18 மாதக் குழந்தையான ருக்ஷன் ரைலனின் பெற்றோரான ஜிராஜ் செல்வராஜுக்கும் கத்ரீனா தாமுக்கும் ‘கிட்ஸ்டார்ட்’ அமைப்பு ஓர் உயிர்நாடியாக இருந்து வருகிறது.
லாப நோக்கமற்ற சிங்கப்பூர் அமைப்பான கிட்ஸ்டார்ட், பிள்ளைப்பருவ வளர்ச்சிக்கான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்குவதன்மூலம் குழந்தைகள் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவி வருகிறது.
“கர்ப்ப காலத்திற்கு முன்பும் பின்பும் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன்,” என்று கூறிய நோயாளி சேவை ஊழியரான திருவாட்டி கத்ரீனா, 30, கிட்ஸ்டார்ட் அமைப்பின் ஆரம்பகால தலையீட்டுத் திட்டங்கள் தமக்கு ஆதரவளித்ததாகச் சொன்னார்.
ரைலனுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதிலிருந்து அவனின் பேச்சு, நடையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவது வரை, கிட்ஸ்டார்ட் அமைப்பைச் சேர்ந்த குழந்தை நிபுணர்கள் தமது வீட்டிற்கு வருவது வழக்கம் என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
“எங்கள் மகனது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் எங்களைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் ரைலனின் முன்னேற்றத்தைக் காணும்போது பெற்றோராக எங்களின் நம்பிக்கை மென்மேலும் வளர்கிறது,” என்றார் சுயதொழில் செய்யும் திரு ஜிராஜ், 30.
சில நாள்களுக்குமுன் தங்களின் இரண்டாவது குழந்தையை வரவேற்ற இந்தத் தம்பதியினர், தங்கள் கவனத்தை இரு குழந்தைகளுக்கும் இடையில் திறம்பட சமநிலைப்படுத்த முடிந்ததற்கு கிட்ஸ்டார்ட் அமைப்பை முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டனர்.
கிட்ஸ்டார்ட் அமைப்பு, எஸ்பி குழுமத்தின் புது முயற்சியான ‘பவர்அப் பிளேடைம்’ திட்டத்தின் அறிமுக விழாவில் சவுத்சைட்@செந்தோசாவில் சனிக்கிழமை (ஜனவரி 4) பங்கேற்ற 1,500 கிட்ஸ்டார்ட் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரில் திரு ஜிராஜின் குடும்பமும் ஒன்றாகும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கிட்ஸ்டார்ட் அமைப்புக்கு $1.1 மில்லியன் மதிப்புடைய காசோலையை வழங்கி, எஸ்பி குழுமம் அதன் பங்காளித்துவத்தை மறு உறுதிப்படுத்தியது. 2021 முதல் மொத்தம் $4.3 மில்லியன் ஆதரவை எஸ்பி குழுமம் கிட்ஸ்டார்ட் அமைப்புக்கு வழங்கியுள்ளது.
குழந்தைகளின் முதல் ஆசிரியராக பெற்றோரை வலுப்படுத்துவதன்மூலம், குழந்தைகளின் மேம்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்க முடிகிறது என்று அமைச்சர் தமது உரையில் கூறினார். எஸ்பி குழுமத்துடனான இந்தப் பங்காளித்துவம், பெருநிறுவன ஆதரவு எவ்வாறு சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு உதாரணமாக அமைவதாகவும் அவர் கூறினார்.
‘பவர்அப் பிளேடைம்’-இன் முக்கிய அம்சமாக ‘பிளேஃபுல் பேக்’ என்ற விளையாட்டு அடிப்படையிலான வீட்டுக் கற்றல் கருவிகளை உள்ளடக்கிய தொகுப்பு ஒன்று அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.
பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு அறிவாற்றல், மொழி, உடலியக்கத் திறன்கள் முதலியவற்றை வளர்க்கும் நோக்கத்துடன் இத்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உணர்வுகளையும் கற்பனைத் திறன்களையும் தூண்டும் புத்தகங்கள், பொம்மைகள், வெவ்வேறு வயதினருக்கு ஏற்ற கைவினைப் பொருள்கள் போன்றவை அதில் உள்ளன.
“குழந்தைகள் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள விளையாட்டு ஒரு சிறந்த வழி. பிளேஃபுல் பேக்கில் உள்ள கருவிகள், அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டுவதோடு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், சமூகத் திறன்களை வளர்க்கவும் உதவும் என்று நம்புகிறோம்,” என்று கிட்ஸ்டார்ட்டின் ஆரம்பகால குழந்தைப்பருவ ஆலோசகரான திருவாட்டி புஷ்பவல்லி நமசிவாயம், 65, கூறினார்.
இந்நிகழ்ச்சியில் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் இணைந்து கைவினைப் பயிலரங்கில் பங்கேற்றதோடு, கதை சொல்லும் மேடை நிகழ்ச்சி, ‘ஃபைன்டிங் நீமோ’ திரைப்படம் ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.

