ஓர் உன்னத நோக்கத்திற்காக, பல்லின இசைப் பிரியர்களை ஒரே மேடையில் இணைத்தது ‘சிங் ஃபார் ஹோப்’ எனும் நிதி திரட்டு நிகழ்ச்சி.
சனிக்கிழமை (அக்டோபர் 5) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கிட்டத்தட்ட 100 இசை அன்பர்கள் தோளோடு தோள் நின்று வெவ்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி பார்வையாளர்களை இசை மழையில் நனைத்தனர்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ‘சிங்கப்பூர் மெலடி பீட்ஸ்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பு, நிதி திரட்டு மூலம் கிடைத்த $5,000 தொகையை சிங்கப்பூர்ப் புற்றுநோய்ச் சங்கத்திற்கு நன்கொடை அளித்துள்ளது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தது.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கவும் வசதி குறைந்த புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கவும் நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் பாடியவர்கள் ஒவ்வொருவரும் $50 நன்கொடை அளித்தனர்.
தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சியின் தொடக்க அங்கத்தில் மத்திய சிங்கப்பூர் வட்டார மேயரும் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெனிஸ் புவா கலந்துகொண்டார்.
“நம் நாட்டின் பன்முகக் கலாசாரத்தை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. சிங்கப்பூரில் புற்றுநோய் உயிர்க்கொல்லியாக இருந்துவரும் நிலையில் ‘சிங்கப்பூர் மெலடி பீட்ஸ்’ போன்ற அமைப்புகள் முன்வந்து நிதி திரட்டுக்கு ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியது.
“பிரதமர் லாரன்ஸ் வோங் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் குறித்து கூறியதுபோல, அரசாங்கம் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும், அடிப்படையில் நம் சமூக அமைப்புகளும் முன்வர வேண்டும். எடுத்துக்காட்டாக, லிட்டில் இந்தியாவில் லிஷா போன்ற அமைப்புகள் செயல்படுவது அவசியம். இது மேன்மேலும் தொடரவேண்டும்,” என்று திருவாட்டி புவா கேட்டுக்கொண்டார்.
உள்ளூர் இசைக் கலைஞர்கள் முகம்மது ரஃபியும் இர்ஃபானுல்லாவும் நிகழ்ச்சியில் பாடினர்.
தொடர்புடைய செய்திகள்
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட ‘சிங்கப்பூர் மெலடி பீட்ஸ்’, 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக வளர்ந்துள்ளது.
பாடுவதில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரையும் ஊக்குவித்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து, பாடுவதற்குத் தளமும் அமைத்துத் தந்து, ‘கராவோக்கே’ முறையில் அவர்களைப் பாடச் சொல்லி அவர்களது ஆற்றலை வளர்த்துவரும் பணியில் அவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது.
“நாங்கள் பல்வேறு வகையில் சேவையாற்ற முனைந்து வருகிறோம். இதற்கு முன்னர், சிங்கப்பூர் போதைப் புழங்கிகள் மறுவாழ்வு மையத்திலும் நிகழ்ச்சி நடத்தினோம். சமூகத்தில் உதவி தேவைப்படுவோர் அதிகம் இருக்கின்றனர். எங்களால் இயன்றவரை அவர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டுவோம்,” என்றார் சிங்கப்பூர் மெலடி பீட்ஸ் அமைப்பின் தலைவர் முகம்மது சாதிக்.
“ஒரு புற்றுநோயாளி மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளும்போது, அவர் பலவழிகளிலும் அழுத்தத்திற்கு ஆளாகிறார். அதன் பொருட்டு, இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகள் எங்களுக்கு பேராதரவு தருகின்றன. இவற்றை நான் வரவேற்கிறேன்,” என்றார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மல்லிகா பெரியசாமி, 53.

