எடைக் குறைப்புக்கு அரிசி உணவைத் தவிர்க்கத் தேவையில்லை: சத்துணவு நிபுணர்

எடைக் குறைப்புக்கு அரிசி உணவைத் தவிர்க்கத் தேவையில்லை: சத்துணவு நிபுணர்

3 mins read
582fe89c-6e19-4806-bce9-1d4a76c84362
எடையைக் குறைக்கவும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் அரிசி உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கும் போக்கு அதிகரித்துவருகிறது. - படம்: இந்தியா டுடே

உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும்போது, பலரும் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியலையே முதலில் தயாரிக்கின்றனர்.

அரிசி உணவைச் சாப்பிட்டால் எடை கூடும், நெய்யை உணவிலிருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும், வாழைப்பழத்தில் இயற்கைச் சர்க்கரை அதிகம் என்பதால் அதைச் சாப்பிடக் கூடாது போன்ற பல கருத்துகள் உள்ளன.

ஆனால், உண்மையிலேயே இந்த உணவுகள்தான் உடல் எடை கூடுவதற்குக் காரணமா?

இந்தியாவின் பிரபல சத்துணவு நிபுணர் ருஜுதா திவேகர் அண்மையில் வெளியிட்ட காணொளியில், உடல் எடைக் குறைப்பு குறித்த தவறான எண்ணங்களுக்குத் தெளிவாக விளக்கமளித்தார்.

அரிசி, நெய், வாழைப்பழம் ஆகியவற்றை முற்றிலுமாக நீக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவற்றை எவ்வாறு சரியான முறையில் பிற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் ரகசியம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எடையைக் குறைக்கவும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கும் போக்கு அதிகரித்துவரும் சூழலில் இவரது கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அரிசி உணவை ஒதுக்குதுல்

காய்கறிகள், புரதச்சத்துமிக்க உணவுகளுடன் சேர்த்து அரிசிச் சோற்றை உண்ணும்போது அது ஒரு சமச்சீரான உணவின் அங்கமாக மாறுகிறது.

மாவுச்சத்துடன் புரதச்சத்தையும் நார்ச்சத்தையும் சேர்த்து உண்ணும்போது, அது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடிரென உயர்வதைக் கட்டுப்படுத்தத் துணைபுரிவதாக ருஜுதா திவேகர் கூறினார்.

நீரிழிவு நோயாளிகள் தங்களது மாவுச்சத்தின் அளவைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாலும், அரிசியை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாயமில்லை என்றார் அவர்.

நெய்யைக் கண்டு அச்சம்

எடைக் குறைப்பு முயற்சியின்போது உணவிலிருந்து நீக்கப்படும் மற்றொரு பொருள் நெய். ஆனால், உணவில் உள்ள கொழுப்புச்சத்தை முழுமையாகத் தவிர்ப்பது அவசியமற்றது என்று அவர் கூறுகிறார்.

நெய்யில் உடலுக்கு நன்மை பயக்கும் அமிலமும் வைட்டமின் ஏ, டி, ஈ போன்ற கொழுப்பில் கரையும் அத்தியாவசிய வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

எனவே, நெய்யைத் தவிர்க்க வேண்டிய உணவாகக் கருதாமல், அரிசி சோறு, ரொட்டி, பருப்பு ஆகியவற்றுடன் மிதமான அளவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பது அவரது பரிந்துரை.

வாழைப்பழம் தவிர்ப்பு

வாழைப்பழத்தில் இயற்கைச் சர்க்கரை இருப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தையும் திவேகர் மறுத்துள்ளார். ஒரு முழு வாழைப்பழத்தில் மாவுச்சத்துடன் சேர்த்து நார்ச்சத்தும், பல்வேறு வைட்டமின்களும், கனிமச்சத்தும் நிறைந்துள்ளன.

செயற்கைச் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும் பானங்களையும் உண்பதற்கும் இயற்கையான பழங்களை உண்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

நீரிழிவு நோயாளிகள் தங்களது ஒட்டுமொத்த மாவுச்சத்தின் அளவைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்தான்.

அதற்காக, இனிப்புச் சுவை கொண்ட பழம் என்பதால் மட்டுமே வாழைப்பழத்தை உணவிலிருந்து முற்றிலும் ஒதுக்க வேண்டியதில்லை என்கிறார் ருஜுதா திவேகர்.

கடுமையான உணவுக் கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதே அவரின் ஒரே கருத்து.

குறிப்பிட்ட உணவுகளை ஒதுக்குவதைவிட, உணவின் ஒட்டுமொத்த அளவு, ஊட்டச்சத்துச் சமநிலை, தனிநபரின் உடல்நலத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வதே ஆரோக்கியமான அணுகுமுறையாகும்.

எனவே, தினசரி உணவில் அரிசி, நெய், வாழைப்பழம் ஆகியவற்றுக்குத் தகுந்த இடம் உண்டு.

உணவுகளை நல்லவை கெட்டவை எனப் பிரிக்காமல், எதை எவ்வளவு சாப்பிட வேண்டும், எவற்றுடன் சேர்த்து உண்ண வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது உடல்நல இலக்குகளை அடைய உதவும்.

குறிப்புச் சொற்கள்