கலைத்தாய்க்குத் தங்களை அர்ப்பணித்த ஊடகத்துறையினரைக் கெளரவிக்கும் வகையில் பிப்ரவரி 15ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு மீடியாகார்ப் அரங்கத்தில் 20 விருதுகள் வழங்கப்பட்டன.
தந்தைபோல் கலைத்துறையில் சாதிக்கும் மகன்
சிங்கப்பூர்க் கலைத்துறையின் முன்னோடி ரெ.சோமசுந்தரம் போல் பல திறன் கொண்டவர் அவருடைய மகன் கார்த்திகேயன் சோமசுந்தரம், 40. விழாவில், ‘என்றென்றும் பிரபலமான நட்சத்திரம்’ விருதை அவர் வென்றார்.
“ஊடகத்துறைக்கு நான் வருவதற்கு மிகப் பெரிய காரணம் என் தந்தை. அவர் ‘சிறந்த நடிகர்’ விருதை வென்றபோது நானும் அதை வெல்லவேண்டும் என லட்சியம் கொண்டேன். நான் ‘சிறந்த நடிகர்’ விருதை வென்ற அந்த ஆண்டு அவர் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வென்றார். ‘எனக்குப் பிறகு நான் ஒரு வாரிசை வளர்த்துள்ளேன்’ என என் தந்தைக் கூறினார்,” என்று நினைவுகூர்ந்தார் கார்த்திகேயன்.
கலைப்பயணத்திற்கு வித்திட்ட டிக்டாக்
‘சிறந்த நாடகத் தொடர்’ விருதை வென்ற ‘ஓ பட்டர்ஃப்ளை’யில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த கைஸ்வர்யா, 23, ‘சிறந்த நம்பிக்கை நட்சத்திரம்’ விருதை வென்றார்.
அவர் தமது பரதநாட்டியப் படைப்புகளை ‘டிக்டாக்’கில் பதிவுசெய்து பிரபலமடைந்தார். 2022ல் இந்நாடகத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது.
“சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் உங்களுக்கான மேடை உங்களைத் தேடிவரும்,” என்றார் கைஸ்வர்யா.
சமூகத்தில் தாக்கம்
ஊடகத்துறையால் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ‘ஒலி’யின் ‘நீயே ஒளி’ நிகழ்ச்சி ஒரு சிறந்த சான்று. ‘சிறந்த வானொலி நிகழ்ச்சி’ விருதை அது வென்றது.
“மாற்றுத்திறனாளிகள் எப்பொழுதும் அதிகமாகத் தன்னம்பிக்கை உடையவர்கள். இவ்விருது கிடைப்பதற்கு முக்கியக் காரணம் அந்நிகழ்ச்சியில் பேட்டிகாணப்பட்ட நிஷாதான். அவருக்கு நரம்புசார்ந்த பிரச்சினை இருந்தாலும் அவர் ஓர் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் சாதித்துவருகிறார்,” என்றார் ‘நீயே ஒளி’ குழுவின் சார்பில் விருதைப் பெற்ற அப்துல் காதர், 37.
தொடர்புடைய செய்திகள்
சமூகத்தில் முன்னாள் குற்றவாளிகள் எதிர்நோக்கும் சோதனைகளைத் தத்ரூபமாகக் காண்பித்ததற்காக ‘விலங்கு’ நாடகத் தொடரின் ராஜேஷ்கண்ணன், 54, ‘சிறந்த நடிகர்’ விருதை வென்றார்.
சிறந்த படைப்பாளர் (கதம்ப நிகழ்ச்சி) விருதை வென்ற சரவணன் அய்யாவுக்கு, இது எட்டாவது படைப்பாளர் விருது. இசையில், சிறந்த பாடகர் விருதை விஷ்ணு பாலாஜியும், சிறந்த பாடல் உருவாக்கத்திற்கான விருதை ஸ்டீஃபன் சகரியாவும் வென்றனர்.
மக்களின் வாக்களிப்புமூலம் மிகப் பிரபலமான நட்சத்திர விருதுகளை ராகதீபன், ஈஸ்வரி குணசேகரன் வென்றனர்.
விருதை வழங்கிய சிம்ரன்
நடிகை சிம்ரன் பிரதான விழா 2025க்காக சிங்கப்பூருக்கு வருகை தந்திருந்தார். அவர் ‘சிறந்த நடிகை’ விருதை நித்தியா ராவ்க்கு வழங்கினார். ‘சிறந்த நடிகர்’ விருதை ராஜேஷ் கண்ணன் சார்பாக அவரின் 21 வயது மகன் அறின் ஜெய் கண்ணன் சிம்ரனிடமிருந்து பெற்றுக்கொண்டார். சிறந்த நாடகத் தொடராக ‘ஓ பட்டர்ஃபிளை’ தேர்ந்தெடுக்கப்பட்டது.
“பிரதான விழாவை நான் விரும்பிப் பார்த்தேன். படைப்பாளர்கள் நகைச்சுவை அங்கங்களை சிறப்பாகப் படைத்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை,” எனப் பாராட்டினார் சிம்ரன்.
“விருதுகளைப் பெற்றவர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த விதம் எனக்கு சிங்கப்பூரில் பிடித்தமான ஒன்று,” என அவர் ‘வடை போச்சே’ வலையொளிக் குழுவினரிடமும் கூறினார்.
பிரதான விழா 2025ஐ மீண்டும் meWATCH தளத்தில் பார்க்கலாம்.