லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் புதிய மரபுடைமை நிலையம், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
சிங்கப்பூர்வாசிகள், வெளிநாட்டவர் உட்பட அனைத்து இனத்தவரும் வழிகாட்டி ஒருவரின் உதவியோடு இந்நிலையத்தை சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, காலை 10 முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 2 முதல் 4 மணி வரையிலும் சுற்றிப் பார்க்கலாம்.
அதிகாரபூர்வத் திறப்புக்கு முன்பே, இவ்வாண்டு ஜனவரியிலிருந்து பொதுமக்களை வரவேற்றுவருகிறது இந்நிலையம்.
“பள்ளிவாசலைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இது நல்வாய்ப்பு. அன்றும் இன்றும் பல சமூகங்கள் பள்ளிவாசலைத் தொழுகைக்காக மட்டுமின்றி சமூகப் பிணைப்புக்காகவும் நாடின,” என்றார் நிலையத்தைத் திறந்துவைத்த முஃப்தி டாக்டர் நசிருதீன் முகம்மது நசிர்.
1859ல் கட்டப்பட்ட அப்துல் கஃபூர் பள்ளிவாசல், 1979ல் தேசிய நினைவுச்சின்னமாக அரசிதழில் இடம்பெற்றது.
“இம்மரபுடைமை நிலையத்திற்கு இரு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, இந்த பள்ளிவாசலின் நீண்டகால வரலாற்றைச் சித்திரிப்பது. நீங்கள் பார்க்கக்கூடிய சுவர்கள் பல கதைகளைக் கேட்டுள்ளன,” என்றார் பள்ளிவாசலின் மேலாளரும், மரபுடைமை நிலையக் காப்பாளருமான முஹம்மது இத்ரீஸ் கமால், 45.
“இரண்டாவதாக, நம் பள்ளிவாசலுக்கு நிறைய மாணவர்கள், சுற்றுப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் நம் பள்ளியின் வடிவமைப்பை மட்டும் ரசித்துச் சென்றார்கள். அதையும் தாண்டி, இஸ்லாமைப் பற்றிய புரிதலை அவர்களிடம் ஏற்படுத்த எண்ணினோம். அதனால் பிறந்ததே இந்நிலையம்,” என்றார் பள்ளிவாசலின் இளையர் பிரிவின் மூத்த நிர்வாகியும் நிலையத்திலுள்ள ‘அல்லாஹ்வின் 99 அழகிய திருநாமங்கள்’ சுவரைத் திட்டமிட்டவருமான உஸ்தாஸ் ஃபஹீம் அஹமத், 26.
இஸ்லாம் பற்றிய பல தவறான தகவல்கள் பகிரப்பட்டுவரும் வேளையில், இஸ்லாம் உண்மையில் அன்பு, மரியாதை, பரிவு, நீதி போன்றவற்றை வலியுறுத்தும் சமயம் என்பதையும் இந்நிலையம்வழிக் காண்பிக்க விரும்பியதாகவும் கூறினார் உஸ்தாஸ் ஃபஹீம்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளிவாசலின் வடிவமைப்பையே கருவாகக் கொண்டு, மரபுடைமை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது ஒரு தனிச் சிறப்பு.
ஜூலை 2024ல் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளிவாசலின் புதிய சின்னத்தையும் நிலையத்தில் காணலாம்.
முக்கிய அம்சங்கள் குறித்த கண்காட்சிகள்
இஸ்லாத்தின் முக்கிய அம்சங்களின் அடிப்படையில், நிலையத்தில் நான்கு அங்கங்கள் இடம்பெறுகின்றன.
பள்ளிவாசலின் தொன்மைமிக்க வரலாறு இடப்பக்கச் சுவரில் இடம்பெறுகிறது. தென்னிந்திய, பவியானீஸ் (Baweanese) சமூகத்தினருக்குச் சேவையாற்றிய காலத்திலிருந்து ஜப்பானிய காலம் தாண்டி இன்றுவரை நடந்தவை இச்சுவரில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் நிறுவனர் ஷேக் அப்துல் கஃபூர், பள்ளிவாசலில் அடித்தளத்தை அமைத்ததோடு பள்ளிவாசலின் கட்டடக் கலைச் சவால்களை எதிர்கொண்ட ஹாஜி ஏ.ஜி. முகமது முஸ்தபா, முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்கு அயராது உழைத்த சையது குலாப் ஷா முதலானோர் பற்றிய தகவல்களும் சுவரில் இடம்பெற்றுள்ளன.
நடுச் சுவரில், ‘அல்லாஹ்வின் 99 அழகிய திருநாமங்கள்’ உள்ளன. நிலையத்தின் நடுவில் புனித குரானின் ஆகப் பழைமையான கையெழுத்துப் படிகளில் ஒன்றின் நகலைக் காணலாம்.
வலப்புறச் சுவரில், நபிகள் நாயகம், இஸ்லாம் பற்றி மிங் வம்ச மன்னர் ‘மாண்டரின்’ மொழியில் எழுதிய பாராட்டுக் கவிதை உள்ளது.
“இந்நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து ஆக அதிகமானோர் தைவானிலிருந்தே வந்திருக்கின்றனர்,” என்றார் திரு இத்ரீஸ்.
நபிகள் நாயகத்தின் உருவத்தை விளக்கும் ‘சொல் உருவப்படம்’, கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஆவணம் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2020 முதல் ஈராண்டுகளாக பள்ளிவாசலின் வரலாறு குறித்து ஃபன்சுரா பானு, ஹசான் பஸ்ரி ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இஸ்லாத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த கண்காட்சிகளை உஸ்தாஸ் சுஃபி சலீம், அஸ்மத் பீவி, உஸ்தாஸ் ஃபஹீம் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். வடிவமைப்பில் ச’அத் இஸ்மைல் குழுவின் முயற்சி அடங்குகிறது.
“இப்பள்ளிவாசலின் வரலாற்றில் இதை மிக முக்கிய நாளாக நான் கருதுகிறேன்,” என்றார் கடந்த 40 ஆண்டுகளாகப் பள்ளிவாசலில் தொண்டூழியராகச் செயல்பட்டு வந்துள்ள திரு அன்வர் அலி, 52.
இதையடுத்து, நிலையம் ஓர் இணையவெளியாகவும் மாற்றப்படும். அது தமிழ், சீன, ஜெர்மானிய, கொரிய, பிரெஞ்சு, இத்தாலிய என பல மொழிகளிலும் இடம்பெறும்.

