தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி குறித்து விழிப்புணர்வூட்டும் இணைய அனுபவம்

2 mins read
e3049b31-33d9-4e22-9a4b-c65075d17582
மோசடிப் பேர்வழிகள் தொடர்ந்து பல்வேறு செயலிகள், தளங்கள்வழி அப்பாவிகளைக் குறிவைத்துச் செயல்படுகின்றனர். - படம்: EYEAH!

சிங்கப்பூரில் பரவலாகக் காணப்படும் மோசடி வலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மெட்டா நிறுவனம், தேசிய குற்றத் தடுப்பு மன்றம், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து ‘EYEAH!’ எனும் இருவழித்தொடர்பு இணைய அனுபவத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஆசிய பசிபிக் வட்டார அளவில் 15 நாடுகளில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுத் திட்டங்களின் ஒரு பகுதியாக இது அறிமுகம் கண்டுள்ளது. இது, ஏழு பொதுவான மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறை உதவிக்குறிப்புகளை வழங்குகிறது.

காதல் மோசடி, இணையவழிப் பொருள் வாங்கும் மோசடி, ஆள்மாறாட்ட மோசடி, முதலீட்டு மோசடி, வேலை மோசடி, சமூக ஊடகக் கணக்கு ஊடுருவல் மோசடி, குறுந்தகவல்வழி மோசடி ஆகியவை குறித்து விளக்கமளிக்கிறது.

இந்த இணைய அனுபவம், விளையாட்டுகள்வழி மோசடி தொடர்பான சொற்கள், செயல்பாடுகள் குறித்துக் கற்பிப்பதுடன், கவனமும் மேம்பட உதவுகிறது. மோசடிக்கு எதிரான பாதுகாப்புக்கு எட்டு அம்சங்களையும் வலியுறுத்துகிறது.

மோசடி போக்குகள் குறித்து அறிந்திருத்தல்

அண்மைக்கால மோசடிப் போக்குகள் குறித்து அறிந்துகொள்ள ‘ஸ்கேம்ஷீல்டு’ அல்லது சிங்கப்பூர்க் காவல்துறை உட்பட நம்பகமான வழிகளைப் பின்தொடரலாம்.

சற்றுப் பொறுத்து பதிலளித்தல்

மோசடிப் பேர்வழிகள் பெரும்பாலும் அச்சத்தையும் அவசரத்தையும் பயன்படுத்தி, விரைந்து செயல்படத் தூண்டுகின்றனர். அவர்களுக்கு உடனடியாகச் செவிமடுக்காமல் சற்று நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவது மோசடி வலையில் விழாமல் காக்கும்.

உரையாடல்களை ஊக்குவித்தல்

மோசடிகள் அமைதியில் தழைக்கின்றன. விரும்பத்தகாத, நெருடலான முடிவுகளை மேற்கொள்வதற்குமுன் உறவினர், நண்பர்களிடம் மறுவுறுதிப்படுத்திக்கொள்வது பாதுகாப்பை வலுப்படுத்தும்.

சந்தேகமளிக்கும் குறுஞ்செய்திகள்

நம்பமுடியாத அளவில் சலுகைகள் கிடைத்தால், உடனடியாக அனுப்புநரை முடக்குவதுடன் புகாரளிப்பதும் முக்கியம்.

சமூக ஊடகங்களில் புதிய தொடர்புகள்

நண்பர்கள் வட்டாரம் அல்லாத புதிய கணக்கிலிருந்து வரும் சந்தேகத்துகுரிய குறுஞ்செய்திகள் குறித்து கவனமாக இருப்பது அவசியம். அண்மையில் தொடங்கப்பட்ட கணக்கு, ஒருவரையொருவர் பின்தொடராத கணக்கு ஆகிய எச்சரிக்கைச் செய்திகளை அலட்சியப்படுத்தாமல் கவனிப்பது சிறந்தது.

ஈரடுக்குப் பாதுகாப்பு அம்சம்

இணையவழிக் கணக்குகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்த அம்சத்தைப் பயன்படுத்துவது, கணக்குகள் ஊடுருவப்படாமல் பாதுகாக்கும். மறைச்சொல் திருடப்பட்டாலும், அங்கீகரிக்கப்படாத அணுகலை இந்த அம்சம் தடுக்கிறது.

தனியுரிமை அமைப்புத் தெரிவுகள்

சமூக ஊடகக் கணக்குகளில் தொடர்புகொள்வோரைக் கட்டுப்படுத்துதல், தனிப்பட்ட தகவல்களை யார் பார்க்கலாம் எனும் தெரிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, தேவையற்ற தொடர்புகளைத் தவிர்க்க உதவுகிறது.

இணைய ஆள்மாறாட்டம் குறித்துப் புகாரளித்தல்

எவரேனும் பிறரைப் போலத் தோற்றமளிக்கும் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவது தெரியவந்தால் செயலியில் உள்ள அம்சங்கள்மூலம் அதுகுறித்துப் புகாரளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்