உழவு சம்பந்தப்பட்ட கலைக்கூறுகள் பலவற்றைச் சேர்த்து, தமிழர் வாழ்வியலைக் கருப்பொருளாகக் கொண்டு மேரிமவுண்ட் (Marymount) சமூக மன்றம் பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தியுள்ளது.
போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை, இந்தப் பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பிற இனத்து வருகையாளர்களுக்கு விரிவாக விளக்க இந்நிகழ்ச்சி முனைந்தது.
மேரிமவுண்ட் சமூக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நடந்த நிகழ்ச்சியில் கிராமிய மணம் கமழ்ந்தது எனலாம்.
கிராமியப் பாடல்களும் நடன அங்கங்களும் நிறைந்த நிகழ்ச்சியில், பொம்மைப் பசு ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இளையர்களுடன் முதியோரும் நடனமாடியது குறிப்பிடத்தக்கது. நல்லிணக்கத்தை வளர்க்க முற்படும் மேரிமவுண்ட் ஹார்மனி சர்க்கல் (Harmony Circle) அமைப்பு, நிகழ்ச்சியை இணைந்து நடத்தியது.
நல்வாழ்வு அமைப்பு ஒன்றைச் சேர்ந்த பிள்ளைகள் சிலரும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக் குடிசைகள் வருகையாளர்களைக் கவர்ந்தன.
வேட்டி, புடவை அணிந்த பலரும் அங்குள்ள புகைப்பட முகப்பில் கூடியிருந்தனர். பொங்கல் பானைக்கு வண்ணம் தீட்டும் அங்கமும் இடம்பெற்றது.
வர்த்தக, தொழில் துணையமைச்சரும் மேரிமவுண்ட் அடித்தள ஆலோசகருமான கான் சியாவ் ஹுவாங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலும் சமைத்துப் பரிமாறப்பட்டன.
“உழவர்களாலும் இயற்கையாலும் குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டும் பயனடைவதில்லை என்பதால், பொங்கல் கொண்டாட்டங்கள் எல்லா மக்களும் இணையத்தக்கவை,” என்று மேரிமவுண்ட் தாம்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் தலைவர் சந்திரமோகன் மருதன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழர் அல்லாத வெளிநாட்டு இந்தியர்கள் பலர், பொங்கலைப் பற்றி முதன்முதலாக இத்தகைய நிகழ்ச்சிகளின்வழி அறிகின்றனர். எனவே, சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டின் முக்கியத்துவத்தை இத்தகைய நிகழ்ச்சிகள் எடுத்தியம்புகின்றன,” என்றார் திரு சந்திரமோகன்.
தமிழர் அல்லாதோரும் பொங்கலைப் பற்றி இங்கு அறிந்துகொண்டனர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திரு நல்லனும் திருவாட்டி மீராவும் தெரிவித்தனர்.

