தொடர் இருமலும் கவனத்தில்கொள்ள வேண்டியவையும்

தொடர் இருமலும் கவனத்தில்கொள்ள வேண்டியவையும்

3 mins read
f5f1cb7b-3057-484c-8b18-68da68925118
உடல்நலம் சீராக இருந்தும் தொடர்ந்து இருமல் வந்தால் ஒருவர் பாதுகாப்பாக வேலைக்குச் செல்லலாம், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். - படம்: ஐஸ்டாக்

சாதாரண சுவாசத் தொற்றிலிருந்து குணமடைந்த பிறகும் சிலருக்கு இருமல் தொடரலாம்.

இந்நிலையில், இருமல் வாரக்கணக்கில் நீடிப்பதற்கான காரணம், முகக்கவசம் அணியும் முறை, தீவிர பாதிப்பை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் ஆகியன குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பொதுவாக, சளிக்காய்ச்சல் ஏற்பட்டு குணமடைந்த பின்னர் தொடர் இருமலால் பலரும் அவதிப்பட்டிருக்கக்கூடும்.

நீண்ட நாள்களாகத் தொடரும் அத்தகைய இருமல் மூலம் நோய் பரவுமோ என்றும் பலர் கவலைப்படலாம்.

ஆனால், பெரும்பாலும் அவ்வாறு நிகழ்வதில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அறிகுறிகள்

பெரும்பாலான சாதாரணத் தொற்றுகளில் அறிகுறிகள் தோன்றுவதற்கு சில நாள்களுக்கு முன்பிருந்தும் அறிகுறிகள் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று முதல் ஏழு நாள்கள் வரையிலும் நோய் பரவும் தன்மை இருக்கும் என்றார் ‘பினகிள்’ குடும்ப மருந்தகத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் மோக் பூன் ருய்.

தொற்று நீங்கிய பிறகு ஒருவர் தமக்கு உடல்நலம் சரியாகிவிட்டதாக உணர்ந்தாலும், சுவாசப் பாதைகள் முழுமையாகக் குணமடைந்திருக்காது என்றும் அதனால் இருமல் நீடிக்கக்கூடும் என்றும் டாக்டர் மோக் விளக்கினார்.

தொற்று நீங்கிய பின்னர், சுவாசப் பாதையின் அதிகரித்த உணர்திறன் அல்லது மூக்கின் பின்புறத்தில் சளி வடிவதால் ஏற்படும் உறுத்தலால் பொதுவாக இத்தகைய தொடர் இருமல் ஏற்படுவதாகவும் அவர் சொன்னார்.

இருமல் ஏற்படக் காரணம்

மூக்கு அல்லது சைனஸ் பகுதியிலிருந்து வெளியேறும் சளி, தொண்டையின் பின்புறமாக வழியும்போது தொண்டையில் உறுத்தலை ஏற்படுத்தி இருமலை உண்டாக்கக்கூடும்.

உடல்நலம் சீராக இருந்தும் தொடர்ந்து இருமல் வந்தால் ஒருவர் பாதுகாப்பாக வேலைக்குச் செல்லலாம், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

இத்தகைய சூழலில் தனிமைப்படுத்திக்கொள்வது, நீடிக்கும் இருமலை மட்டும் காரணமாகக் கொண்டு வேலைக்கோ பள்ளிக்கோ செல்லாமல் இருப்பது, வறட்டு இருமல் அல்லது குணமாகிவரும் இருமலுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைக் கேட்பது ஆகியவை பொதுவாகத் தேவையில்லை என்றும் டாக்டர் மோக் கூறினார்.

அடிப்படைப் பிரச்சினைகள்

சில அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் சுவாசப் பாதைகளின் உணர்திறனை அதிகரிப்பதால் தொற்றுக்குப் பிந்தைய இருமல் நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

காசநோய், ஒவ்வாமை நாசியழற்சி, இரைப்பை உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GERD) ஆகியவை அவற்றுள் அடங்கும்.

ஒவ்வாமை நாசியழற்சியானது நாசிப் பாதைகளில் வீக்கத்தையும் அதிகப்படியான சளி உற்பத்தியையும் ஏற்படுத்துகிறது. இது மூக்கின் பின்புறம் சளி வடியும் நிலைக்கு வழிவகுக்கும்.

இரைப்பை உணவுக்குழாய் பின்னோட்ட நோய்ப் பாதிப்பில் இரைப்பையில் உள்ள அமிலம் மேலேறி உணவுக்குழாய் வழியாகத் தொண்டையை அடையக்கூடும்.

இந்த அமிலத்தால் ஏற்படும் உறுத்தல் தொண்டையிலுள்ள நரம்புகளைத் தூண்டி அனிச்சையாக இருமலை உண்டாக்குகிறது.

மூச்சுத் திணறல், சுவாசத்தின்போது சத்தம் வருதல், நெஞ்சு வலி, இருமும் போது ரத்தம் வருதல், உடல் எடை குறைதல், இரவில் அதிகமாக வியர்த்தல் அல்லது இருமல் குறைந்து மீண்டும் அதிகரித்தல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இருமலைக் குறைக்க

தொண்டை உறுத்தலைத் தணிக்கவும் நீடித்த இருமலைக் குறைக்கவும் சில எளிய நடைமுறை வழிகள் உள்ளன.

அவற்றில் ஒன்று, நாள் முழுவதும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதாகும்.

இனிப்பு குறைவாகச் சாப்பிடுவது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, தூசியிலிருந்து தள்ளி இருத்தல் போன்ற எரிச்சலூட்டும் பொருள்களின் தாக்கத்திற்கு ஆளாவதைக் குறைத்தல் போன்ற வழிகளையும் கடைப்பிடிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்