‘பாம்பே’ படத்திலிருந்து ‘கண்ணாளனே’, ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் ‘ஆத்தங்கர மரமே’, ஜென்டில்மேன் படத்தின் ‘சிக்கு புக்கு ரயிலே’ உள்ளிட்ட ஏ.ஆர்.ரகுமானின் பல திரைப்பாடல்களை நேரடியாகக் கேட்க சிங்கப்பூர் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி படைக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தங்களது சிறு வயதில் படத்தின் பாடல்கள் வெளிவந்தாலும், இப்போதும் தாங்கள் கொண்டாடும் 90களின் பாடல்களை அவரது குரலில் கேட்கும் ஆவல் இளையரிடம் மிகுந்துள்ளது.
மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ், அன்யூஷுவல் எண்டர்டெயின்மண்ட் நிறுவனங்களின் இணை ஏற்பாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 30,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அங்கு நேரடி இசை நிகழ்ச்சி படைக்கும் முதல் இந்திய இசைக் கலைஞர் எனும் பெருமையையும் இவர் பெறுகிறார்.
சிங்கப்பூரில் ரகுமானின் நான்காவது நேரடி இசை நிகழ்ச்சி இது. மாலை 6.30 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரம் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியில் அவருடன் ஏறத்தாழ 100 இசைக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். இசை நிகழ்ச்சியில் அவரது மகன் ஏ.ஆர். அமீன் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்நிகழ்ச்சிக்காக நீண்டகாலம் காத்திருந்தேன். நிகழ்வில் அவரது குரலில் நிறைய தமிழ்ப் பாடல்களைக் கேட்கவும் அவருடன் இணைந்து பாடவும் உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்,” என்றார் ஏ.ஆர்.ரகுமான் ரசிகையான நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி அபிராமி செல்வராஜ், 20.
“அண்மைய பாடல்களைவிட 90களிலும் 2,000 தொடக்கத்திலும் வந்த திரையிசைப் பாடல்களை அதிகம் பாடினால் நன்றாக இருக்கும். நானும் எனது தோழியும் இசைக்கருவி வாசிப்பவர்கள் என்பதால் ‘சோலோ இன்ஸ்ட்ருமென்ட்டல்’ பாணி படைப்புகளையும் நிகழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் வயலின் கலைஞரான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி விஷ்ணு வர்தினி, 20.

