சுத்தத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உளவியல்

2 mins read
25a0a066-d93d-4c05-af0c-52c5e6188157
வீட்டில் இருக்கும் பொருள்களை அழகாக ஒழுங்குபடுத்தும்போது ஆக்ககரமான உணர்வுகள் எழலாம். - படம்: இணையம்

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதால் மனநலம் மேம்படும் என்று அறிவியல் ஆய்வு நிரூபித்துள்ளது.

முறைப்படி பராமரிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்த பெண்களை ஒப்பிடுகையில், இரைச்சல் நிறைந்த இடமாக தங்கள் வீடுகளை வைத்திருக்கும் பெண்கள் அதிக மன அழுத்தத்தோடு இருந்தனர் என்று ஆளுமை, சமூக உளவியல் ஆய்விதழ் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களிடத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ‘கார்டிசோல்’ என்ற சுரப்பி அதிக அளவில் இருப்பதோடு, அவர்கள் மனச்சோர்வோடும் களைப்போடும் காணப்பட்டனர்.

அதிகரிக்கும் மன அழுத்தம்

அனைத்துப் பொருள்களும் ஒழுங்குபடுத்தப்படாமல் சிதறிக் கிடக்கும்போது, முடிக்கப்பட வேண்டிய வேலைகள் இருக்கின்றன என்ற எண்ணம் தொடர்ந்து மனித மனத்தை உறுத்தும்.

இதனால் பார்த்தல், கேட்டல், தொடுதல் தொடர்புடைய புலன்கள் அதிக அளவில் தூண்டப்பட்டு, உடல் தளர்வடைவதற்கும் மனம் ஓய்வெடுக்கும் வாய்ப்பு குறைகிறது.

வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்ற எண்ணம், மனத்தில் குற்றவுணர்வையும் தூண்டுகிறது.

குழப்பம் நிறைந்த இயலாமை

சுற்றுப்புறம் குளறுபடியாக இருக்கும்போது கவனம் செலுத்துவதும் மனத்தை ஒருநிலைப்படுத்துவதும் கடினமாகிறது.

ஒரு குறிப்பிட்ட பணியுடன் தொடர்பில்லாத பொருள்களை அதிகமாகக் காணும்போது, சிந்தனை, நினைவு, மொழி ஆகிய உணர்வுகளுக்குப் பொறுப்பான மூளையின் வெளிப்புறப் பகுதி குழப்பமடைகிறது.

இதனால் பதற்றம், எரிச்சல், போன்ற எதிர்மறையான உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன.

தூய்மையின் நன்மைகள்

ஒழுங்குபடுத்தப்பட்ட சுத்தமான இடத்தில் இருக்கும்போது, சுற்றுப்புறத்தின்மீது தனக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது என்ற எண்ணம் மனிதர்களுக்கு எழுகிறது.

அவ்வாறு ஆற்றல் நிறைந்த ஒருவராகத் தன்னை உணரும்போது குழப்பத்தையும் எரிச்சலையும் விட்டெறிந்து, ஆக்ககரமான உணர்வுகளை மனிதர்கள் பெறுகின்றனர்.

இதனால், தங்கள் மனநலன் மேம்பட்டு மன அமைதியும் ஏற்படுகிறது.

அடிக்கடி இடத்தை ஒழுங்குபடுத்தி சுத்தம் செய்துவைப்பது, பணிகளை நிறைவேற்றி முடித்த உணர்வையும் தருகிறது.

“மூளையில் வெகுமதி செயல்முறை செயல்படுத்தப்பட்டு, ‘டோப்பமீன்’ போன்ற ஆக்ககரமான சுரப்பிகள் வெளியிடப்படுகின்றன,” என்று உரிமைபெற்றுள்ள மனநல ஆலோசகர் ஜெசிகா மில்லர் விவரித்தார்.

ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் செலவுசெய்து ஓர் அறையின் சிறுபகுதியைச் சுத்தம் செய்வதே சுற்றுப்புறத்தை ஒழுங்குபடுத்துவதற்கான எளிமையான முறை என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.

தேவையில்லாத பொருள்களை வீட்டிலிருந்து அகற்றும் அதே நேரத்தில், தரமான பொருள்களைத் தேவைப்படுவோருக்கு தானம் செய்வதையும் மக்கள் கருத்தில்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்