இளையர்கள், முதியோர், பல்வேறு இனத்தவர் எனப் பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் நோக்கில் நீ சூன் குழுத்தொகுதியிலுள்ள வசிப்போர் கட்டமைப்புக்குழுவின் பொங்கல் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்றன.
‘அனைவருக்குமான பொங்கல்: வேறுபாடுகளை அரவணைக்கும் ஒற்றுமைக் கொண்டாட்டம்’ என்ற கருப்பொருளுடைய இந்த நிகழ்ச்சி, ஈசூன் வாட்டாரத்திலுள்ள புளோக் 602, 603 தரைத்தளத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட போட்டியின்போது 10 குழுக்கள் ஒன்றோடு ஒன்று பொருதின. ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர், அவர்கள் ஒவ்வொருவருமே வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். விறகுகள், மண் சட்டிகள் ஆகியவற்றைப் போட்டியாளர்கள் பயன்படுத்தினர்.போட்டியின் நடுவர்களாகச் சமையற்கலை வல்லுநர் ராஜேஸ்வரி, மூத்த ஊடகவியலாளர் பிமல் ராம் ஆகியோர் பணியாற்றினர்.
நீ சூன் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் இணைப்பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன் உறியடி அங்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
தோரணம் கட்டுவதற்கான வகுப்பும் கோலம் போடும் அங்கமும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. வந்திருந்த வருகையாளர்கள் மட்டுமன்றி நிகழ்ச்சி இடத்திற்கு அருகே வந்துசென்ற வழிப்போக்கர்களும் வண்ணக் கோலத்தை மேலும் அலங்கரிப்பதில் ஆர்வம் காட்டினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏறத்தாழ 180 பேருடன் ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் பராமரிப்பு இல்லத்திலிருந்து 10 சக்கர நாற்காலிப் பயனாளர்கள் கொண்டாட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டனர்.
பங்கேற்பாளர்களில் ஒருவரான 60 வயது மதிக்கத்தக்க மரீ இங்குயி, நிகழ்ச்சியைப் பற்றிய தமது ஆர்வத்தைப் பகிர்ந்தார்.
“இந்தப் பொங்கல் நிகழ்ச்சி எனக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக உள்ளது. சமையல் போட்டியில் கலந்துகொண்டேன். பானையில் பால் பொங்கும்வரை எனக்குச் சற்று பதற்றமாகவே இருந்தது,” என்று திருவாட்டி இங்குயி நகைத்தபடி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத்தலைவர் ராமச்சந்திரன் அசோக்குமார், வசிப்போர் கட்டமைப்பின் தலைவர் சாந்தா ராமன், நீ சூன் சென்ட்ரல் நற்பணிச் செயற்குழுத் தலைவர் சுகுணா ராமசாமி ஆகியோர் வட்டாரவாசிகளின் நல்வரவேற்பைக் கண்டு ஆனந்தம் அடைவதாகக் கூறினர்.
வேற்றினத்தவர் பரிமாறிய அறுசுவை விருந்து
புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் ஹில்வியூ நற்பணி செயற்குழு, வட்டாரவாசிகளை அறுசுவை விருந்துக்காகவும் விளையாட்டுக்காகவும் ஒருங்கிணைத்தது.
புளோக் 514ன் தரைத்தளத்தில் ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 270 பேர் பங்கேற்றனர்.
இந்தியப் பாரம்பரிய உடையில் இருந்த வேற்று இனத்தவர், வந்திருந்தோருக்குச் சுவைமிகு வாழையிலை மதிய உணவைப் பரிமாறினர். அதன் பிறகு உறியடி அங்கமும் கரும்பு உண்ணும் போட்டியும் இடம்பெற்றது. போட்டியில் பங்கேற்ற 10 பேரில் சீனப் பெண் ஒருவர் வெற்றி பெற்றார்.
நவம்பர் மாதத்தில் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்ட தீபவாளிக் கொண்டாட்டத்திற்கு அடுத்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பொங்கலுக்கு ஏற்பாடு செய்வதில் அலைச்சல் இருந்தாலும் அதிலும் இன்பம் இருந்ததாக ஹில்வியூ இந்திய நடவடிக்கைகள் செயற்குழு ஆலோசகர் பிரமிளா வி. கிலிட்டஸ் கூறினார்.
“மழைக்காலத்திலும் பல்வேறு அலுவல்கள் மத்தியிலும் பொதுமக்கள் கொண்டாட்ட உணர்வில் திளைத்ததைக் கண்டு ஏற்பாட்டுக் குழுவினரான நாங்கள் அகமகிழ்கிறோம்,” என்று திருவாட்டி பிரமிளா கூறினார்.
பொங்கல் பானைகளுக்கு வண்ணமிட்ட பிஞ்சு கரங்கள்
தொன்றுதொட்டு அன்னமிடும் உழவர்களின் சிறப்பைக் கொண்டாடும் பொங்கலுக்காக, பானைகளில் பல்வேறு வண்ணங்களைத் தீட்டி மகிழ்ந்தனர் உட்லண்ட்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்த சிறார்கள்.
ஜனவரி 19ஆம் தேதி உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81ல் நடைபெற்ற கொண்டாட்டத்திற்காக ஏறத்தாழ 300 வட்டாரவாசிகள் ஒன்றுகூடினர். மயிலாட்டம், உருமி, பொய்க்கால் குதிரை போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
உட்லண்ட்ஸ் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஹ்ஃபார் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
பொங்கலுடன் சோறு, ரசம், மோர், அப்பளம், மூவகை காய்கறி கூட்டுக் குழம்புகள் ஆகியவை வாழையிலையில் பரிமாறப்பட்டன.
வருகையாளர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பொன்னி அரிசிப் பொட்டலத்துடன், நெய், அப்பளம் ஆகியவற்றைக் கொண்ட அன்பளிப்புப் பைகள் தரப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகள் தாய்லாந்து, மலேசியா, ஆப்பிரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் வசித்த நிதித்துறை ஆலோசகர் ஆனந்தன் ராஜகோபாலன், 57, தமிழர் பண்பாட்டுக்கு சிங்கப்பூர் இவ்வளவு சிறப்பு செய்வதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
“இந்த நிகழ்ச்சிகளில் பிள்ளைகள் பலரைக் காணும்போது உண்மையிலேயே என் உள்ளம் மகிழ்கிறது. அடுத்த தலைமுறையைச் செதுக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டது,” என்று அவர் பாராட்டினார்.
சீனப்புத்தாண்டுடன் பொங்கல் களிப்பு
இயோ சூ காங் வட்டாரத்தில் புளோக் 624க்கு அருகிலுள்ள பல்பயன் கூடாரத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் எளிமையாக நடைபெற்றன.
பொங்கல் பானைக்கு வண்ணம் தீட்டுதல், உறியடி போன்ற நடவடிக்கைகளுடன் பரதநாட்டியம், கும்மி நடனம் ஆகிய கலைப்படைப்புகளும் இடம்பெற்றன. கிட்டத்தட்ட 100 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் 25 தொண்டூழியர்கள் சேவையாற்றினர்.
தமிழர்களின் தோரணங்கள், மலர்ச்சரங்கள் ஆகியவை சீனப்புத்தாண்டு அலங்காரங்களுடன் இணைந்து காணப்பட்டிருந்தன. இந்த ஏற்பாட்டை விரும்பிய சீன வட்டாரவாசிகள், சீனப்புத்தாண்டு காலத்திலும் பொங்கல் அலங்காரம் தொடர்ந்து இருக்கும்படி கேட்டுக்கொண்டதாக இயோ சூ காங் நற்பணிப் பேரவைத் தலைவர் திரு பழனிவேல் தெரிவித்தார்.
தம்பதியருக்குக் குதூகலம்
தெம்பனிஸ் சமூக மன்றத்தில் சனிக்கிழமை 25ஆம் தேதி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் ஆடல், பாடல், பேச்சுப்போட்டி அங்கங்களைக் கண்டுகளிக்க ஏறத்தாழ 200 பேர் வருகையளித்தனர்.
கன்றுடன் சேர்ந்த பசு, நிகழ்ச்சி இடத்திலுள்ள சிறு கொட்டகைக்குக் கொண்டுவரப்பட்டது. நாப்பிறழ் தொடர்களை உச்சரிக்கும் போட்டி, பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி எனப் பிள்ளைகளுக்கான நடவடிக்கைகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
மனைவிக்குக் கணவன் சேலை கட்டும் மாறுபட்ட போட்டி ஒன்றும் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது பொங்கியது பொங்கல் பானை மட்டுமல்ல; ஆரவாரமும் சிரிப்பும் என்றனர் பங்கேற்பாளர்கள்.