தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அர்ப்பணிப்பின் அடையாளம்: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ் பீட்டர்

2 mins read
602a7901-d788-42d7-bc2f-bdfc3323153f
மூத்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், படைப்பாளர், செய்தி தொகுப்பாளர் எஸ் பீட்டருக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். அவர்களுடன் மீடியாகார்ப் நிகழ்ச்சி நிர்வாகம், சமூகத் தொடர்புப் பிரிவின் தலைவர் சபநிதா சண்முகசுந்தரம். - படம்: மீடியாகார்ப்

முன்பு பல நாள்கள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, நள்ளிரவுதான் வீடு திரும்பியதை 57 ஆண்டுகளாக வானொலியில் முக்கியப் பங்காற்றிவரும் 77 வயது திரு எஸ் பீட்டர் நினைவுகூர்ந்தார்.

“குடும்பத்தோடு கூடுதல் நேரம் செலவிட முடியவில்லையே என்ற வேதனை என்றுமே என் மனதில் இருந்துள்ளது,” என்றார் அவர்.

பிப்ரவரி 15ஆம் தேதி, பிரதான விழா 2025ன் வாழ்நாள் சாதனையாளர் விருதை அவர் அதிபர் தர்மன் சண்முகரத்னமிடமிருந்து பெற்றபோது ஒரு நிமிடம் அவர் தொண்டைக்குழியில் வார்த்தைகள் சிக்கி வெளிவரவில்லை.

செய்தி வாசிக்கும்போது கணீரென ஒலிக்கும் திரு பீட்டரின் குரல், முதன்முதலில் தழுதழுத்ததைக் கேட்டு மீடியாகார்ப் அரங்கு கண்கலங்கியது. உடனே, கைத்தட்டல் ஓங்கி ஒலித்தது.

“என் மனைவி நான் வேலையிலிருந்து திரும்ப எனக்காகக் காத்திருப்பார்; என் பிள்ளைகளையும் என்னையும் பார்த்துக்கொண்டார். இவ்விருது முழுமையாக அவருக்கே சொந்தமானது. என் பிள்ளைகளும் புரிந்துணர்வோடு இருந்துள்ளனர்,” என்றார் திரு பீட்டர்.

57 ஆண்டுகளாக வானொலியில் பெரும்பங்காற்றியதற்காக, வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மூத்த வானொலி  நிகழ்ச்சி தயாரிப்பாளர், படைப்பாளர், செய்தி தொகுப்பாளர் எஸ் பீட்டர்.
57 ஆண்டுகளாக வானொலியில் பெரும்பங்காற்றியதற்காக, வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மூத்த வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர், படைப்பாளர், செய்தி தொகுப்பாளர் எஸ் பீட்டர். - படம்: மீடியாகார்ப்

தாம் நிறைய சவால்களை எதிர்கொண்டபோதும் என்றுமே வானொலியிலிருந்து நீங்க விரும்பியதில்லை என அவர் கூறினார்.

“என் வேலை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது,” என்றார் அவர்.

நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்ற (அதன்மூலம் வழக்கறிஞர் ஆக) விரும்பிய திரு பீட்டருக்கு அவ்வாய்ப்புக் கிடைக்கவில்லை. எட்டு மாதங்கள் ஆசிரியராகப் பணியாற்றியபின் வானொலியில் வாய்ப்புக் கிடைத்தது.

1968ஆம் ஆண்டில் தமது 20 வயதில் வானொலியின் தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகச் சேர்ந்த திரு பீட்டர், திரு செ.ப.பன்னீர்செல்வம், திரு ரெ.சோமசுந்தரம் ஆகியோருடன் இணைந்து ‘தமிழில் பேசுவோம்’ வானொலி நிகழ்ச்சியைத் தொடங்கினார். விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளையும் அவர் பற்றுடன் படைத்தார்.

1998ல் வானொலியின் செய்திப் பிரிவுக்கு மாறியதும் அவர் பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் 2011ல் ஓய்வுபெற்றபோதும் இன்றுவரை ‘ஒலி’யில் பகுதிநேர செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

நான் ஆங்கிலத்தை முதல் மொழியாகவும் தமிழை இரண்டாம் மொழியாகவும் படித்தேன். அதனால் தொடக்கத்தில் நான் பேசுவது ஆங்கிலேயர் பேசும் தமிழ் போல் இருக்கும். நான் பேசியதை ஒலிப்பதிவு செய்து அதைத் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை நானே திருத்திக்கொண்டேன்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ் பீட்டர்

“நான் ஆங்கிலத்தை முதல் மொழியாகவும் தமிழை இரண்டாம் மொழியாகவும் படித்தேன். அதனால் தொடக்கத்தில் நான் பேசுவது ஆங்கிலேயர் பேசும் தமிழ் போல் இருக்கும். நான் பேசியதை ஒலிப்பதிவு செய்து அதைத் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை நானே திருத்திக்கொண்டேன்,” என்றார் திரு பீட்டர்.

ஊடகத்துறையினரின் வியர்வை, கண்ணீர், தியாகங்களை திரு பீட்டரின் வாழ்க்கைக் கதை பறைசாற்றி நிற்கிறது.

குறிப்புச் சொற்கள்