“நான் வேலை தேடிச் சென்றபோதெல்லாம், எனது ஓ நிலை தேர்வு முடிவுகளைப் பற்றியே எப்போதும் கேட்கப்பட்டது. அப்போதுதான் கல்வியின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன்,” என்று 35 வயது சிறைவாசியான முத்து (உண்மைப் பெயர் அன்று) பகிர்ந்துகொண்டார்.
இவர் அணமையில் நடந்த ஜிசிஇ என் நிலை தேர்வில் கணிதம் மற்றும் கணக்கியல் விதிகள் (Principles of Accounts) பாடங்களில் முதல்நிலை தேர்ச்சிபெற்றுள்ளார்.
“எனது தாயின் ஊக்கம் நான் சிறப்பாகச் செயல்பட உதவியது. நான் வேலைக்குச் சென்றவுடன் அவரை நன்கு கவனித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார் முத்து.
அவரது 66 வயது தாயாரும் பெருமையுடன் கூறுகையில்: “நன்றாகப் படித்துச் சிறப்பாக வாழும்படி நான் எப்போதும் அவனை ஊக்குவிப்பேன். என்ன நடந்தாலும் நான் அவனுடன் இருப்பேன். அவன் கடினமாக உழைப்பவன். அவனை நினைத்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்,” என்றார்.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிங்கப்பூர் சிறைத்துறை, இன்ஸ்டிடியூஷன் தானா மேரா 1-ல் சிறைவாசிகளின் ‘ஓ’ நிலை தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை நடத்தியது.
2025ஆம் ஆண்டு தேசியத் தேர்வு முடிவுகளைக் கொண்டாடும் வகையில், சிறைவாசி மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.
மறுவாழ்வுச் செயல்பாட்டில் தனிமனித உறுதிக்கும் குடும்ப ஆதரவிற்கும் இடையிலான பிணைப்பை இவ்விழா முன்னிலைப்படுத்தியது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம், மாணவர்களின் ஒழுக்கத்தைப் பாராட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பலர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்வி கற்க வந்துள்ளதை அவர் பாராட்டினார். தற்போது, ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் சிறைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
அவர்கள் வழக்கநிலை, சாதாரண நிலை மற்றும் மேல்நிலை முதல் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படும் பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் வரை பயில்கின்றனர்.
முத்துவின் பயணம் இந்த மாற்றத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
16 வயதில் பள்ளியைவிட்டு வெளியேறிய அவர், தற்போது 35 வயதில் தனது படிப்பிற்கு இடையே பியானோ கற்கவும், உயர்நிலைக் கணிதத்தைத் (Advanced Mathematics) தாமாகவே பயிலவும் நேரம் ஒதுக்குகிறார்.
ஒரு பொறியாளராக வேண்டும் என்ற லட்சியத்துடன், தனது அடுத்த இலக்கான ஓ நிலை தேர்வில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
சிறைவாசம் என்பது குறிப்பிடத்தக்க கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிகான காலமாக இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

