தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில், தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.
கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் அந்த விழா, பிப்ரவரி 28ஆம் தேதி (சனிக்கிழமை), சுவோன் (Suwon) நகரில் உள்ள எஸ்கேகேயூ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கடும் குளிருக்கிடையில் நடைபெற்ற விழாவில் தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர். பெண்கள், குத்துவிளக்கு ஏற்றிய பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தென்கொரியாவின் இந்தியத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சுரேஷ்குமார், பேராசிரியர் செந்தில் குமார், பேராசிரியர் சுப்பிரமணிய அங்கையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். தூதரக அதிகாரி சுரேஷ்குமார் கொரியவாழ் தமிழ் உறவுகளுக்கு தனது பொங்கல் வாழ்த்தையும், செய்தியையும் வழங்கினார். மேலும், அவர் “நான் முதல்வன்” திட்ட மாணாக்கரை வழிநடத்தியவர்களுக்கும், “கற்க கசடற” இணையவழிக் கல்வி ஆசிரியருக்கான பட்டயப் படிப்பில் தகுதி பெற்றவர்களுக்கும் தமிழக அரசின் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில், அண்மையில் மறைந்த தோழர் ஐயா நல்லகண்ணுவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் முனைவர் முத்துச்சாமி கடந்த ஆண்டில் சங்கத்தின் செயல்பாடுகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விளக்கிக் கூறினார். பின்னர், சங்கத்தின் தலைவர் முனைவர் அரவிந்தராஜா சங்கத்தின் எதிர்கால ஆளுமைக் குழு உறுப்பினர்களை முறையாக அறிமுகப்படுத்தினார். இவ்வாண்டிற்கான நாள்காட்டி அறிமுகப்படுத்துதலும் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா, கொரிய தமிழரசி ‘ஹோ ஹூவாங் ஒக்’கின் வரலாற்றுத் தடயம் பற்றிய விளக்கக்காட்சி உரையை எளிய நடையில் ஆற்றினார்.
உணவு இடைவேளையின்போது திருமதி வைஷ்ணவி, திரு விவேகானந்தன், திருமதி சுமதி நரசிம்மன் ஆகியோரின் ‘விருக்ஷம்’ உணவுக் குழுவினரால் சமைக்கப்பட்ட அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. பிற்பகலில் மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பமானதும், நிலையான மகிழ்ச்சி என்பது விரும்புவதைப் பெறுவதிலா? பெறுவதை விரும்புவதிலா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. முனைவர். இராஜாராம் இராஜமோகன் நடுவராகவும், செல்வி ஸ்ரீரெங்கநாயகி, முனைவர் பூங்கவிதை, திரு விபின் ஜியோ ஆகியோர் முதல் அணியிலும், திருமதி ஜெனட், முனைவர் குணசேகரன், முனைவர் கற்பகம் வீரப்பன் ஆகியோர் எதிர் அணியிலும் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். பட்டிமன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் செலஸ்டின் ராஜா பொறுப்பேற்றார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களை மகிழ்விக்கும் விதமாக காலை முதல் மாலை வரை ஆடலும் பாடலும் பல்வேறு குழும விளையாட்டுப் போட்டிகளும் குலுக்கல் முறையில் தேர்வுப் பரிசுகளும் நிகழ்ச்சிகளின் நடுவே இடம்பெற்றன. “கற்க கசடற” இணையவழி வாயிலாகத் தமிழ் பயின்றோரின் மழலைத் தமிழ்ப் பேச்சுகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியைச் சங்கத்தின் ஆளுமைக்குழு உறுப்பினர்கள் முன்னின்று நடத்தினர்.
முன்னதாக, சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இப்பொங்கல் நிகழ்ச்சிற்கு தமிழ் ஆளுமைகள் அழைப்பிதழ்பேரில் வாழ்த்துச் செய்தியினை அனுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
அயல்நாட்டிலும் தொடரும் அடையாளம்
தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய கொரிய மண்ணில், தங்களின் வேர்களை மறக்காமல் அடுத்த தலைமுறைக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுசேர்க்கும் நோக்கத்துடன் இந்த விழாவைக் கொரிய தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
கடல் கடந்து வாழ்ந்தாலும் மொழிப்பற்றும் பண்பாட்டுப் பற்றும் தமிழர்களின் குருதியிலேயே ஊறியுள்ளதை இந்த விழா மெய்ப்பித்ததாகவும் அவர்கள் கூறினர்.

