வெளிநாட்டு ஊழியர்களுக்கு நெருக்கடிகளில் உதவவுள்ள புதிய ‘ஹார்ட்’ நிதியைத் தொடங்கியுள்ளது ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அறநிறுவனம்.
விபத்துகள், காயங்கள், மருத்துவ அவசரநிலைகள், உடல் ஊனம், மற்ற இக்கட்டான சூழல்களால் அவதியுறும் ஊழியர்கள் இந்நிதியால் பயனடைவர் என்றார் ‘ஐஆர்ஆர்’ நிறுவனர் தீபா ஸ்வாமிநாதன்.
“வீட்டை அடைமானம் வைத்து, தரகருக்குப் பணம் தந்து, இங்கு வந்ததும் வேலையின்றி ஏமாற்றப்படுவோருக்கும் இந்நிதிமூலம் நாங்கள் உதவக்கூடும். வேலையிடத்தில் காயமடைந்தோருக்குக் காப்பீட்டுத் தொகை வருமுன், இடைக்காலத்தில் அவர்களுக்குச் சிறிதளவு நிதியுதவி கொடுக்கலாம். வேலையிடத்துக்கு அப்பாற்பட்ட விபத்துகளிலும் அவர்களுக்கு உதவி தேவைப்படும்.
“அண்மையில் எங்களிடம் வந்த ஊழியர் ஒருவர் தன் பணத்தையெல்லாம் தரகருக்குத் தந்துவிட்டார். அவர் பிள்ளைக்குச் சிகிச்சைக்காகத் திடீரெனப் பணம் தேவைப்பட்டபோது எங்களை அணுகினார். அத்தகைய சூழலிலும் நாங்கள் உதவக்கூடும்,” என்றார் திருவாட்டி தீபா.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) தேசியக் கலைக்கூடத்தில் நடந்த ‘ஐஆர்ஆர்’ பத்தாம் ஆண்டுநிறைவு மதிய விருந்தில் ‘ஹார்ட்’ நிதி தொடக்கம் கண்டது.
விருந்தின் நிறைவில், ‘ஹார்ட்’ நிதிக்காகவும் மற்ற ‘ஐஆர்ஆர்’ முயற்சிகளுக்காகவும் மொத்தம் $120,000க்கும் மேலாகத் திரட்டப்பட்டது. நன்கொடைகள் மட்டுமன்றி நேரடி, இணையவழி ஏலங்கள் (silent auction) மூலமும் நிதி திரட்டப்பட்டது.
https://tinyurl.com/decadeofimpactauction இணையத்தளத்தில் ஏலம் தொடர்ந்து நடைபெறுகிறது.
“நெருக்கடி வந்தபிறகு அவசரமாக நிதி திரட்டுவது சவால்மிக்கதாக உள்ளதால் முன்கூட்டியே நிதி திரட்டத் திட்டமிடுகிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“இதற்கு முன், ஊழியர் ஒருவருக்கு ஏதேனும் அவசர நிதியுதவி தேவைப்படும்போது, நாங்கள் அவருக்காக ஒரு புதிய நிதித் திரட்டைத் தொடங்க வேண்டியிருந்தது. ஆனால், சில ஊழியர்கள் தம் நிலையை வெளிப்படையாகச் சொல்லக் கூச்சப்படுகின்றனர்; முதலாளியின் அனுமதி தேவைப்படலாம்,” என்றார் திருவாட்டி தீபா.
ஒவ்வோர் ஊழியரின் தனிப்பட்ட சூழலுக்கும் ஏற்ப நிதி பிரித்து வழங்கப்படும் என்றார் அவர். “ஓர் ஊழியருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் புற்றுநோய்ச் சிகிச்சை தேவைப்பட்டால் அனைத்து நிதியும் அதிலேயே செலவாகக்கூடும். அதனால் ஒவ்வோர் ஊழியருக்கும் ஒதுக்கப்படக்கூடிய அதிகபட்ச நிதியை எதிர்காலத்தில் நிர்ணயிக்கக்கூடும்,” என்றார் திருவாட்டி தீபா.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள அமைச்சர் டான் சீ லெங், “அரசாங்கம், ‘ஐஆர்ஆர்’ போன்ற அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து தம்மால் செய்யக்கூடியதை மேம்படுத்திவருகிறது. சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் நிலைமை வெகுவாக மாறியுள்ளது. இங்கு வரும் ஒவ்வோர் ஊழியரையும் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்தத் திட்டங்களைச் செயலாக்குகிறோம். அவர்களின் உடல், மனநலனைப் பார்த்துக்கொள்கிறோம். மொத்த அடிப்படைப் பராமரிப்புக் கட்டமைப்பும் மாறியுள்ளது. அரசாங்கமே தரமிக்க ஊழியர் தங்குமிடங்களைக் கட்டியுள்ளது,” என்றார்.
சிறுநீரகப் பிரச்சினை உள்ளதால் தன் சிகிச்சைக்கு முதலாளி பணம் கொடுப்பாரா ஊருக்கே அனுப்பிவிடுவாரா எனத் தெரியாமல் தவிக்கும் ஊழியரின் நிலையை எடுத்துரைத்தார் தீபா. “இன்றைய மருத்துவக் காப்புறுதி, அத்தகைய சிகிச்சைக்கான செலவைப் பெரிதும் ஈடுகட்டும் என நம்புகிறேன்,” எனக் கருத்துரைத்தார் அமைச்சர் டான்.
“எனினும், சில நேரங்களில் ஊழியர்களுக்கு மருத்துவச் செலவு காப்பீட்டு வரம்பைத் தாண்டுவதற்கு முன்பே, சொந்த ஊரில் சிகிச்சை மேற்கொள்ள அனுப்பப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்,” என்றார் திருவாட்டி தீபா.
இக்கட்டான சூழலில் உதவிய ‘ஐஆர்ஆர்’
2008 முதல் 2021ஆம் ஆண்டுவரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய காசிராஜன் ரவி, 36, தன் பணியிடத்தில் பாதுகாப்பு விதிமீறல்கள் இருப்பதைக் கண்டு முதலில் நிறுவனத்திடமும் பின்பு மனிதவள அமைச்சிடமும் புகாரளித்தார். “ஆனால் நிறுவனம் எனக்குச் செவிசாய்க்கவில்லை. மாறாக, என்னைப் பணிநீக்கம் செய்தது,” என்றார் அவர்.
ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்த ரவியைத் தடுத்து, ஒரு மாதம் சிங்கப்பூரிலேயே தங்குவதற்கான சிறப்பு வேலை அனுமதிச்சீட்டை (Special Pass) வாங்கித் தர உதவியது ‘ஐஆர்ஆர்’. மனிதவள அமைச்சையும் நிறுவனத்தையும் ஈடுபடுத்தி, ரவியின் பெயரில் களங்கம் ஏற்படாமலிருக்க பேச்சுவார்த்தை நடத்தியது. அதனால், 2023ல் ரவியால் மீண்டும் மற்றொரு வேலை தேடி சிங்கப்பூருக்கு வரமுடிந்தது.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தனது தங்குமிடத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 300 பேருக்கும் ருசியான உணவை ‘ஐஆர்ஆர்’ விநியோகித்ததாகக் கூறினார் வெளிநாட்டு ஊழியர் சுந்தரம் மகேஷ், 41. “ஒரு மாதம் முழுவதும் கிட்டத்தட்ட அன்றாடம் உணவு தந்தார்கள்,” என அவர் பாராட்டினார்.
பத்தாண்டுப் பயணம்
கனமழையில் நனைந்த வெளிநாட்டு ஊழியர்கள் இருவருக்கு உதவ முனைந்தபோது ‘ஐஆர்ஆர்’ அமைப்பைத் தொடங்கும் யோசனை திருவாட்டி தீபாவுக்குத் தோன்றியது. 2015ல் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்துக்காக ஒருநாள் நிகழ்ச்சியுடன் ‘ஐஆர்ஆர்’ தொடங்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் ‘ஐஆர்ஆர்’ 1.1 மில்லியனுக்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள், 650,000க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகித்துள்ளது.
48,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைச் சிங்கப்பூர் முழுவதும் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. 330,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைச் சமூக நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தியுள்ளது. ஊழியர்களுக்கான முதல் இலவசக் கடையைத் தொடங்கி 8,000க்கும் மேற்பட்டோரைச் சென்றடைந்துள்ளது. மொழி வகுப்புகள், பல், கண் நலனுக்கான ஆதரவுடன் 1,600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பயனளித்துள்ளது.