லிஷா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் தாதிமை இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டம்

3 mins read
3b49c74d-0f1d-4e8e-8ae1-3d2d275d9ee0
ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) பெண்கள் பிரிவு, பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

சொந்த இல்லத்தில் பொங்கல் கொண்டாடும் இன்பத்தை ஈசூனிலுள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் வசிப்போரிடம் கொண்டுசேர்த்தது, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி.

சனிக்கிழமை (ஜனவரி 17) நடந்த கொண்டாட்டத்துக்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைமை நிர்வாகி சரோஜினி பத்மநாதன் சிறப்பு வருகையளித்தார்.

தாதிமை இல்லவாசிகள் கிட்டத்தட்ட 30 பேருடன் இணைந்து தொண்டூழியர்கள் பொங்கல் பானைகளில் ஓவியம் தீட்டினர்; பாட்டுப் பாடினர்; கும்மி நடனத்தைக் கண்டு ரசித்தனர்.

1946 முதல், மலையாளக் குடியேறிகளுக்கு இரண்டாம் இல்லமாக அமைந்தது நேவல் பேஸ் வட்டாரத்திலிருந்த ஸ்ரீ நாராயண மிஷன். முன்பு அந்த வட்டாரத்தில் தன் குடும்பத்தினருடன் வசித்தவர்களில் திருவாட்டி கங்காவும் ஒருவர். இப்போது அவருக்கு 79 வயதாகிறது. ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் அவர் வசிக்கிறார்.

“நான் இங்கு வந்தபிறகு இதுதான் நான் கொண்டாடும் முதல் பொங்கல். எங்களைத் தம் குடும்பத்தினராக எண்ணிப் பொங்கல் கொண்டாடிய தொண்டூழியர்களுக்கு நன்றி. மலையாளி என்பதால் அவ்வளவாகப் பொங்கல் நான் கொண்டாடியதில்லை. நண்பர்கள் வீட்டுக்கு அழைக்கும்போது சேர்ந்து அவர்களுடன் கொண்டாடுவது வழக்கம்,” என்றார் திருவாட்டி கங்கா.

பானை மீது ஓவியம் தீட்டும் 79 வயது திருவாட்டி கங்காவும் (இடது) லி‌‌‌ஷா பெண்கள் பிரிவுத் தலைவர் எலி‌‌‌ஷா வாணியும்.
பானை மீது ஓவியம் தீட்டும் 79 வயது திருவாட்டி கங்காவும் (இடது) லி‌‌‌ஷா பெண்கள் பிரிவுத் தலைவர் எலி‌‌‌ஷா வாணியும். - படம்: ரவி சிங்காரம்
லி‌‌‌ஷா பெண்கள் பிரிவு உறுப்பினர்கள், தொண்டூழியர்கள், சிறப்பு விருந்தினர் சரோஜினி பத்மநாதன்.
லி‌‌‌ஷா பெண்கள் பிரிவு உறுப்பினர்கள், தொண்டூழியர்கள், சிறப்பு விருந்தினர் சரோஜினி பத்மநாதன். - படம்: ரவி சிங்காரம்

தன் மனைவியுடன் தாதிமை இல்லத்தில் வசிக்கும் திரு ரெத்தினம் இராமசாமி, 74, முன்னர் தங்கள் வீட்டில் பொங்கல் கொண்டாடிய தருணங்களை நினைவுகூர்ந்து மகிழ்ந்தார்.

தனிமையை விரும்பும் தாதிமை இல்லவாசிகளையும் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் ஈர்க்கமுடிவதாகக் கூறினார் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லவாசிகளுக்கான திட்டங்களுக்கும் சமூகப் பணிக்கும் தலைமைதாங்கும் யோகேஸ்வரி சந்திரசேகரன்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த லிஷா பெண்கள் பிரிவைப் பாராட்டிய திருவாட்டி சரோஜினி, “பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி வருத்தப்படாதீர்கள்,” என இல்லவாசிகளை ஊக்குவித்தார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் மதுரையில் ஐந்து வயதில் தாத்தா பாட்டியுடன் வயலுக்குச் சென்று பொங்கல் கொண்டாடியது தம் மனத்தில் நீங்கா நினைவுகளாக இடம்பெற்றுள்ளன என்றார் அவர். “சிங்கப்பூரில் நாம் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

“ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் லிஷா பெண்கள் பிரிவு பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது இதுவே முதன்முறை. இல்லவாசிகள் மிகவும் ரசித்து ஓவியம் தீட்டினர்,” என்றார் நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர் தாஜுனிஷா ஏபி.

ஸ்ரீ நாராயண மி‌‌ஷன் தாதிமை இல்லவாசியான ரெத்தினம் இராமசாமியுடன் (இடது) இந்து அறக்கட்டளை வாரியத் தலைமை நிர்வாகி சரோஜினி பத்மநாதன்.
ஸ்ரீ நாராயண மி‌‌ஷன் தாதிமை இல்லவாசியான ரெத்தினம் இராமசாமியுடன் (இடது) இந்து அறக்கட்டளை வாரியத் தலைமை நிர்வாகி சரோஜினி பத்மநாதன். - படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சியில், ‘செல்வி, திருமதி ஆசியான் 2026’ அழகுராணிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற அழகுராணிகள் தொண்டூழியம் புரிந்தனர். மூவர் நடனங்களும் நாடகங்களும் படைத்தனர்.

வயதானாலும் தோற்றம் குறித்து மனம் தளரக்கூடாது என நாடகம் மூலம் ஊக்குவித்தார் கிருஷ்ணவேனி, 18. பார்வையற்றோர், சிறப்புத் தேவைகள் உடையோர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் கண்ணைக் கட்டியவாறு நடனமாடிய அஷின் அலெக்சியா. எப்போதும் முயற்சியைக் கைவிடாமலிருப்பதன் அவசியத்தை நடனம் மூலம் உணர்த்தினார் திவ்யா.

‘செல்வி, திருமதி ஆசியான் 2026’ அழகுராணிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற அழகுராணிகள் நிகழ்ச்சியில் தொண்டூழியர்களாக இணைந்தனர்.
‘செல்வி, திருமதி ஆசியான் 2026’ அழகுராணிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற அழகுராணிகள் நிகழ்ச்சியில் தொண்டூழியர்களாக இணைந்தனர். - படம்: ரவி சிங்காரம்
ஸ்ரீ நாராயண மி‌‌ஷன் தாதிமை இல்லவாசிகளுடன் ‘செல்வி, திருமதி ஆசியான் 2026’ அழகுராணிகள், தொண்டூழியர்கள்.
ஸ்ரீ நாராயண மி‌‌ஷன் தாதிமை இல்லவாசிகளுடன் ‘செல்வி, திருமதி ஆசியான் 2026’ அழகுராணிகள், தொண்டூழியர்கள். - படம்: ரவி சிங்காரம்

“அழகுராணிகள் மேடையைப் பயன்படுத்தி சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கவேண்டும் என்பதே என் குறிக்கோள்,” என்றார் அழகுராணிப் போட்டி ஏற்பாட்டாளரான ‘பிரெஸ்டிஜ் பேஜண்ட்ஸ் ராயல்’ நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான லாவண்யா பிரியா.

“தாதிமை இல்லவாசிகளுடன் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடியது மகிழ்வூட்டும் தருணமாக இருந்தது,” என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினரும் முருகன் இட்லிக் கடை இயக்குநருமான சண்மிதா மனோகரன்.

சிறுவர் தொண்டூழியரும் தாதிமை இல்லவாசியும்.
சிறுவர் தொண்டூழியரும் தாதிமை இல்லவாசியும். - படம்: ரவி சிங்காரம்
கும்மி நடனம் படைத்த ‘சிகே ரோக்கர்ஸாய்ட்ஸ்’ (CK Rokerzoids) நடனக் குழு.
கும்மி நடனம் படைத்த ‘சிகே ரோக்கர்ஸாய்ட்ஸ்’ (CK Rokerzoids) நடனக் குழு. - படம்: ரவி சிங்காரம்
பார்வையற்றோர், சிறப்புத் தேவைகள் உடையோர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் கண்ணைக் கட்டியவாறு நடனமாடிய அஷின் அலெக்சியா.
பார்வையற்றோர், சிறப்புத் தேவைகள் உடையோர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் கண்ணைக் கட்டியவாறு நடனமாடிய அஷின் அலெக்சியா. - படம்: ரவி சிங்காரம்
‘செல்வி, திருமதி ஆசியான் 2026’ அழகுராணிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற அழகுராணிகள் தொண்டூழியம் புரிந்தனர்.
‘செல்வி, திருமதி ஆசியான் 2026’ அழகுராணிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற அழகுராணிகள் தொண்டூழியம் புரிந்தனர். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்