‘என் அன்பே’ எனப் பொருள்படும் தலைப்பான ‘ஹபீபி’, அன்பின் கதையாகத் திரையேறி உள்ளதாகத் தமிழ் முரசிடம் கூறினார் அத்திரைப்படத்தின் இயக்குநர் மீரா கதிரவன்.
இவர் ஏற்கெனவே ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ என்ற சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கும் படங்களை இயக்கியவர்.
புகழ்பெற்ற இஸ்லாமியப் பாடகர் அமரர் நாகூர் இ. எம். ஹனீஃபாவின் நூறாவது பிறந்த நாளையொட்டி, கடைநல்லூர் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலைச் சித்திரிக்கும் ஹபீபி திரைப்படம் வெளியீடு கண்டுள்ளது.
நேசம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
புதிய முகங்கள் கொண்ட இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
‘ஜோ’ திரைப்படத்தின் கதாநாயகி மாளவிகா மனோஜ், அறிமுக நாயகன் ஈஷா ஆகியோர் ‘ஹபீபி’ திரைப்படத்தில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் படம் வெளிவருகிறது.
‘இசை முரசு’ என்றும் அழைக்கப்படும் அமரர் நாகூர் ஹனீஃபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு மூலம் மீளுருவாக்கம் செய்து, அவரது குரலில் ஒலிக்கும் ‘வல்லோனே’ என்ற பாடலும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது.
1919ல் இந்தியாவின் ராமநாதபுரத்தில் பிறந்த நாகூர் ஹனீஃபா, 2015ல் அமரரானார். ஆயினும், கவிஞர் யுகபாரதியின் புதிய பாடல் வரிகளை அவரது கம்பீர, வெண்கலக் குரல் செயற்கை நுண்ணறிவின்மூலம் ஒலிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
நெடுநாள் கனவு
கடையநல்லூர் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை ‘ரத்தமும் சதையுமாக’ வாழ்ந்த தாம் ஆத்மார்த்தமாக இப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறினார் இயக்குநர் மீரா கதிரவன்.
படத்திற்கான முதற்கட்ட வேலைகள் 2020களில் தொடங்கியபோதும் இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான எண்ணம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகவே தன் மனத்தில் இருந்தது என்றார் அவர்.
“இஸ்லாமியர்கள் தங்களுக்கான கதைகளைப் பேசும்வரை, அவர்களைப் பற்றிய கதைகள் வேறொன்றாகச் சொல்லப்படும். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த நான், நன்றியுணர்வுடன் அதற்குத் திருப்பித் தரும் வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். இப்படி ஒரு படம் இப்போதைய காலகட்டத்திற்குத் தேவையான படம் என்றும் நம்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.
தாம் வாழ்ந்த வாழ்க்கையில், தமக்கு நெருக்கமாக இருக்கும் நிலப்பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் கதைக்களம் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என நம்பி, அதனைக் கையாண்டதாகத் திரு மீரா கதிரவன் கூறினார்.
இஸ்லாமிய சமூகத்தின் நன்மைகளை அறிந்திராததால் தவறான புரிதல் இருப்பதைச் சுட்டிய இயக்குநர், இஸ்லாமியர்களின் இயல்பு, இறையியல், வாழ்வியல் ஆகியவற்றைச் சித்திரிக்க விரும்பியதாகக் கூறினார்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் நாகூர் ஹனீஃபாவின் குரல் பயன்படுத்தப்பட்டதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.
“தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் நாகூர் ஹனிஃபா முக்கியமான மனிதர். அவரது குரல், நம் சமூகத்தின் பண்பாட்டுக்குரல். என்னைப் போன்றவர்கள், பிறந்து வளர்ந்தபோது கேட்ட குரலாக அது நம் ரத்த நாளங்களில் கலந்தது. அரசியல், திரைத்துறை எனப் பொதுப்படையான தமிழ்ச் சமூகத்திலும் புகழ்பெற்றவராகத் திகழ்ந்தார் ‘இசை முரசு’ நாகூர் ஹனீஃபா,” என்று திரு மீரா கதிரவன் கூறினார்.
பரவலான எதிர்பார்ப்புக்குள்ளான இந்தப் படத்திற்கான வரவேற்பு நன்றாக இருந்ததாகவும் மக்கள் பலரின் ஏக்கத்தை நிறைவு செய்யும் வகையில் இருந்ததாகவும் இயக்குநர் குறிப்பிட்டார். பா.ராஞ்சித், மாரி செல்வராஜ், ராம் போன்ற இயக்குநர்களும் தங்களது பாராட்டை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
“இஸ்லாமியர்களை இயல்பாகவும், நேர்மறையாகவும் சித்திரிக்கும் படங்களும் படைப்புகளும் வெளிவரவேண்டும். வெறுப்பு அரசியல் மேலோங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் அன்பின் அவசியத்தை வலியுறுத்தும் கதைகள் தேவை,” என்கிறார் திரு மீரா கதிரவன்.