எலிகளுக்கு கார் போன்று வடிவமைக்கப்பட்ட சிறிய வாகனங்களை ஓட்டுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பயிற்சியளித்து வருகின்றனர்.
அவ்வகையில், அமெரிக்காவின் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் இது குறித்து 2019ல் தொடங்கப்பட்ட ஆய்வு ஒன்றின் தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.
எலிகளும் மனிதர்களைப் போலவே புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவை என்பது தெரியவந்துள்ளது. மேலும், எலிகளும் நேர்மறையான எதிர்பார்ப்புகள், மகிழ்ச்சியான அனுபவங்கள் முதலியவற்றை விரும்புவதும் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்கள், விலங்குகளின் மூளைச் செயல்பாடு குறித்த புதிய பரிமாணங்களை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது.
வேக முடுக்கியைப்போல் (Accelerator) செயல்படும் சிறிய கம்பியைப் பிடித்துக்கொண்டு எலிகளால் காரை முன்னோக்கிச் செலுத்த முடியும் என்பதைக் கண்டறிந்ததாக நரம்பியல் வல்லுநரும் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் கெல்லி லாம்பெர்ட் கூறினார்.
“சிறிது நேரத்திலேயே முன்னே வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை நோக்கி அந்த எலிகள் காரை ஓட்டின,” என்றார் அவர்.
கூண்டுக்குள் தனியாக இருந்த எலிகளைவிட பொம்மைகளுடனும் மற்ற எலிகளுடனும் ஒரு சிறந்த சூழலில் வாழ்ந்துவந்த எலிகள், கார்களை வேகமாக ஓட்டக் கற்றுக்கொண்டதாகவும் தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல், எலிகள் கார்களை ஓட்ட அதிக உற்சாகத்துடன் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஓட்டுவதற்கான பயிற்சியைப் பெற்ற மூன்று எலிகளும் ஆர்வத்துடன் அடிக்கடி கூண்டின் ஒரு பக்கத்திற்கு ஓடி, மேலும் கீழும் குதித்ததை நாங்கள் கவனித்தோம்,” என்று டாக்டர் கெல்லி சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
வாகனம் ஓட்டுவதற்கு ஊக்கமளிக்கும் வெகுமதியுடன் வாகனம் ஓட்டுவதைத் தொடர்புபடுத்த எலிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும் வெகுமதியில்லாமல்கூட அவை தங்கள் கார்களை ஓட்ட விரும்பியது கண்டறியப்பட்டது.
பாவ்லோவின் கோட்பாட்டிற்கு (Pavlov’s theory) ஏற்ப, காரை ஓட்டினால் வெகுமதியாக உணவு வழங்கப்படும் என்பதை எலிகள் புரிந்துகொண்டதாலும் காரை ஓட்டும்போது அவை நேர்மறையான அனுபவங்களைப் பெற்றதாலும் அவை மீண்டும் அந்தச் செயலில் ஈடுபட ஊக்கமடைந்ததாக ஆய்வாளர்கள் முடிவுசெய்தனர்.
கார்களை ஓட்டுவதற்கு ஏற்றவாறு எலிகள் தகவமைத்துக் கொண்டதையும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு அவற்றின் மூளைகள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
“நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது மகிழ்ச்சியான அனுபவங்களை எதிர்பார்ப்பது, வாழ்க்கையின் பல வெகுமதிகளைத் தொடர்ந்து தேடுவது போன்றவற்றை மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் விரும்புகின்றன.
“எல்லாமே உடனடியாக நடக்க வேண்டும் என்று விரும்பும் இன்றைய காலகட்டத்தில், இந்த எலிகள் திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, மூளையை நலமாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த வழியாகும் என்பதை நமக்குக் காட்டுகின்றன,” என்றார் டாக்டர் கெல்லி.

