தமிழக, மலேசிய வானொலிகளில் புதிய உள்ளூர்ப் பாடல்

3 mins read
e564466f-79e6-47f6-b811-5e6b9c849be8
உள்ளூர் நடிகையாகவும் பாடகராகவும் திகழும் ஷேரன் ஷோபனா, 31, பாடலாசிரியராகவும் விளங்குகிறார். - படம்: சுந்தர நடராஜ்

பல தலைமுறைகளாகச் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் சூழலில் பிறந்த உள்ளூர்க் கலைஞர் ஷேரன் ஷோபனா, 31, இங்குள்ள சராசரி சிங்கப்பூரரைப் போலவே தமிழக மக்களுடனான தொடர்புகள் அதிகமின்றி வளர்ந்தார்.

சிறுபான்மை இனத்தவராக இருந்து ஆங்கிலம் பேசும் சூழலில் வளர்ந்த இளம் இசையமைப்பாளர் ஒருவர்க்குத் தமிழ்நாட்டின் கிராமப்புறச் சூழலுக்கு ஏற்ற பாடல் ஒன்றை உருவாக்க முடியுமா என்பதில் ஐயப்பாடுகள் இருக்கக்கூடும்.

இருந்தபோதும், கிராமத்துக் காதலைப் பற்றிய ‘அடியேய் அடியேய்’ என்ற பாடலை அவர் வெற்றிகரமாகத் தயாரித்து வெளியிட்டார். 

முழுநேரமாகப் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி நிர்வாகியாகப் பணியாற்றிய ஷோபனா, ஓய்வு நேரத்தில் இந்த இசைப்பயணத்தை ஆர்வத்துடன் மேற்கொள்கிறார்.

செப்டம்பர் 14ல் ‘அடியேய் அடியேய்’ பாடல் காணொளி, வெளியீடு கண்டது.

தமிழ்த் திரைப்பாடகர் சத்யபிரகாஷுடன் இணைந்து ஷோபனா பாடிய பாடல், தயாரிப்பாளர் அம்ரிஷ்வியின் துணையுடன் உருவாக்கப்பட்டது.

இந்தப் பாடல் காணொளிக்கான படப்பிடிப்பு தமிழகத்தில் நடந்தது. சென்னையின் ரேடியோசிட்டி, மலேசியாவின் ராகா ஆகிய ஒலிவழிகளில் அப்பாடலுக்கான ஒளிபரப்பு வாய்ப்பு கிடைத்த களிப்புடன் ஷோபனா, ஒலி 96.8க்கும் பேட்டி தந்திருந்தார். 

பிறகு, நவம்பர் 14ல்  ‘ஓ மை பேபி’ என்ற பாடலையும் அவர் வெளியிட்டார்.  ‘இந்தியா ல்பம்’ பாட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ‘ஓ மை பேபி’ பாடல் இரண்டு விருதுகளைப் பெற்றது.

நடிகராகவும் பாடகராகவும் பல ஆண்டுகளாகச் செயல்பட்ட ஷோபனா, மேலும் உயர வேண்டும் என்ற வேட்கையைக் கொண்டவர்.

‘வசந்தம் ஸ்டார்’ பாட்டுத்திறன் போட்டி 2017ல் மூன்றாவது இடத்தை வென்ற அவர், இனிய குரலுக்கு மட்டுமன்றி பாடல் புனையும் திறனுக்கும் சொந்தக்காரர்.

“முதன்முதலாக ‘விழிகள்’ என்ற தனிப்பாடலை எழுதி,  2018ல்  மலேசிய இசைக்கலைஞர் சைக்கோமந்த்ராவுடன் இணைந்து வெளியிட்டேன். தயாரிப்புப் பெருநிறுவனங்களை சாராமல் பாடலைத் தனித்து வெளியிட்டேன்,” என்று ஷோபனா கூறினார்.

தனிப்பட்ட பாடல் பதிவுகளுக்கும் காணொளிகளுக்கும் எத்தகைய பண்புகள், எழுத்துநடை, காட்சிகள் தேவைப்பட்டன என்பதையும் திரைப்படக் காட்சிகளுக்கு உரித்த ஒளி, ஒலி பாணியை விரும்புகையில் அதிலுள்ள சவால்களையும் அவர் விளக்கினார்.

“இதற்கான வளங்கள், இந்தியா, மலேசியா போன்ற பெரிய நாடுகளில் அதிகமாக உள்ளன,” என்றார் அவர். 

“இந்த வளங்களைப் பயன்படுத்த முற்படுவது சிங்கப்பூர்த் தமிழ்க் கலைஞர்களுக்கு நல்லது. பெரிதான அரங்கிற்காகவும் அதனைக் கையாளும் அனுபவமிக்கத் தொழில்நுட்பர்களுக்காகவும் தமிழ்நாடு சென்றிருந்தேன். எனது பாடல் படைப்புக்கு அவை தேவைப்பட்டன,” என்றும் அவர் கூறினார். 

வளரும் கலைஞர்களுடன் பணியாற்ற ஆசைப்பட்டதாகக் கூறிய ஷோபனா, ‘அடியேய் அடியேய்’ பாடலுக்காகக் கிட்டத்தட்ட 80 பேருடன் இணைந்து பணியாற்றியதாகக் கூறினார்.  “அவர்களில் பலர் 23 அல்லது 24 வயது மதிக்கத்தக்கவர்கள். கடும் உழைப்பாளிகள். அவர்களின் திறமையைக் கண்டு வியந்தேன்,” என்றார் ஷோபனா.

வசந்தம் ஒளிவழியில் வாசித்த இசை இயக்குநர் நிலேஷ் இந்தப் பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண், மற்றொரு நாட்டில் பெரும் குழுவை வழிநடத்துவது எளிதன்று என்றாலும் நல்ல உள்ளங்களின் ஆதரவால் அதனை நிறைவேற்றியதாக ஷோபனா கூறினார். 

“இரு நாடுகளுக்கும் இடையிலான வேலைக் கலாசாரம் மாறுபட்டது. அத்துடன், பணத்தை நிர்வாகம் செய்வதிலும் கவனமாக இருந்தேன்,” என்று அவர் கூறினார்.

“எல்லாவற்றுக்கும் மேலாக, எனது முழுநேர வேலையில் இருந்துகொண்டு இதனையும் செய்து முடித்தேன். சிலமுறை தொடர்ந்து 24 மணி நேரத்துக்குமேல் செயலாற்றியிருக்கிறேன்,” என்றும் ஷோபனா கூறினார். 

இத்தகைய ஒரு பாடல் காணொளியைத் தயாரிப்பதற்கான கட்டணம் கிட்டத்தட்ட 10,000 வெள்ளி. இருந்தபோதும், இசையின்மீதும் ரசிகர்களின்மீதுமுள்ள அன்பால் தன்னார்வத் தயாரிப்பாளராகத் தொடர்வதாக ஷோபனா கூறினார். 

இந்தப் பாடல்களைப் பெரியதோர் அரங்கில் பாடும் கனவை இவர் கொண்டுள்ளார். “அத்துடன், திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் பாடல் எழுத விரும்புகிறேன்”, என்று கூறும் ஷோபனா, 2025ன் இறுதியில் இரண்டு பாடல்களைப் புதிதாக வெளியிட்டுள்ள மனநிறைவுடன் அடுத்த ஆண்டுக்குள் அடியெடுக்கக் காத்திருக்கிறார். 

குறிப்புச் சொற்கள்