இந்தியா-பாகிஸ்தான் பிரிவுக் காலத்தில் இருந்த ஒரு குடும்பத்தின் கதையை, சிங்கப்பூர் இளையர் பார்வையிலிருந்து படம் பிடித்துக்காட்டும் மாறுபட்ட நாடகமான ‘எக்லிப்ஸ்’, சிங்கப்பூர் ஃபிரிஞ்ச் பெஸ்டிவல் 2025 திருவிழாவில் அரங்கேறுகிறது.
ஓர் இளம் சிங்கப்பூரர், தம் தந்தையரின் பிறப்பிடமான பாகிஸ்தானுக்குச் செல்லும்போது, அவரது பரம்பரையின் கதைகளை அறிந்துகொள்வதாக அமைந்துள்ளது இந்நாடகம்.
தேசியக் கலை மன்றத்தின் கலாசாரப் பதக்கம் வென்ற ஹரேஷ் ஷர்மா இந்நாடகத்தை எழுதியுள்ளார்.
“இந்நாடகம் மூன்று தலைமுறைகளின் கனவுகள், பயணங்கள், போராட்டங்களை விவரிக்கிறது. வரலாற்று நிகழ்வுகள் தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த நாடகம் பேசுகிறது,” என்றார் அவர்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையால் இடம்பெயர்ந்த பதினைந்து மில்லியன் மக்களில் தம் தந்தையும் ஒருவர் என்று சொன்ன ஹரேஷ் ஷர்மா, 59, ‘மோனோலாக்’ எனும் ஒரு கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் கதை சொல்லும் வடிவில் இந்நாடகத்தை எழுதியுள்ளார்.
இந்நாடகத்தின் கதைமாந்தரான சிங்கப்பூர் இளையரின் தாத்தா, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து, அங்கிருந்து பணி நிமித்தமாக ஜப்பான் சென்று, பின் குடும்பத்தின் தொடர்பை இழக்கிறார். அவரின் மகனாக கதைமாந்தரின் தந்தை சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து குடும்பத்தை அமைக்கிறார்.
இந்தச் சிக்கலான கட்டமைப்பு, பந்தங்களின் உணர்வுகள், ‘எது வீடு’ எனும் கேள்விக்கான பதில் உள்ளிட்டவற்றை ஆராயும் விதமாக இந்நாடகம் அமைந்துள்ளது.
“அனைத்துலக அளவில் நடக்கும் சச்சரவுகள், மோதல்கள், கருத்து வேறுபாடுகள், உடன்பாடின்மை ஆகியவை தனி மனிதர்களின் வாழ்வை மாற்றியமைப்பது குறித்துப் பேசவே இந்த நாடகத்தை எழுதினேன்,” என்றார் திரு ஹரேஷ் ஷர்மா.
‘த நெசெரி ஸ்டேஜ்’ எனும் நாடகக் குழுவைச் சேர்ந்த இவர், கடந்த 2007ஆம் ஆண்டு எழுதி, 20 நிமிட நாடகமாக மேடையேற்றப்பட்ட இந்நாடகம் தற்போது முழுநீள நாடகமாகப் படைக்கப்படுகிறது.
“இதனைப் பார்வையாளர்கள் இப்போதும் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்,” என்றார்.
“இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் அதிகம் தொடர்புப்படுத்த முடியும். இந்தப் பிரிவினை முடிந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுள்ள இளையர், அவரின் தந்தை குறித்து அறிந்துகொள்ளும்போது அவனது மனத்தில் ஓடும் உணர்வுகளைப் பார்வையாளர்கள் உணர்வார்கள்,” என்று சொன்னார்.
இதனை இயக்கியுள்ள யக்ஞா, 34, “கேட்கப்படாத கதைகளை மேடையில் சொல்லும் இந்த நாடகத்தை இயக்குவதில் மகிழ்ச்சி,” என்றார். “இது சாதாரண கதாபாத்திரங்கள் பேசும் கதையாக இருந்தாலும், அது கடத்தும் உணர்வுகள் சக்திவாய்ந்தவையாக இருக்கும்,” என்று கூறினார்.
இதில் கதைமாந்தராக நடிக்கும் ஷ்ரேய் பார்கவா, 29, “இந்த நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிப்பதும், சிங்கப்பூரின் வளமான நாடக உலகில் சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய கதையைச் சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதும் பெருமைக்குரியது. இது தரும் மகிழ்ச்சி அளப்பரியது,” என்றார்.
ஃபிரிஞ்ச் பெஸ்டிவல் 2025
கடந்த 2005ஆம் ஆண்டுமுதல் கலைஞர்களுக்குச் சிந்தனையைத் தூண்டும் வகையிலான படைப்புகளை மேடையேற்றும் வாய்ப்புகளை வழங்கி வருவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
சமூகத்தில் கலைப் படைப்புகள் மூலம் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த, கடந்த 20 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள், குழுவினரின் படைப்புகளை மேடையேற்றி வருவதாகவும் கூறினர்.
‘எம் 1’ நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சி, சமூகக் கருத்துகள் குறித்த உரையாடலைத் தூண்டும் வகையில் அமையும் என்று குழுவினர் நம்புகின்றனர்.
‘த நெசேசரி ஸ்டேஜ்’ குழு ஏற்பாட்டில் ஜனவரி 9 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை, ‘எக்லிப்ஸ்’ நாடகத்துடன் உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்களின் படைப்பில் அமைந்த பல்வேறு நாடகங்களையும் உள்ளடக்கும்.