தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீரிழிவைச் சமாளித்ததால் நிறைவான வாழ்க்கை

3 mins read
65f6176e-ea13-4e06-97b5-2e8eb42ba924
கிம் கியட் ரோட்டிலுள்ள தேசிய சிறுநீரக அறக்கட்டளை நிலையத்தில் உள்ள கஃபேயில் காப்பி பரிமாறும் மாலதி நாகரத்தினம். - படம்: த.கவி

நீரிழிவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களையும் இழந்த தம் தாயாரின் உயிர் 2006ல் பிரிந்தபோது மகள் மாலதி நாகரத்தினம் பெருந்துயர் அடைந்தார். நீரிழிவைச் சமாளிக்காவிட்டால், பின்விளைவுகள் எப்படிப்பட்டவை என்பதை தாயாரின் மரணம் உணர்த்தியது.

திருவாட்டி மாலதி பிறந்ததிலிருந்து முதல் வகை நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளார். தம் தாயாருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினையால் இவர் கட்டுப்பாட்டுடன் இருக்கக் கற்றுக்கொண்டார்.

நோயைச் சமாளித்து வந்ததால் சிங்கப்பூரின் ஊக்கமூட்டும் நோயாளி, இவருக்கு மே 29ஆம் தேதி சுகாதாரப் பராமரிப்பாளர் விருது அளிக்கப்பட்டது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் புதன்கிழமை (மே 29) நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் இவருடன் சேர்த்து 56 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோதுதான் நீரிழிவு இருப்பது பற்றி இவருக்கு தெரிய[Ϟ]வந்தது.

“ஒரு நாள் நான் பள்ளியில் மயங்கி விழுந்தேன். அதன் பின் மருத்துவமனையில் என்னைச் சேர்த்தபோது எனக்கு நீரிழிவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்,” என்று திருவாட்டி மாலதி, 39, கூறினார்.

சிறு வயது என்பதாலும் நீரிழிவு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் தாம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார் இவர்.

“ஐஸ் கிரீமுக்குப் பதிலாக பாலை குளிர்ப்பதனப் பெட்டியில் உறைய வைத்துச் சாப்பிடுவேன். நண்பர்களை வெளியில் சந்திக்கும்போது சர்க்கரை குறைவாக உள்ள பதார்த்தங்களை வெளியில் கொண்டுவந்து சாப்பிடுவேன்,” என்று அவர் கூறினார்.

நீரிழிவால் தடம்புரண்ட கல்விப் பயணம்

பகுதி நேரமாக காப்பி தயாரிக்கும் பணியில் திருவாட்டி மாலதி நாகரத்தினம்.
பகுதி நேரமாக காப்பி தயாரிக்கும் பணியில் திருவாட்டி மாலதி நாகரத்தினம். - படம்: த.கவி

உணவுப் பிரியராக இருந்து அதிக அளவில் கொழுப்பு, இனிப்பு உணவுகளைச் சாப்பிட்ட திருவாட்டி மாலதி, உடற்பயிற்சியை முற்றிலும் தவிர்த்தார். நீரிழிவால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தாயாரின் முட்டிக்குக் கீழுள்ள கால் பகுதி அகற்றப்பட்ட பிறகு திருவாட்டி மாலதி, தாயாருக்குப் பணிவிடை செய்வதில் இவரது மனப்போக்கு மாறியது.

“குடும்ப வருமானச் சூழல் காரணமாக, எங்களால் அந்நேரத்தில் பணிப்பெண்ணை அமர்த்த இயலவில்லை. எனக்கு 16 வயதாக இருந்தபோது ஆறு மாதத்திற்கு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டுத் தாயாரை முழுநேரம் கவனித்துக்கொண்டேன்,” என்று இவர் கூறினார்.

தினமும் தாயாரைக் குளிக்க வைப்பது, உணவு ஊட்டுவது போன்ற வேலைகளை மாலதி செய்துவந்தார்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) இதனைக் கேள்விப்பட்டு தம் குடும்பத்தை அணுகி பேசிய பின்னரே பள்ளிக்குத் திரும்பி சாதாரண நிலைத் தேர்வை மாலதி முடித்தார். ‘எச்எம்ஐ’ சுகாதாரப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்த இவர், சுகாதாரப் பராமரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார்.

பின்னடைவும் எதிர்நீச்சலும்

தாயாரின் மரணத்திற்குப் பின், மேலும் இரண்டு பேரிடிகள் மாலதி மீது விழுந்தன. காலில் முறிவு ஏற்பட்டு இவரது காலின் பெருவிரல் கிருமித்தொற்றுக்கு உள்ளாகி அகற்றப்பட வேண்டி இருந்தது. “இதன் பிறகும் வாழ முடியுமா என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்,” என்று இவர் கூறினார்.

மாலதியின் 37வது வயதில் ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு, இவருக்கு ஏற்பட்ட மற்றோர் அடி. பள்ளிப் பருவத்தில் தாதியராக வேண்டும் என்ற கனவு கலைந்துபோக, அடுத்து விருப்பமான சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர் பணியும் கைநழுவியது.

வாரத்திற்கு மூன்று முறை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கு இவர் சென்றார். வலியைத் தாங்கிக்கொண்டு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குப் பிறகு களைத்துப் போனார்.

தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் ‘காக்கி கார்னர்’ திட்டத்தில் ‘பாரிஸ்டா’ எனப்படும் காப்பி தயாரித்து பரிமாறும் ஊழியராக இவர் பயிற்சிபெற்றார்.

“சில மாதங்களுக்கு வேலைப் பயிற்சியில் ஈடுபட்டு என்னை தக்கவைத்துக்கொள்ள முதலாளி முடிவு செய்தார். இப்போது நான் அங்கு வாரத்திற்கு மூன்று நாள்கள் வேலை செய்கிறேன்,” என்று இவர் கூறினார்.

மற்ற நாள்களில் வீட்டிலிருந்து பலகார வியாபாரத்தை நடத்தி வருகிறார், நம்பிக்கையுடன் மிளிரும் திருவாட்டி மாலதி.

தம் கணவர், குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவர்கள், தாதியர் எனப் பலரும் காட்டும் அன்பு வலுவூட்டுவதாக மாலதி கூறினார்.

“என்னைப் போன்ற நோய் உள்ளவர்கள், மனதைத் தளர விடாதீர்கள். நம்பிக்கையுடன் வாழுங்கள். என்னைப்போல நீங்களும் விருதுகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறலாம். உடற்பயிற்சி செய்யுங்கள், மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள்,” என்று மாலதி அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்