தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பறவைகள் மகிழ்வனத்தில் குஞ்சு பொரித்த அரியவகை பறவை

1 mins read
eedcdc3a-2b5d-43e0-8afc-d71c8cbf3c67
பிறந்து இரு மாதங்களிலும் (இடப்படம்) நான்கு மாதங்களிலும் பிலிப்பீனிய ‘காக்கட்டூ’ குஞ்சு. - படம்: மண்டாய் வனவுயிர்க் குழுமம்

பறவைகள் மகிழ்வனத்தில் நான்கு மாதங்களுக்குமுன் பிலிப்பீனிய ‘காக்கட்டூ’ பறவை இணை குஞ்சு ஒன்றைப் பொரித்தன.

சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்வது கடினம் என்பதால், இது ஓர் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

சிறகுகளின் அடிப்பகுதியில் சிவப்பு நிறத்தைக் கொண்ட அந்தக் காக்கட்டூ பறவைகள், பலவானிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் கடந்த பத்து ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் இருந்துவருவதாக மண்டாய் வனவுயிர்க் குழுமமும் அதன் ‘மண்டாய் நேச்சர்’ பராமரிப்புப் பிரிவும் வியாழக்கிழமை (அக்டோபர் 16) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தன.

அந்தக் காக்கட்டூ குஞ்சு மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, இனப்பெருக்க, ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டு, பராமரிக்கப்பட்டது. இந்தக் குஞ்சு இப்போது பறக்கக் கற்றுக்கொள்கிறது, ஆயினும், இன்னும் பறவைகள் மகிழ்வனத்தில் காட்சிக்கு வைக்கப்படவில்லை. எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஒரு பிலிப்பீனிய அரசு சாரா நிறுவனத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பிலிப்பீனிய காக்கட்டூ பறவையினம் அருகிவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது காடுகளில் 750க்கும் குறைவான முதிர்ச்சியடைந்த பிலிப்பீனிய காக்கட்டூ பறவைகளே எஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மரபார்ந்த பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமும் பாதுகாப்பான எண்ணிக்கையில் பேணுவதன் மூலமும் இனமீட்சிக்கு விலங்கியல் தோட்டங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை இந்த காக்கட்டூ குஞ்சு நினைவூட்டுவதாகக் கூறினார் மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் விலங்குப் பராமரிப்புப் (செயல்பாடுகள்) பிரிவின் உதவித் துணைத் தலைவர் திருவாட்டி அனாய்ஸ் டிரிட்டோ.

குறிப்புச் சொற்கள்