தொடர்பினைத் திறன்பேசியிலும் அணுகலாம். ‘கஸ்டம் லிஸ்ட்’ எனும் தெரிவும் அதிகம் தொடர்புகொள்ளக்கூடிய விருப்பமான எண்ணைத் தனியே வைக்கும் அம்சங்களும் அறிமுகம் கண்டுள்ளன.
நிகழ்ச்சிகள்
குழு நிகழ்ச்சிகளை நிர்வகிக்கவும், பங்கேற்பதற்கு இசைவு தெரிவித்த நிகழ்ச்சிகளை நினைவூட்டவும் புதிய அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காணொளி அழைப்பு அம்சம், 32 பேருடன் ஒரே நேரத்தில் குழுக் காணொளி அழைப்புகளில் பங்கேற்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அழைப்புகளில் புறச்சூழல் ஒளியைக் குறைத்து எதிரொலியும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வரிசைப்படுத்துதல்
‘வாட்ஸ்அப்’ செயலியில் பயனர்கள் பின்தொடரும் பக்கங்களை நிறுவனங்கள், வாழ்வியல், செய்திகள் என குறிப்பிட்ட வகைகளில் பிரித்து வைக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு பக்கத்தில் பயனர் காணும் செய்தியினைப் பிற தொடர்புகளுடனோ சொந்த இடுகையிலோ பகிரலாம். ஒரு பக்கத்தை அல்லது குழுவை 16 பேர் வரை நிர்வகிக்கும் வகையிலும் செயலி மேம்பாடு கண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு
அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ‘வாட்ஸ்அப்’ செயலியில் ‘மெட்டா ஏஐ’ எனும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘@மெட்டா ஏஐ’ எனும் குறியீட்டைப் பயன்படுத்தி எழுதவும் படங்களை உருவாக்கவும் முடியும்.

