நோர்டிக் நடைப்பயிற்சி மீதான ஆர்வம் அதிகரிப்பு

2 mins read
619c69b7-cd78-4d26-93f5-6528557ac9fd
நோர்டிக் நடைப்பயிற்சி ஃபின்லாந்தில் அறிமுகமானது. - படம்: சுமன் லாட்டு

அதிகரித்துவரும் வெவ்வேறு உடற்பயிற்சி வகைகளில் அண்மைய காலமாக அதிகமானோரை ஈர்க்கிறது ‘நோர்டிக்’ நடைபயிற்சி.

முதலில் ஃபின்லாந்தில் கோடைக்காலப் பயிற்சி முறையாக உருவாக்கப்பட்ட இந்த எளிய ஆனால் மிகவும் பயனுள்ள பயிற்சி, இப்போது உலகெங்கிலும் உள்ள அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த உடற்பயிற்சி ஆர்வலர்களால் விரும்பப்படுகிறது.

பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போலவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கம்புகளுடன் இந்த நோர்டிக் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பாரம்பரிய நடைபயிற்சியைப் போலன்றி இது உடலின் மேல், கீழ் பகுதிகளை ஒரே நேரத்தில் ஈடுபடுத்தி 90 விழுக்காட்டுத் தசைகள் வேலை செய்ய வழியமைக்கிறது.

உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி இது வழக்கமான நடைபயிற்சி அல்லது மெதுவோட்டத்தைவிட மிகவும் விரிவான பயிற்சியாக அமைகிறது. இது அனைத்து மூட்டுகளிலும் குறைவான அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் மிக ஆர்வமாகப் பார்க்கப்படும் காணொளிகளில் நோர்டிக் நடைப்பயிற்சி தொடர்பான காணொளிகள் உள்ளன.

உடல் இயக்கச் சிகிச்சையாளர்கள், உடல்நலப் பயிற்சியாளர்களின் ஒப்புதல்களுடன் சேர்ந்து நோர்டிக் நடைப்பயிற்சி வயது சார்ந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

நோர்டிக் நடைப்பயிற்சிகளை விளக்கும் டிக்டோக் காணொளிகளும், சமூக ஊடகப் பிரபலங்களின் உடல்நலம் சார்ந்த காணொளிப் பதிவுகளும் இந்தப் பயிற்சியின் பரவலான ஈர்ப்புக்குப் பங்களித்துள்ளன.

நகர்ப்புறவாசிகள்கூட பாதைகள், பூங்காக்கள், நகர நடைபாதைகளில் இந்தக் கம்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கமான நடைப்பயிற்சியை விட இது 46 விழுக்காடு அதிக கலோரிகளைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இது ஒருவரின் ஒருங்கிணைப்பையும், சமநிலையையும் மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக மூத்தோருக்கு இது மிகச் சிறந்த தேர்வு.

முக்கிய நகரங்களில் நடைபெறும் உடற்பயிற்சி வகுப்புகள், குழு நடைப்பயிற்சிகள் போன்றவற்றில் பயிற்றுநர்கள் இதைக் குறைந்த தாக்கம், அதிக வெகுமதி கொண்ட பயிற்சி என்று கூறுகின்றனர்.

உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யப்படும் பயிற்சிகளின் தீவிரத்தைவிட உடலுறுதியைப் பேணும் வழிகளை அதிகமானோர் நாடுவதால், வெளிப்புற உடற்பயிற்சியில் நோர்டிக் நடைப்பயிற்சி பெரிதும் முக்கியமானதாக மாறக்கூடும்.

குறிப்புச் சொற்கள்