கடந்த ஆண்டில் சிங்கப்பூர்வாசிகளில் 58 விழுக்காட்டினர் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் சராசரியாக இந்த விகிதம் 48 விழுக்காடாகும்.
பணி, தனிப்பட்ட ஆர்வமுள்ள திட்டங்கள், கல்வி எனப் பல்வேறு வகைச் செயல்பாடுகளுக்கு சிங்கப்பூர்வாசிகள் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக ஆய்வு கூறியுள்ளது.
கூகல் நிறுவனம், IPSOS நிறுவனத்துடன் இணைந்து, புத்தாக்கம் முதல் பயன்பாடு வரை செயற்கை நுண்ணறிவுடன் இயைந்த வாழ்வு குறித்து அனைத்துலக அளவில் நடத்திய இந்த ஆய்வில் 21 நாடுகளைச் சேர்ந்த 21,000 பேர் பங்கேற்றனர்.
செயற்கை நுண்ணறிவு குறித்த மனப்போக்கு, சமூகத்தில் அதன் தாக்கம், தனிப்பட்ட வகையிலும் பணியிலும் அவற்றின் பயன்பாடு தரும் நன்மைகள் எனப் பல்வேறு கூறுகளை ஆராயும் விதமாக நடந்த இந்த ஆய்வு, தெற்காசியாவிலும் அதையொட்டிய வளர்ந்து வரும் நாடுகளிலும் வசிப்போர் இந்தத் தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்துவதாகத் தெரிவித்தது.
அனைத்துலக அளவில் செயற்கை நுண்ணறிவு குறித்துக் கலவையான கருத்துகள் இருந்தாலும், சிங்கப்பூரில் அது குறித்த ஆர்வமும் உற்சாகமும் அதிகரித்து வருவதை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில், பயன்படுத்துவோரில் 58 விழுக்காட்டினர் இந்தத் தொழில்நுட்பத்தின் திறன், ஆற்றல் குறித்து நேர்மறைக் கருத்துகளைக் கூறியுள்ளனர். மீதமுள்ள 42 விழுக்காட்டினர் அதன் அபாயக் கூறுகள் குறித்துக் கவலை தெரிவித்தனர் என்கிறது ஆய்வு.
செயற்கை நுண்ணறிவால் நன்மை விளையும் என்று கருதும் போக்கும் உலகச் சராசரியைவிட (59%) சிங்கப்பூரில் அதிகம் (72%) என்பதை ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவை அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் மேம்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு 54 விழுக்காட்டினர் முன்னுரிமை அளிப்பதை ஆய்வு கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அத்தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படக்கூடிய துறைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு 46 விழுக்காட்டினர் ஆதரவளிப்பதாகவும் அது கூறியது.
செயற்கை நுண்ணறிவால் இணையத் தகவல்களை எளிதில் அணுகமுடிவது 80 விழுக்காட்டினருக்கு உற்சாகமளிப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், சிங்கப்பூரில் பதிலளித்தோரில் 74 விழுக்காட்டினர் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை அன்றாடப் பணிகளை நிர்வகிக்கும் தனிப்பட்ட உதவியாளராகவும் 72 விழுக்காட்டினர் தனிப்பயனாக்கப்பட்ட ஆசிரியராகவும் பயன்படுத்துவதை ஆய்வு சுட்டியது.
நீளமான, புரிந்துகொள்ளக் கடினமான தகவல்களைப் படித்து, எளிதாக்கித் தரும் அதன் திறனைப் பலர் பயன்படுத்துவதாக ஆய்வு தெரிவித்தது.
அறிவியல், வேளாண்மை, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நேர்மறைத் தாக்கம் ஏற்படும் எனச் சிங்கப்பூரர்கள் நம்புவதாகத் தெரியவந்துள்ளது.
பொதுச்சேவை, பொருளியல் முன்னேற்றம் உள்ளிட்ட பல துறைகளிலும் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவைத் திறம்படப் பயன்படுத்துவதாகவும் அது தொடர்பான பொது-தனியார் கூட்டாண்மைக்குப் போதிய ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் சிங்கப்பூரர்கள் நம்புவதை ஆய்வு குறிப்பிட்டது.
ஜப்பான், தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடுகையில் வலுவான செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை உருவாக்கச் சிங்கப்பூரர்கள் அதிகம் உறுதிகொண்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.