தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘குவா ஷா’

2 mins read
4d00f547-caf7-4bb6-a2fb-b43e36a7a5e3
சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலுள்ள ‘குவா ஷா’, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது. - கோப்புப்படம்: இபியோன் ஏஸ்தேடிக்ஸ்
multi-img1 of 2

‘குவா ஷா’ (Gua Sha) என்பது பழங்கால கிழக்காசிய மருத்துவ சிகிச்சை முறையாகும். தோல் பராமரிப்புக்கு நுட்பமான முறையில் பயன்படுத்தப்படும் குவா ஷா இன்று உலகளவில் பிரபலமடைந்து வருகிறது.

சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலுள்ள குவா ஷா, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.

தோலில் எண்ணெய்யைத் தடவியவுடன் தொடர்ந்து கழுத்து, முதுகு, முகம் போன்ற பகுதிகளில், ஜேட், ரோஸ் குவார்ட்ஸ் போன்ற கற்களைக் கொண்டு மென்மையான முனைகளுடன் வடிவமைக்‌கப்பட்ட கருவி ஒன்று உறுதியாகவும் மெதுவாகவும் தோலைச் சுரண்டித் தடவப் பயன்படுத்தப்படும்.

பயிற்சி பெற்ற நிபுணர் அழுத்தத்தை உடலில் பயன்படுத்தும்போது, தோலின்கீழ் தற்காலிக சிவப்பு பிளவுகள் ஏற்படும். இவை தோலின் நுண்குழாய்கள் உடைவதால் ஏற்படுகின்றன. இதன்வழி தோல் மேலும் ஆரோக்‌கியம் அடைந்து, இளமையான தோற்றத்தைப் பெறும் என்று மருத்துவ ஆராய்ச்சி காட்டுகிறது.

பாரம்பரியமாக நாள்பட்ட வலிக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்ட குவா ஷா, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ‘முக மசாஜ்’ நடைமுறைகளுக்‌கும் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

முகத்தில் குவா ஷாவை மென்மையாகப் பயன்படுத்தும் பழக்‌கத்தை ஒருவர் வீட்டில் சொந்தமாகவே செய்யலாம்.

நிணநீர் மண்டலங்களின் வடிகாலை (drainage of lymph nodes) ஊக்குவித்தல், தசை இறுக்‌கத்தைக்‌ குறைத்தல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், குறிப்பாக கண்களின்கீழ் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளை இந்தப் பழக்‌கத்தைத் தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் உணரலாம்.

மேலும், இது நோயெதிர்ப்பு மண்டலங்களையும் நரம்பு மண்டலங்களையும் செயல்படுத்தி, நச்சுகளைக் குறைத்து, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

வழக்‌கமாக முகத்திற்குச் செய்து வந்தால் முகச்சுருக்கம், வயதான தோற்றம், முகத்திலிருக்கும் இறந்த உயிரணுக்கள் போன்றவற்றை நீக்கி முகத்தைப் பொலிவாக வைத்திருக்கலாம்.

முதன்முறையாக குவா ஷாவைப் பயன்படுத்தும் ஒருவர், கழுத்தில் தொடங்கி நெற்றியை நோக்கி, முகத்தின் இயற்கையான வடிவத்தை மேல்நோக்கியவாறு தடவ வேண்டும். குவா ஷா கருவியைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதைக் குளிர்பதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்தினால் கூடுதல் குளிர்ச்சியான உணர்வை அனுபவிக்‌கலாம்.

குவா ஷா தமது வாழ்க்கையில் ஓர் அன்றாடப் பழக்கமாகிவிட்டதாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தி வரும் அ. அம்ரிதா, 20, சொன்னார்.

“சில நேரங்களில், மன அழுத்தத்தைக் குறைக்கவும் இதைப் பயன்படுத்துவேன். இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நீண்டநேரம் படித்துவிட்டு வீடு திரும்பும்போது எனக்கு மன அமைதியையும் வழங்குகிறது,” என்றார் அவர்.

பொதுவாக, இந்தப் பழக்‌கம் ஆபத்தானது இல்லை என்றாலும், குவா ஷா தற்காலிக சிராய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நீரிழிவு நோய், ரத்த ஓட்டப் பிரச்சினைகள், தோல் பிரச்சினைகள் அல்லது கருவுற்றிருந்தால் இதைத் தவிர்ப்பது நன்று.

நோய்த்தொற்றுகளைத் தடுக்‌க ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் கருவிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குவா ஷா நம் ஆரோக்கியத்திற்குப் பொருத்தமானது என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்