பெண்கள் பலருக்கும் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுவது வழக்கம்.
குறிப்பாக இளம் பெண்களுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இத்தொற்று அடிக்கடி ஏற்படுகிறது.
இத்தகைய தொற்றைச் சிலர் ஒருவித களங்கமாகவும் பார்க்கின்றனர்.
போதிய விழிப்புணர்வின்மை இதற்கு காரணம்.
ஈ.கொலி (E.coli) போன்ற நுண்ணுயிரிகள், சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்து சிறுநீர்ப்பையில் பெருகத் தொடங்கும்போது சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும்.
அதற்கான சிகிச்சை மேற்கொள்ளாமல் விடும்போது தொற்று சிறுநீரகங்களுக்குப் பரவி மோசமான விளைவுகளை உண்டாக்கும். அதிக காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு, முதுகு வலி போன்றவை ஏற்படும்.
உலக அளவில் சாதாரணமாக ஏற்படும் தொற்றுகளில் சிறுநீர்ப் பாதை தொற்றும் ஒன்று.
சிங்கப்பூர்ப் பெண்களில் இருவரில் ஒருவருக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான தூண்டுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடர்த்தியான நிறமும் கடுமையான துர்நாற்றமும் கொண்ட சிறுநீர், இடுப்பு வலி போன்றவை இந்நோய்க்கான சில அறிகுறிகள்.
சில நேரங்களில் சிறுநீரில் ரத்தம் கூட தென்படலாம். மருத்துவர்களைப் பொறுத்தவரை பல வாழ்வியல் காரணிகள் இத்தொற்றுக்கு காரணம் என்பர்.
போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, நீண்டநேரம் சிறுநீரை அடக்கி வைத்துக்கொள்வது, மோசமான சுகாதார நடைமுறைகள், உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற சரியான பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும்.
இந்தத் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள சில எளிய முறைகளைப் பெண்கள் பின்பற்றலாம்.
முதலில், அன்றாடம் 1.5லிருந்து 2 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது.
திருமணமான பெண்களுக்கான சுகாதாரப் பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது, காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை அணிவது, இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது போன்றவற்றையும் பெண்கள் பின்பற்றலாம்.