தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஆதரவளித்த ‘போப்ராஜ்’ இயற்கை எய்தினார்

2 mins read
736c0634-6058-420e-bd44-793456283397
இயற்கை எய்திய தமிழ்ப் புரவலர், போப்ராஜ் என்றழைக்கப்படும் திரு நாகை தங்கராசு ராமசாமி. - படம்: மல்லிகா சரவணன்

‘தமிழ் வள்ளல்’ எனச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தினர் பலராலும் அழைக்கப்படும் திரு நாகை தங்கராசு ராமசாமி (போப்ராஜ்) அக்டோபர் 5ஆம் தேதி இரவு 8 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84.

கூ டெக் புவாட் பொது மருத்துவமனையிலும் பின்பு சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்த அவர், இதய நோயால் இறந்ததாகக் கூறப்பட்டது.

அவரது நல்லுடல் அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6 மணி முதல் உட்லண்ட்ஸ் மெமோரியல், ஆறாம் தளம் லீடன் & கெப்பல் மண்டபம், 7 உட்லண்ட்ஸ் இன்டஸ்டிரியல் பார்க் E8, சிங்கப்பூர் 758969ல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) மாலை 5.30 மணிக்கு இறுதிச் சடங்கிற்காக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மண்டாய் தகனசாலை மண்டபம் 4ல் மாலை 6.30 மணிக்குத் தகனம் செய்யப்படும். மேல்விவரங்களுக்கு 8328 2241, 9007 1224 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

திரு போப்ராஜின் நல்லுடல் அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6 மணி முதல் உட்லண்ட்ஸ் மெமோரியல், ஆறாம் தளம் லீடன் & கெப்பல் மண்டபம், 7 உட்லண்ட்ஸ் இன்டஸ்டிரியல் பார்க் E8, சிங்கப்பூர் 758969ல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திரு போப்ராஜின் நல்லுடல் அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6 மணி முதல் உட்லண்ட்ஸ் மெமோரியல், ஆறாம் தளம் லீடன் & கெப்பல் மண்டபம், 7 உட்லண்ட்ஸ் இன்டஸ்டிரியல் பார்க் E8, சிங்கப்பூர் 758969ல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. - படம்: மல்லிகா சரவணன்

‘ஜோஸ்கோ ஜிஎஸ்ஏ டிராவல் பிரைவேட் லிமிடெட்’ எனும் பயணத்துறை நிறுவனத்தை நிறுவி, அதை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாக இயக்குநராக நடத்திவந்தார் திரு போப்ராஜ்.

தமிழ்ச் சமூகத்துக்குப் பெரிதும் பங்காற்றியவர்

“அவர் சிறந்த மனிதர். பல நிகழ்ச்சிகளுக்கு $10,000க்கும் மேலான தொகைகள் வழங்கிப் பேரளவில் ஆதரவளித்துள்ளார். பயணத் துறையில் இருப்பதால், வெளிநாட்டிலிருந்து புகழ்பெற்றவர்கள் வரும்போது நிறைய உதவிகள் செய்வார்,” என்றார் அவருடைய மூத்த மருமகள் மல்லிகா சரவணன்.

அவர் அருமையாகத் தமிழில் பேசக்கூடியவர் என்றும் சிங்கப்பூர் வருமுன் தஞ்சாவூரில் உயர்நிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார் என்றும் கூறினார் திருவாட்டி மல்லிகா.

திரு போப்ராஜ்.
திரு போப்ராஜ். - படம்: மல்லிகா சரவணன்

‘மிகச் சிறந்த பண்பாளர்’

திரு போப்ராஜின் மறைவு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் பேரிழப்பு என்றார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன்.

“திரு போப்ராஜ் மிகச் சிறந்த பண்பாளர். தமிழ் அமைப்புகளுக்கு வாரி வழங்கியதால் அவருக்குத் ‘தமிழ் வள்ளல்’ என்ற பெயர் வந்தது. ஆனால் அப்படி அழைப்பதை அவர் விரும்பமாட்டார். தமிழ்த் தொண்டன் என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார்,” என்றார் திரு ஆண்டியப்பன்.

“அனைத்து நூல் வெளியீடுகளிலும் பெருந்தொகை கொடுத்து முதல் பிரதியை வாங்குவார். எல்லாருக்கும் பாரபட்சமின்றி உதவுபவர்,” என்றார் திரு ஆண்டியப்பன்.

தமிழ் அமைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாரி வழங்கியவர் என்பதால் ‘தமிழ் வள்ளல்’ என்ற பெயர் வந்தது. ஆனால் அப்படி அழைப்பதை அவர் விரும்பமாட்டார். ‘தமிழ்த் தொண்டன்’ என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன்

“50 ஆண்டுகளாக அவரைத் தெரியும். சாதாரண நிலையில் தொடங்கி முன்னுக்கு வந்த கடுமையான உழைப்பாளி,” என்றார் திரு முத்தழகு மெய்யப்பன்.

ஈகை மனம் படைத்தவர்

“கவிமாலை அமைப்பு தங்கப் பதக்க விருதைக் கொடுக்கத் தொடங்கியபோது தொடர்ந்து சில ஆண்டுகள் அவர்தான் அதற்கான தங்கத்தினை வழங்கி ஆதரவளித்தார்,” என்றார் கவிமாலைக் காப்பாளர் மா.அன்பழகன்.

கவிமாலைக் காப்பாளர் மா.அன்பழகன், திரு போப்ராஜ் தனக்கும் தன் மனைவிக்கும் மாலை அணிவித்துச் சிறப்பித்த தருணத்தை நினைவுகூர்ந்தார்.
கவிமாலைக் காப்பாளர் மா.அன்பழகன், திரு போப்ராஜ் தனக்கும் தன் மனைவிக்கும் மாலை அணிவித்துச் சிறப்பித்த தருணத்தை நினைவுகூர்ந்தார். - படம்: மா. அன்பழகன்

“அவர் சிறந்த தமிழ்ப் பற்றாளர். கவிதை மனம் படைத்தவர். தமிழால்தான் நாங்கள் நண்பர்களானோம்,” என்றார் கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ.

“திரு போப்ராஜ் தங்கமான மனிதர். சிறந்த தமிழ் ஆர்வலர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களை ஆதரித்தவர்,” என்றார் தமிழ்மொழி, பண்பாட்டுக் கழகத் தலைவர் மு. ஹரிகிரு‌ஷ்ணன்.

குறிப்புச் சொற்கள்