தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடல்நலப் பராமரிப்பில் கவனம் ஈர்க்கும் ‘பிலாட்டிஸ்’

4 mins read
56fd9069-072c-4c0c-b9f7-2b0cd1dab1db
மாணவி அவ்ரில் சிந்து அன்பரசுக்கு பிலாட்டிஸ் வகுப்பு நடத்தும் காமினி அசோகன். - படம்: காமினி அசோகன்

முழு உடலையும் இயக்கும் உடற்பயிற்சி முறையான ‘பிலாட்டிஸ்’ இப்போது பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

உடலின் நெகிழும்தன்மையை அதிகரிக்க உதவும் இப்பயிற்சி அண்மையில் இங்குப் புதுமையான உடற்பயிற்சியாக உருவெடுத்துள்ளது.

பொதுவாகப் பெண்கள் இதை அதிகம் நாடினாலும் ஆண்கள் மத்தியிலும் இது பிரபலமாகியுள்ளது. உடற்பயிற்சிக் கூடங்களில் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபடும் ஆண்களையும் பிலாட்டிஸ் வகுப்புகளில் காணலாம்.

சமூக ஊடகத் தளங்களில் சீனப் பெண்கள் பலர் பிலாட்டிஸ் வகுப்புகளுக்குச் செல்லும் காணொளிகளை அதிகம் பார்க்கலாம்.

இந்தியர்கள் சிலர் மட்டுமே இந்த வகுப்பிற்குச் செல்வதாகத் தெரிகிறது.

தனிப்பட்ட உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளரான காமினி அசோகன், 34, இந்த ஆண்டிலிருந்து பிலாட்டிஸ் வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது வகுப்புக்கு வருவோர் பெரும்பாலும் இந்தியர்கள்.

இந்த உடற்பயிற்சி முறை இந்தியர்கள் பலரை எட்ட வேண்டும் என்பது காமினியின் இலக்கு.

ஒல்லியான தோற்றம் உள்ளவர்கள்தான் பிலாட்டிஸ் செல்கின்றனர் என்ற கருத்து, தான் பேசிய இந்தியர்கள் பலரிடம் நிலவுவதாகக் காமினி கருதுகிறார்.

மேலும், இந்தியர்கள் பலர் பிலாட்டிஸ் கற்றுத்தராமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று காமினி நம்புகிறார்.

உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்றுவிப்பாளராக இருக்கும் காமினி பிலாட்டிஸ் கற்றுத்தர பயிற்சி மேற்கொண்டார்.

“யோகா, உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பிலாட்டிஸ் வகுப்புகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இதை நான் மாற்ற விரும்புகிறேன்,” என்றார் காமினி.

பிலாட்டிஸ் மிகவும் மெதுவான, மென்மையான உடற்பயிற்சி முறை என்று விளக்கிய காமினி, அது ஒருவரது உடலின் மையப்பகுதியை வலுவாக்கி, தோரணையையும் சரிசெய்யும் என்றார் அவர்.

“அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் பிலாட்டிஸ் செய்து பார்க்கலாம். அது அவர்களின் உடலியக்கத்துக்கு மெருகூட்டும்,” என்று சொன்னார் காமினி.

பலதரப்பட்ட வயதுகளில் இருப்பவர்களுக்குப் பிலாட்டிஸ் கற்றுத்தரும் காமினி, 50 வயதிலும்கூட ஒருவர் இதில் ஈடுபட்டு உடல்நலத்தைப் பேணலாம் என்றார்.

தனது கணவரும் பிலாட்டிஸ் வகுப்புகளுக்கு வருவதாகக் குறிப்பிட்ட காமினி, பிலாட்டிஸ் பாலினம் சார்ந்த உடற்பயிற்சியன்று என்றும் இதில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என்றும் ஊக்குவித்தார்.

தனது நண்பரின் பரிந்துரையால் பிலாட்டிஸ் வகுப்புக்குச் செல்லத் தொடங்கிய காமினிக்கு முதல் வகுப்பிலேயே அதில் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.

காமினியின் பிலாட்டிஸ் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவி அவ்ரில் சிந்து அன்பரசு, 29, முதலில் பிலாட்டிஸ் தனக்கு ஏற்ற உடற்பயிற்சியன்று என்றுதான் நினைத்துக்கொண்டார்.

கடினமாகத் தோன்றியதால் பிலாட்டிஸ் மீது அவருக்குச் சற்று அச்சம் ஏற்பட்டது.

அவ்ரில் சிந்து ஏற்கனவே காமினியின் உடற்பயிற்சிக் கூடத்தில் உடல் வலிமை மேம்பாட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

“பிலாட்டிஸ் செல்லத் தொடங்கியதும் என் உடலின் மையப்பகுதி வலுவடையத் தொடங்கியது. உடலியக்கமும் நெகிழும் தன்மையும் அதிகரிக்கத் தொடங்கின. என்னால் உடற்பயிற்சிக் கூடத்திலும் நன்றாக உடற்பயிற்சி செய்ய முடிந்தது. பிலாட்டிஸின் நன்மைகள் அப்போது எனக்குப் புலப்பட்டன,” என்றார் அவ்ரில் சிந்து.

பிலாட்டிஸ் செய்யத் தொடங்கிய பிறகு தனது கீழ் முதுகு வலியும் குறையத் தொடங்கியதாகச் சொன்ன அவ்ரில் சிந்து, இந்த உடற்பயிற்சியை அதிகம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

மேலும் தன்னைப் போன்ற பெண்கள் தயக்கமின்றி இதில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவித்தார் அவர்.

பிலாட்டிஸ் செய்யத் தொடங்கிய பிறகு தனது கீழ் முதுகு வலியும் குறையத் தொடங்கியதாகச் சொன்ன அவ்ரில் சிந்து இந்த உடற்பயிற்சியை அதிகம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
பிலாட்டிஸ் செய்யத் தொடங்கிய பிறகு தனது கீழ் முதுகு வலியும் குறையத் தொடங்கியதாகச் சொன்ன அவ்ரில் சிந்து இந்த உடற்பயிற்சியை அதிகம் செய்ய முடிவெடுத்துள்ளார். - படம்: காமினி அசோகன்

உடற்பயிற்சிக் கூடத்தில் எத்தகைய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டுமென்று செய்வதறியாமல் இருந்த 28 வயதாகும் ஜேனட் ஷாலினிக்குப் பிலாட்டிஸ் கைகொடுத்தது.

பிலாட்டிஸில் ஈடுபடும் ஜேனட்.
பிலாட்டிஸில் ஈடுபடும் ஜேனட். - படம்: ஜேனட் ஷாலினி

கடந்த ஈராண்டுகளாகப் பிலாட்டிஸ் செய்துவரும் ஜேனட், “பாயில் செய்தாலும் அதற்குத் தேவையான உபகரணங்கள் வைத்துச் செய்தாலும் பிலாட்டிஸ் என் முழு உடலையும் இயங்க வைக்கிறது. குறிப்பாக உடலின் நடுப்பகுதியை வலுப்படுத்துகிறது,” என்றார்.

சிங்கப்பூரில் பிலாட்டிஸ் மோகம் கூடிக்கொண்டே செல்வதாகக் குறிப்பிட்ட ஜேனட், வேலைக்குச் செல்லும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலைக் கொண்டவர்களுக்குப் பிலாட்டிஸ் ஏற்றதொரு உடற்பயிற்சி என்றார்.

“ஒரு மணி நேரம் பிலாட்டிஸ் வகுப்பில் செலவிட்டால் போதும். முழு உடலும் பயன் பெறுகிறது. மேலும் சமூக ஊடகத் தள ஆளுமைகள் பலர் பிலாட்டிஸ் செய்யும் காணொளிகளைப் பதிவேற்றம் செய்வதால் இளையரிடையே அது பிரபலமடைந்துள்ளது,” என்று ஜேனட் சொன்னார்.

பிலாட்டிஸ் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கிய பின்னர் தனது உடலில் பல மாற்றங்களை உணர்ந்த ஜேனட், பார்ப்பதற்கு மிக மென்மையான உடற்பயிற்சிபோலத் தெரிந்தாலும் தொடக்கத்தில் அது சவால்மிக்கதாக இருந்ததாகக் கூறினார்.

உடலை நீட்டி நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் பயிற்சி மட்டுமன்று பிலாட்டிஸ். அதற்கும் அப்பாற்பட்டு ஒருவரின் மனநலனுக்கும் உகந்தது என்ற ஜேனட், அதிவேக உலகில் ஒருவர் நிதானம் காத்து சமநிலையைப் பெற அது வழியமைக்கும் என நம்புகிறார்.

உடற்பயிற்சிக்கு அப்பாற்பட்டு பிலாட்டிஸ் ஒருவரின் மனநலனுக்கும் உகந்தது என்று கூறுகிறார் ஜேனட்.
உடற்பயிற்சிக்கு அப்பாற்பட்டு பிலாட்டிஸ் ஒருவரின் மனநலனுக்கும் உகந்தது என்று கூறுகிறார் ஜேனட். - படம்: ஜேனட் ஷாலினி
குறிப்புச் சொற்கள்