கடற்படைப் பணி தொடர்பான பயிற்சி வகுப்புக்காக வெளிநாடு சென்றிருந்த நரசிம்மன் திவாசிகமணி, சிறந்த மாணவராகத் தேர்ச்சி அடைந்த நிலையில் மேடைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
நிகழ்ச்சி நெறியாளர், “சிங்கப்பூர், சிங்கப்பூர்,” எனச் சொல்லி தன்னை அழைத்த தருணம் இன்றும் பெருமையடையச் செய்வதாகத் திரு நரசிம்மன், 40, கூறுகிறார்.
“சிங்கப்பூரில் ஆயிரத்திற்கு அதிகமான சமூக சேவை அமைப்புகள் உள்ளன. ஒரு சிறிய நாட்டில் இத்தனை அமைப்புகள் இளையர்கள், மூத்தவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் எனப் பலதரப்பினருக்கு உதவுவதைக் காணும்போது சிங்கப்பூரர் என்ற முறையில் பெருமையாக உள்ளது,” என்கிறார் இவர்.
இப்போது இவர், பிரச்சினைகளை எதிர்கொள்:ளும் சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் கவனம் செலுத்துகிறார்.
சிறைக்கு அல்லது சிறார் இல்லத்திற்குச் சென்று அங்கிருந்து வெளியேறும் சிறார்களுக்கான பராமரிப்பை இவர் நிறுவிய ‘இம்பாரட்’ அமைப்பு வழங்குகிறது.
இளையர்களுக்கு உதவும் போக்கு நரசிம்மனுக்குத் தனது 19ஆம் வயதில் சிறுவர் படையை வழிநடத்தியபோது தொடங்கியது. அதன் பிறகு இவர், ராணுவ மருத்துவ நிபுணராகக் கடற்படையில் சேர்ந்தார்.
“வாரயிறுதிகளில் சிறுவர் படையில் தொண்டு செய்ய நேரம் செலவழித்தேன்,” என்று இவர் குறிப்பிட்டார். பின்னர் இவர், தமது 28வது வயதில் கடற்படையைவிட்டு விலகி, பல்வேறு மருத்துவப் பயணங்களை மேற்கொண்டார். அங்கும் இவருக்கு இளையர்களுக்கு உதவும் வாய்ப்பு கிட்டியது.
தொண்டு செய்வதில் தனக்குள்ள ஆர்வத்தை உணர்ந்த நரசிம்மன், சிங்கப்பூர் சிறார் இல்லத்தில் முதலில் தொண்டூழியராகச் சேர்ந்து, பின்னர் அங்கு முழுநேர வேலையை ஏற்றார்.
“சிறார் இல்லத்தில் நன்கு ஆதரிக்கப்படும் சிறுவர்கள் அங்கிருந்து வெளியேறும்போது அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு குறைவதை மூன்று ஆண்டுகளாக அங்குப் பணியாற்றுவதால் காணமுடிகிறது,” என்று இவர் கூறுகிறார்.
சிறார் இல்லத்திலிருந்து வெளியேறுபவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும்போது அவர்களது தொலைபேசி அழைப்புகளை ஏற்று அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நரசிம்மன் முனைவார்.
‘இம்பாரட்’ கைகொடுத்து உதவிய அத்தகைய மாணவர்களில் ஒருவர், வேலைப் பயிற்சிக்காக வந்து பின் முழுநேர ஊழியராகச் சேர்ந்ததை நரசிம்மன் பெருமையாகக் கருதுகிறார்.
“சிங்கப்பூரில் அயராது பாடுபடும் சமூக அமைப்பினர் களைத்துப் போகும் இந்தக் காலகட்டத்தில் நாங்கள் உதவக் கடமைப்பட்டுள்ளோம். சிங்கப்பூரில் இளையர்களைப் பேணும் சூழலை வலுப்படுத்தும் சமூக சேவையாளர்களின் பணி, நாட்டை வலுப்படுத்துகிறது,” என்று இவர் கூறுகிறார்.
தடை வந்தாலும் தளராத உறுதி
துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த திருவாட்டி கவிதாவுக்கு 21 வயதில் முதுகெலும்பில் ஏற்பட்ட முறிவு, பேரிடியாய் விழுந்தது.
முறிவடைந்த முதுகெலும்பு வட்டு வெளியே நீட்டிக்கொண்டு இவரது நரம்புகளை அழுத்திக் கடும் வலியைத் தந்தது.
“என்னால் இனி விளையாடவோ நடனம் ஆடவோ முடியாது என மருத்துவர்கள் கூறியது, என் நெஞ்சைப் பிழிந்தது,” என்கிறார் இவர்.
ஆயினும், வாழ்நாள் முழுவதும் முடங்கிவிடக்கூடாது என்பதில் திருவாட்டி கவிதா உறுதியாக இருந்தார். எட்டு மாத மறுவாழ்வுப் பயிற்சிக்குப் பிறகு இவர் மீண்டும் நடனமாடத் தொடங்கினார்.
உடற்குறையுள்ளோர், கற்றல் குறைபாடு உள்ளோர் என நடனமாட சிரமப்படுவோரை இவர் நடன வகுப்புகளில் சேர்த்துள்ளார். அவர்களில் பலர் மேடையேறவும் இவர் உதவியுள்ளார். ‘மாயா நடன அரங்கு’ என்ற தம் நிறுவனத்துடன் ‘டைவர்ஸ் எபிலிடிஸ் டான்ஸ் கலெக்டிவ்’ என்ற அமைப்பையும் திருவாட்டி கவிதா இணையாக நிறுவினார்.
“உடற்குறையுள்ளோர், மூத்தோர், வெளிநாட்டினர் உள்ளிட்ட எல்லாவித மக்களையும் அரவணைக்கும் நம் தாய்நாடாம் சிங்கப்பூரின் வழிமுறையே என் வழிமுறையுமாகும்,” என்று இவர் கூறுகிறார்.
மூன்று வயதிலிருந்து பரதநாட்டியம் கற்றுவந்த தனக்கு ஆர்வத்தைப் புகட்டியது தம் தாயார் என்கிறார் திருவாட்டி கவிதா. இருந்தபோதும், ஏட்டுக்கல்விக்குத் தாயார் கொடுத்த ஊக்கத்தால் இவர், உடற்குறையுள்ளோருக்கான சிகிச்சை நிபுணராகத் தகுதிபெற்றார்.
“அத்துடன் மனநலக் கல்வியையும் முக்கியமாகப் படித்துள்ளேன்,” என்கிறார் இவர்.
“பல நாடுகளில் நானும் என் அமைப்பைச் சார்ந்து மேடையேறும் மாற்றுத்திறனாளர்களும் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளை சிங்கப்பூர் வருங்காலத்தில் மேலும் ஆதரிக்கும் என நம்புகிறேன்,” என்று திருவாட்டி கவிதா கூறுகிறார்.
