சிங்கப்பூரிலுள்ள கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் தொழிலை வெளிநாட்டு ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
சிலேத்தாரிலுள்ள ‘பிபிடி’ (PPT) தங்குவிடுதியில் உள்ள கிட்டத்தட்ட முப்பது ஊழியர்கள், தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பி, ஆர்வத்துடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாகவே தங்குவிடுதியின் தரைத்தளத்தில் உள்ள ஓர் அறை அவர்களுக்கான உடற்பயிற்சிக் கூடமாகச் செயல்பட்டு வருகிறது.
உடற்பயிற்சிக்கான கருவிகளை ஊழியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் வாங்கி, படிப்படியாக அந்தக் கூடத்தை மேம்படுத்தியதோடு, தங்களது உடற்கட்டையும் மெருகேற்றி வருகின்றனர்.
அலுவலக வேலையால் களைத்துப்போன நிலையில் நம்மால் எப்படி உடற்பயற்சி செய்ய முடியும் என நினைக்கும் சிலர், இவர்களது ஆர்வத்தையும் கடப்பாட்டையும் கண்டு வியக்கலாம்.
நாள்தோறும் கட்டுமானத்தளங்களிலும் மற்ற பல இடங்களிலும் உழைத்து, பல நேரங்களில் வேலையிட ஆபத்துகளையும் சந்திக்கின்றனர் தங்குவிடுதிகளில் வசிக்கும் இந்த உழைப்பாளிகள்.
மேலும், நம்மை வியக்க வைக்கும் பல்வேறு திறமைகளையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். அந்தத் திறன்களுக்கு உரிய இடமளித்து, அவர்களைச் சிறப்பிப்பது சிங்கப்பூர்ச் சமூகத்தினரான நமது கடமை.
டிசம்பர் 8ஆம் தேதியன்று சிங்கப்பூர்ப் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களுடன் ‘பிபிடி’ தங்குவிடுதியிலுள்ள எடை தூக்கும் பயிலரங்கில் வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் இணைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களும் ஊழியர்களும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திய கலகலப்பான, அருமையான காலைப்பொழுதாக அது அமைந்தது.
கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் கட்டுடல் பேணுவதில் ஆர்வம்
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் தனமோகன், 31, கடந்த 10 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இவரால் யாருடைய உதவியுமின்றி 200 கிலோ எடை வரையிலும் தூக்க முடியும்.
நல்ல உயரம், அகலமான தோள், செதுக்கப்பட்டது போன்ற இடை, வலுவான கால்களைக் கொண்டிருந்தாலும் பணிவிற்கும் அவரிடம் குறைவில்லை.
அண்மையில் திருமணம் செய்துகொண்ட திரு மோகன், சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானார்.
தங்குவிடுதியில் நண்பர்களுடன் அடிக்கடி உடற்பயிற்சிக்கூடம் சென்று உடலுக்கு உரம் சேர்ப்பதில் இவர் மகிழ்ச்சி கொள்கிறார்.
இளவயது முதலே உடற்பயிற்சி செய்து வந்த திரு மோகன், சிங்கப்பூரிலுள்ள உடற்பயிற்சிக் கூடங்களைக் கண்டு அங்குள்ள கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.
“வேலை நேரம் எப்போதுமே ஒரே நேரத்தில் முடியாது. காலையில் தொடங்கும் வேலை சில நேரங்களில் இரவு ஏழு, பத்து மணிவரை நீளும். சில நேரங்களில் இரவு நேர வேலையும் உண்டு. அதற்குத் தகுந்தாற்போல் நான் என் நேரத்தை வகுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வேன்,” என்று அவர் கூறினார்.
உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், ஒருநாளும் சோம்பல் நம்மை அண்டாது என்பது அவரது அறிவுரை.
பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் தங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்தது புதுமையான, உற்சாகமான அனுபவமாக இருந்ததாகக் குறிப்பட்ட திரு மோகன், அந்த மாணவர்களுடன் இணைந்து மறுபடியும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறார்.
சகோதரர்களாக இணைகின்றனர்
ஆண்கள் என்ற முறையில் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பழகுவதற்கு உடற்பயிற்சிக்கூடம் அருமையானதொரு தளத்தை ஏற்படுத்தித் தருவதாக தமிழ் முரசிடம் கூறினார் அரியலூர் மாவட்டத்திலுள்ள தவுத்தாய்குலத்தைச் சேர்ந்த ஒப்பிலாமணி கோபி, 45.
தமிழர்களுடன் மட்டுமல்லாமல் பிற மொழி பேசும் இந்தியர்கள், பங்ளாதேஷியர், மியன்மார் நாட்டினர் எனப் பல்வேறு மொழிகளில் பேசுபவர்கள் உடற்பயிற்சிக்கூடத்தில் அண்ணன் தம்பியைப் போல அன்புடன் பழகுவதாக இவர் சொல்கிறார்.
“போட்டி, பொறாமைக்கான இடம் இதுவன்று. எல்லாரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்கின்றனர்,” என்றார் திரு கோபி.
தமிழகத்தில் இருந்தபோது உடற்பயிற்சி செய்யவேண்டும் என விரும்பியபோதும் இங்கு வந்த பிறகுதான் தடையின்றிச் செய்ய முடிவதாகக் குறிப்பிட்டார், கடந்த 15 ஆண்டுகளாக இங்கு வேலை செய்துவரும் திரு கோபி.
“உடற்பயிற்சியால் தெம்பும் புத்துணர்ச்சியும் பெறுகிறேன். இன்னும் இளமையாக இருப்பதுபோல உணர்கிறேன். என்னைவிட இளையவர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வதே தனி இன்பந்தான்,” என்றார்.
“படிப்படியாக நானும் புதிதாக உடற்பயிற்சி செய்ய வருவோர்க்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். நானும் இன்றுவரை தாெடர்ந்து கற்று வருகிறேன். எனக்குப் புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர். வேலை முடிந்தவுடன் இங்கு வரவேண்டும் என்ற கடப்பாடு இந்த நட்பின் மூலம் வந்தது,” என்று திரு கோபி கூறினார்.
“சிங்கப்பூர் இளையர்களுடன் பழகும்போது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படி இவர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை,” என்று பூரிப்புடன் சொன்னார் இவர்.
‘வெளிநாட்டு ஊழியர்கள் பற்றிய எண்ணத்தை மாற்றுகிறது’
ஹைதராபாத்தைச் சேர்ந்த கொலு மகேந்திர பாபு, 34, கடந்த 12 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
மெலிந்து இருந்தாலும் உறுதியாகத் தோற்றமளிக்கிறது அவரது உடல்.
“பணத்திற்காக வேலை செய்கிறேன். உடற்பயிற்சியையோ நாம் விருப்பத்துடன் செய்கிறோம். எடை தூக்கி உடலை உரமாக்குவதால் உற்சாகம் அடைகிறேன், புத்துணர்ச்சி பெறுகிறேன். என் மனதில் நேர்மறையான சிந்தனைகள் வளர்கின்றன,” என்கிறார் திரு பாபு.
“சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக உடற்பயிற்சிக் கூடத்திற்குப் போகமுடியாமல் போனால் அடுத்த முறை மீண்டும் போகவேண்டும் என்ற ஏக்கம் தலைதூக்கும்,” என்று அவர் சொன்னார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் பேசும் தம்மால் உடற்பயிற்சிக் கூடத்திற்கு வரும் எல்லோரிடமும் உரையாட முடிவதாகக் கூறினார்.
“வெளியிடங்களில் சிங்கப்பூர் இளையர்களைக் காணும்போது அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருக்கும், அவர்கள் நம்மிடம் பேசுவார்களா போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஊழியர்களான நாமும் வேலையிடம், தங்குவிடுதி, பொழுதுபோக்கு என இருப்போம். நமது வாழ்க்கைமுறை அவர்களுக்கும் தெரியாது.
“எனவே, மாணவர்கள் எங்களைத் தங்களுக்கு இணையாகக் கருதி எங்களுடன் மகிழ்ச்சியுடன் உறவாடிப் பழகுவது நெகிழ்ச்சி அளிக்கிறது.
“இதுபோன்ற நிகழ்ச்சிகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூரிலுள்ள மற்றவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
‘ஊழியராக வந்தாலும் குரு, வழிகாட்டி’
பஞ்சாப்பைச் சேர்ந்த திரு புருஷோத்தம், 35, விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.
இளம் வயதில் ‘சகதி’ மல்யுத்தத்தை (mud-wrestling) குருவிடம் முறைப்படி கற்ற திரு புருஷோத்தம், பள்ளிப் பருவத்திலிருந்து கபடி, கிரிக்கெட், எடை தூக்குதல் ஆகியவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
அனைத்துலகப் பள்ளிகளின் நிலையிலும் அவர் இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் கலந்துகொண்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், இங்கும் இவர் வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஏற்பாடு செய்யும் கட்டழகுப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளார். இவ்வாண்டு மட்டும் இவர் எடை தூக்கும் போட்டிகளில் இரண்டு பரிசுகளை வென்றுள்ளார்.
ரோனி கோல்மன், கிரேட் காமா போன்ற உடற்கட்டு வீரர்களை முன்மாதிரிகளாகக் கொண்டுள்ள திரு புருஷோத்தமுடன் உரையாடுபவர்கள், பிறரையும் தம்மைப்போல் பலசாலிகளாக்கும் ஆர்வத்தைக் காணலாம்.
“நான் இங்குள்ள பலரை வளர்த்திருக்கிறேன். இந்தியாவில் எனக்கு நிறைய மாணவர்கள் உள்ளனர். புதிதாக எடை தூக்க முன்வருவோரையும் என் மாணவர்களைப் போல் கருதி அவர்களுக்கு வழிகாட்டுவேன்,” என்று பெருமிதத்துடன் கூறினார் திரு புருஷோத்தம்.
கற்பிக்க வந்தவர்களும் கற்றனர்
சிங்கப்பூர்ப் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் தனிஷ் இர்ஃபான், 19, வாரம் மும்முறை எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
பள்ளி விளையாட்டு மன்றத்திலுள்ள இவரும் சில மாணவர்களும் வெளிநாட்டு ஊழியர்களுடன் பழகி உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
“எடையை எப்படிப் பாதுகாப்புடன் தூக்குவது என்ற அறிமுகத்தை தரப்போகிறோம் என எண்ணி தங்குவிடுதிக்கு வந்தோம். ஆனால், இங்குள்ளவர்கள் ஏற்கெனவே நன்கு எடை தூக்குவார்கள் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உதவி செய்வதைவிட நான் அவர்களைக் கவனித்து கற்றுக்கொண்டேன் என்றே சொல்லவேண்டும், உண்மையிலேயே மலைத்துப்போனேன்,” என்றார் திரு தனிஷ்.
கடந்த ஈராண்டுகளாக வாரத்திற்கு மூன்று முறை வரை எடை தூக்கும் தனிஷ், ஊழியர்களுக்கு இடையே உள்ள அன்பையும் சகோதரத்துவத்தையும் உணர்வதாகக் குறிப்பிட்டார். அந்த அன்பை அவர்கள் தமக்கும் காட்டியதாக மலாய்க்காரரான திரு தனிஷ் கூறினார்.
“என்னை எடை தூக்கும்படி அவர்கள் ஊக்குவித்தனர். என்னை எப்படியேனும் வெற்றியடையச் செய்துவிடவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது,” என்றார் திரு தனிஷ்.
சிங்கப்பூர்ப் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வழிநடத்திய இந்த எடை தூக்கும் பயிலரங்கு, மாணவர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையே உள்ள பொதுவான ஆர்வத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று மனிதவள அமைச்சின் ஃபாஸ்ட் (FAST) பிரிவின் துணைத் தலைவர் மார்டின் கோ தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளையும் வகுப்புகளையும் ஏற்பாடு செய்வதற்கு அற அமைப்புகளும் பொதுமக்களும் வரவேற்கப்படுகின்றனர்.
“இந்தப் பயிலரங்கை தவிர, ஃபிரிஸ்பி போட்டி, பட்டம் செய்யும் போட்டி, சிங்கப்பூர் இளையர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் இணைந்து பங்கேற்ற கரையோரப் பூந்தோட்டச் சுற்றுலா போன்றவற்றை நம் இளையர்களே நடத்துவதைக் காணும்போது எங்கள் மனம் நிறைகிறது. இவர்களைப் போல பலரும் முன்வந்து எங்களுடன் சேர்ந்து, நம் வெளிநாட்டு ஊழியர் சமூகத்தின் பங்களிப்புகளை அங்கீகரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்று திரு கோ கூறினார்.

