உறங்குமுன் நூல் வாசிப்பதன் பயன்கள்

2 mins read
544e7e2b-b17a-4315-bcd7-ec2ccab35c14
மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல ஒளி கண்களையும் உறக்கத்தையும் பாதிக்கும் என்பதால் உறங்குவதற்கு முன் நூல் வாசிப்பது நல்லது. - படம்: பிக்சாபே
multi-img1 of 2

நம் அனைவருக்கும் போதுமான தூக்கம் அவசியம். இருப்பினும், தூக்கமின்மை சிங்கப்பூரில் பொதுச் சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. தூக்கம் இல்லாத நகர்கள் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 17 விழுக்காட்டினர் மட்டுமே இரவில் போதுமான உறக்கம் பெறுகின்றனர் என்பது தெரியவந்தது. அதோடு, நால்வரில் ஒருவர் மட்டும் அன்றாடம் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்குகிறார் என்பது கண்டறியப்பட்டது. 

இரவில் ஆழ்ந்த தூக்கம் பெறுவதற்கான முக்கிய வழிகளில் ஒன்று, உறங்குவதற்கு முன் நூல் வாசிப்பது. 

மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து விடுபடுவது 

உறங்குவதற்கு முன் ஒன்றரை மணி நேரம் வரை கைப்பேசியைப் பயன்படுத்துவது, உடலில் மெலடோனின் (melatonin) ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் தூங்குவதற்குத் தாமதமாகலாம்.

மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல ஒளி கண்களையும் உறக்கத்தையும் பாதிக்கும் என்பதால் உறங்குவதற்கு முன் நூல் வாசிப்பது நல்லது. இதனால், உடல் இயற்கையாகவே பதற்றத்திலிருந்து விடுபடும். 

மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் 

நூல் வாசிப்பது மன அழுத்தத்தை 68 விழுக்காடு வரை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தேநீர் அருந்துவது, இசை கேட்பது போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்ற நடவடிக்கைகளைவிட, உறங்கும் முன் நூல் வாசிப்பது கூடுதல் பயன்தரும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

உறங்குவதற்கு முன் ஓய்வெடுக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் நலன், பொழுதுபோக்கு சார்ந்த அல்லது மனதிற்கு இதம்தரும் நூல்களை வாசிக்கலாம். 

தூக்கத்தின் தரம் மேம்படும்

உடலுழைப்பு தேவைப்படாமல், மூளைக்கு வேலை தரும் நடவடிக்கைகளில் நூல் வாசித்தலும் ஒன்று. உடலையும் மனதையும் தளர்த்தி உறங்கச் சென்றால், ஆழ்ந்த தூக்கம் பெறலாம். 

அறிவாற்றலில் நீண்டகால விளைவுகள்

நூல் வாசிப்பதால் மூளையின் ‘இணைப்பு’ அல்லது கதைகளைப் புரிந்துகொள்ளும் திறன் மேம்படுவதாக 2013ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. நூல் வாசிப்பது புதிய சிந்தனைக்கு வழிவிடுவதோடு, படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறது. 

நூல் வாசிப்பதற்கென பயிற்சி எதுவுமில்லை

முழுப் பலன் பெற இரவில் குறைந்தது 20 நிமிடங்களாவது நூல் வாசிக்க வேண்டும் என்பது வழக்கமான பரிந்துரை. உடலையும் மனதையும் தளர்த்த நூல் வாசித்தல் சிறந்த பழக்கம். இது ஓய்வெடுக்க குறுகிய நேரமாக இருப்பினும், 20 நிமிடங்களுக்குமேல் இதைச் செய்ய வேண்டியதில்லை.

உறங்கும் முன் நூல் வாசிப்பதற்கென பயிற்சி எதுவுமில்லை. படுக்கைக்கு அருகில் ஒரு நூலை மட்டும் வைத்திருந்தால் போதும்.

குறிப்புச் சொற்கள்