பல கனவுகளுடன் புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் மக்கள்

2 mins read
417fc0b8-d516-4ac7-80ac-2d76be801b83
கடந்த புத்தாண்டின்போது கை முறிந்தாலும் குணமடைந்து ஆலயம் முன் கைகூப்பும் மாணிக்கம் சுரேஷ், 50, - படம்: கி.ஜனார்த்தனன்

புத்தாண்டுக்காக ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற மாணிக்கம் சுரேஷ், 50, தம்மால் இரு கரங்களைக் கூப்பி இறைவனை வணங்க முடிந்ததை எண்ணி நன்றியுணர்வுடன் இருக்கிறார்.

வேதியியல் பொறியாளராகப் பணிபுரியும் அவர், கடந்த புத்தாண்டன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில்அவருக்கு ஒரு கை முறிந்தது.

“2024 எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது. எனவே இந்த ஆண்டு நல்லதைக் கொடுக்கும் என்ற ஆவலில் உள்ளோம்,” என்று தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து 2007ல் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த திரு சுரேஷ் கூறினார்.

சிங்கப்பூரில் தாம் சென்ற முதல் கோயிலான ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில், தமக்குப் பிடித்த கோயிலாகவும் மனதிற்கு இதம் தரும் நிம்மதியான இடமாகவும் இருப்பதால் புத்தாண்டன்று அந்தக் கோயிலுக்குச் சென்றதாகக் கூறினார்.

புதன்கிழமை காலை லிட்டில் இந்தியா வீதிகள், கடைகள் போன்ற இடங்களில் மக்கள், குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் காணப்பட்டனர். அத்துடன், திரு சுரேஷ் போன்ற பக்தர்கள் ஆலயங்களில் நிரம்பி வழிந்தனர்.

சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூருக்குக் கணவருடன் வந்த லாவண்யா கண்ணபிரான், 27, புத்தாண்டை முதன்முறையாகக் கொண்டாடுகிறார்.

“புதுமணத் தம்பதிகளான எங்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க வேண்டும் என விரும்புகிறோம்,” என்றார் அவர்.

2025ல் 40 வயதாகவுள்ள தேவி பாலா, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக உணர்கிறார். தமக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் கிடைக்கவேண்டும் என்பது இவரது பிரார்த்தனையாக உள்ளது.

தோழிகளுடன் வண்ணப் புடவையில் ஃபேரர் பார்க்கில் கூடிய கெளசல்யா ராமலிங்கம், 26, தாம் பணிபுரியும் தாதிமைத் துறையில் முன்னேற்றம் காண விரும்புவதாகக் கூறினார்.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்துகொண்ட பாலர்பள்ளி ஆசிரியர் சரவணகுமார் பொற்கொடி, 43, மதிய உணவுக்காக லிட்டில் இந்தியாவுக்குச் சென்றார்.

கணவருடனும் இரண்டு பிள்ளைகளுடனும் காலையில் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார் பாலர்பள்ளி ஆசிரியர் சரவணகுமார் பொற்கொடி, 43.
கணவருடனும் இரண்டு பிள்ளைகளுடனும் காலையில் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார் பாலர்பள்ளி ஆசிரியர் சரவணகுமார் பொற்கொடி, 43. - படம்: கி.ஜனார்த்தனன்

“இவ்வாண்டு நம் அனைவரது வாழ்க்கை ஏறுமுகமாகச் செல்லவேண்டும், குடும்பத்தில் ஒற்றுமை பெருகவேண்டும். குடும்பத்திற்கு ஆதாரமாக உள்ள சம்பளம் தொடர்ந்து நமக்கு கிடைக்க வேண்டும்,” என்று அவர் சிரித்தவாறு கூறினார்

சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு தம் கணவருடனும் இரு பிள்ளைகளுடனும் சென்ற எம் சிவகாமி, 39, புதிய நுண்கலைகளைக் கற்று மேடையேற விரும்புகிறார்.

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த கணவர் ஷியாம்குமார், 44, மகள்கள் 7 வயது மீனாட்சி, 4 வயது கமழின் ஆகியோருடன் எம் சிவகாமி, 39.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த கணவர் ஷியாம்குமார், 44, மகள்கள் 7 வயது மீனாட்சி, 4 வயது கமழின் ஆகியோருடன் எம் சிவகாமி, 39. - படம்: கி.ஜனார்த்தனன்

தம் மகளைக் காண சிங்கப்பூருக்கு அடிக்கடி வருவதாகச் சொன்ன மும்பையில் வசிக்கும் திருவாட்டி சரோஜா, 75, புத்தாண்டுக்காக குடும்பத்தினருடன் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குச் சென்றிருந்தார்.

“எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுகிறோம்,” என்றார் அவர்.

கூடுதல் செய்தி: யோகிதா அன்புச் செழியன், தயாமயி பாஸ்கரன்
குறிப்புச் சொற்கள்